சங்கொடுவா ராமாநு சம்
பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் எங்கள் ஊர் சோழவந்தானில் 1868 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பிறந்தார். அவ்வூர் தெற்கு ரதவீதியில் உள்ள சிதம்பர விநாயகர் கோயில் கல்மண் டபத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் அழகர்சாமி தேசிகர் என்ற ஆசிரியரிடம் எழுத்திலக்கணம், நிகண்டு, அந்தாதி ஆகியன கற்றுத் தேர்ந்தார்.
பின்னர் அவ்வூரிலுள்ள பேட்டை, கிண்ணிமங்கல மடத்திலிருந்த சிவப்பிரகாச சுவாமிகளிடம் சங்க நூல்கள், இலக்கண இலக்கியங்கள், தருக்கம், சோதிடம் ஆகியன கற்றுப் புலமை பெற்றார்.
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் 1890 முதல் 1901 வரை தமிழாசிரியராகப் பணி புரிந்தார். 1901 ல் தொடங்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில் 1902 முதல் 1906 வரை சண்முகனார் பேராசிரியராகப் பணி புரிந்தார்.
அப்பொழுது நடந்த விழா முடிவில் விருந்து நடந்தது. பந்தியில் அமர்ந்த புலவர்கள் உணவு பரிமாறும்பொழுது அங்கு கலகலப்பை உண்டாக்க விரும்பிய ஒரு புலவர் ‘ஆளுக்கொரு வெண்பா பாடலாமே‘ என்றார்.
அரசஞ்சண்முகனார் (செப்டம்பர் 15, 1868 - சனவரி 11, 1915) காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்கள் உ.வே.சா, மறைமலையடிகள், மு.இராகவை யங்கார், பண்டிதமணி கதிரேசச்செட்டியார், இரா.இராகவையங்கார், மு.ரா.அருணாசலக் கவிராயர், ச. சோமசுந்தர பாரதி (சூலை 27, 1879 - திசம்பர் 14, 1959) ஆகியோராவர்.
வெண்பாவிற்கான ஈற்றடியைத் தரும்படி சண்முகனாரை வேண்டினர். உணவு பரிமாறிக் கொண்டிருந்த ராமாநுச ஐயங்கார் பெயரை வைத்தே ’சங்கொடுவா ராமாநு சம்’ என்று ஈற்றடியைத் தந்து விட்டார்.
அவர் பரிமாறும் பொருளை வைத்து முதல் மூன்றடிகள் பாட வேண்டும். ஒருவர் ’ரசங் கொடுவா ராமாநு சம்’ என்றும், இன்னொருவர் ’அதிர சங்கொடுவா ராமாநு சம்’ என்றும், மற்றொருவர் ’பாயசங்கொடுவா ராமாநு சம்’ என்றும் பாடி விட்டனர்.
கடைசியாக சண்முகனாரின் முறை. பாடுவதற்கு உணவுப் பொருட்கள் ஒன்றுமில்லை. என்ன சொல்லிப் பாடப் போகிறார் என்று அனைவரும் வியந்து கொண்டிருக்கையில் முதல் மூன்றடி களைப் பாடி ’இன்னும்கொஞ் சங்கொடுவா ராமாநு சம்’ என்று பாடி முடித்தார். அதை கேட்ட புலவர்கள் அனைவரும் சண்முகனாரின் சாமர்த்தியத்தை கண்டு மகிழ்ந்தனர்.
அநேகமாக தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மேலே சொன்ன செய்தியை வாய்மொழியாகவும் சொல்லியிருக்கிறார்கள், புத்தகங்களிலும் எழுதியிருக்கிறார்கள்.
தமிழ் ஆர்வலரும், சண்முகாரின் புலமையின் மீது தீராத பற்று கொண்டவருமான என் தகப்பனார், 'கன்ட்ரோல்' C.கன்னியப்ப முதலியார், அவர் சம்பந்தமாக சோழவந்தான் கிண்ணிமடம் சார்பில் சுமார் 25 வருடங்களுக்கு முன் இரண்டு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
அவரும் இந்த செய்தியைப் பலரிடம் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் யாரும் இதற்கு மேல் சிந்தித்ததில்லை.
அன்றைய காலகட்டத்தில் சண்முகனாரும் மற்ற புலவர்களும் உண்மையாகப் பாடிய ’சங்கொடுவா ராமாநு சம்’ என்ற ஈற்றடியுடன் அமைந்த பாடல்கள் இவைகள்தான் என்றோ, இப்படித்தான் இருக்கு மென்றோ யாரும் முயற்சித்ததில்லை.
எனவே நான் ’சங்கொடுவா ராமாநு சம்’ என்ற ஈற்றடியை வைத்து சில பொதுவான வெண்பாக்களும், சண்முகனார், சோமசுந்தர பாரதி, கந்தசாமிக் கவிராயர், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், உ.வே.சா, மறைமலையடிகள், மு.இராகவையங்கார், இரா.இராகவையங்கார் பாடுவது போலவும், அருகிலிருப்பவர் சண்முகனார்க்குப் பொங்கல், மெதுவடை கேட்பது போலவும் சில வெண்பாக்களும் இயற்றி யிருக்கிறேன்.
இத்தகைய வெண்பாக்களைப் பிற ஆர்வலரும் முயற்சிக்கலாமே! (தொடரும்)