அடைமழையில் நான் சிறு துளி
ஒரு சிலருக்கு எப்போதும் மகிழ்ச்சியான தருணங்கள். என் போன்றவர்களுக்கு எப்போதாவது அத்தருணம் கிட்டும். இப்போதும் அது கிட்டி இருக்கிறது. என் துக்கங்களுக்கு இடை இடையே கடவுள் எனக்கு அப்படிப் பட்ட சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதுண்டு. மனம் ஆறுதல் அடைந்து கொள் என்று.
இப்போது ஏற்பட்டுள்ள அந்த மகிழ்ச்சியான தருணம் வேறு ஒன்றுமில்லை. 22-05-2014 முதல் 25-05-2014 வரை நடந்த உலக சாதனை கவி அரங்கில் பங்கு கொண்டு 22-05-2014 அன்று சுமார் 8 கவிதைகளுக்கு மேல் வாசித்தேன். அங்கே பங்கு பெற்றமைக்காக நான் சான்றிதழினை பெற்ற போது என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவில்லைதான்.
என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் ஒரு நிகழ்வு இருக்கும் என்று நான் கனவிலும் கண்டதில்லை. மேலும் என்னை உற்சாகத்தில் ஆழ்த்திய செய்தி ஒன்றும் உண்டு. நாங்கள் எல்லோரும் பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சி உலக சாதனையாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்பதனை உங்கள் எல்லோரிடத்திலும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியே.
இந்த கவி அரங்கினில் 400 கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதைகள் வாசித்தார்கள். கிட்டத்தட்ட 3750 கவிதைகள் வாசிக்கபட்டிருக்கிறது.
இத்தளத்தில் உள்ள நண்பர்கள் திருவாளர்கள் தங்க ஆரோக்கியதாசன், நாதமணி, லயன் சங்கர், திருமதி குந்தவை வந்தியத் தேவன்(ரேணுகா) இன்னும் சிலரும் பங்கேற்றுள்ளனர் என்பதனையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக சாதனை நிறுவனத்தாரும் இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்க இருக்கிறார்கள் என்பது இன்னும் பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதற்கான விழாவும் விரைவில் சம்பந்தப்பட்டவர்களால் நடத்தப் பட உள்ளது என்பதனையும் தங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உலக கவி அரங்கில் கவிதை வாசித்தவர்களின் கவிதைகள் தொகுப்பாக வெளிவர உள்ளது என்பதிலும் மகிழ்ச்சியே.
மேற்சொன்ன கவிதை புத்தகத்தில் அச்சிடப் பட்டிருக்கும் என் கவிதை நான் இத்தளத்தில் சமர்பித்த ஒன்றுதான். நரிக்குறவர்களைப் பற்றியது. மீண்டும் உங்களுக்காக
கற்பின் கவசம் = அழுக்கு???.... !!!!!!!!.....
====================================
ஊசிமணி பாசி விற்கும்
நரிக்குறவர் நாங்கள்
ஊரும் இல்லை வீடும் இல்லை
எங்கள் கதைக்கே ளுங்கள்....
அப்பழுக்கு நெஞ்சிலில்லை
சுத்தமான மனசு
நடைபாதையோரம் வாழும்
எங்கள் வாழ்க்கை ஒரு தினுசு...
நாசி மூடி தூர(ம்) ஓடும்
நல்லவரே கொஞ்ச(ம்) நில்லும்
பெண்கள் அழுக்குடம்பு காரணத்தை
கேட்டுவிட்டுச் செல்லும்...
பகலினிலே வாழும் வாழ்வில்
பங்கம் ஏதும் இல்லை
பாழும் இரவினிலே சாலையோரம்
படு பாவிகளின் தொல்லை....
இள(ம்) வயது பெண்களெல்லாம்
நாளும் குளிப்பதில்லை
குளித்துவிட்டால் இரவினிலே
கற்பு போகும் கொள்ளை..
நான்கு சுவருள் வாழ்க்கை என்றால்
காணும் வாழ்க்கை சொர்க்கம்
நடுத் தெருவினிலே வாழுவதால்
நாளும்... நாளும்... நரகம்...
அமைச்சுப் பணியில் உள்ளோரே
செவி கொடுத்து கேளும்
அரசு கொஞ்சம் மனசு வைத்தால்
எங்கள் சங்கடங்கள் தீரும்...
============================================
கவிதை எழுதுவதற்கு ஊக்கமளித்த, ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்களுடனான நட்பினை ஏற்படுத்திக் கொடுத்த இந்த எழுத்துத் தளத்தினருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேடை பேச்சு என்றாலே கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தவளை மேடையில் எந்த பயமும் இன்றி கவிதை வாசிக்க என்னை தயார் செய்த பத்திரிக்கை ஆசிரியர் திரு தமிழினியன் மற்றும் என் தோழி கவிஞர் சிவகாமி அருணன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
சொ. சாந்தி