தாழப் பறந்தது பருந்து
பக்கத்துவீட்டின் அழகைப் புகழ்ந்து
புகைந்தேன்...
நண்பனின் புது புத்தகத்தில்
மைஒழுகும் என் பேனா எழுத்துக்கள்..
இரண்டே லட்டில் சின்னது
என் சிநேகிதனுக்கு...
யாரோ புனைந்த கவிதை
கேட்டு முடிக்குமுன்
என் பெயரில் பத்திரிக்கையில்...
விடை தெரிந்ததும் பிரசுரித்தேன்
கேள்வி கேட்டவன் எங்கோ
தொலைந்துபோனான்...
பத்து ருபாய் கையில்
ஒற்றை நாணயம் யாசகன் தட்டில்...
ஒன்றாய் வாழ்வோம்
ஒன்றாய் சாவோம்
காதலிலும் கணக்கு
நானே இல்லை, நீ இருப்பதா...
‘இனி எனக்கு யார் இருக்கிறார்’
நான் கதறினேன்
ஓ! அதுதான் உன் கவலையோ?
பிணம் சிரிக்கிறது...
வானில் இருந்தேன்
என் இரை தெரிந்தது
மாற்றான் இரையும் வேண்டுமாம்...
எங்கே பறப்பது?
போர் நடக்கிறது
எனக்கும், என் (சுய) நலனுக்கும்...
முடிவென்னவோ தெரிந்ததுதான்
தாழப் பறந்தது பருந்து...