யார் அவர்கள் ஒரு பக்கக் கதை

*
யார் அவர்கள்…?
*
அவள் பஸ் விட்டிறங்கினாள். சற்றும் தாமதிக்காமல் அவள் முன்னால் வந்தவன், அவளை வேகமாக இழுத்து நடுத்தெருவில் வைத்து அடி அடியென்று அடித்தான். உடனே வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்து விட்டது. யாரும் எதற்காக அடிக்கிறாய்? என்று கேட்பதற்கும், விலக்கி விடுவற்கும் துணியவில்லை. கூட்டத்தினர் ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக் கொண்டு, அனுதாபப்பட்டார்கள். யாரோ ஒருத்தர் துணிச்சலாய் “ ஏன்டா, அடிக்கிறாய்? என்று கேட்க வந்தவனை, அவன் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினான். அவள் அழுதுக் கொண்டிருந்தாள். மீண்டும் அவளை அடிக்கப் போனான். அப்பொழுது அருகில் வந்துக் கொண்டிருந்த போலீஸ்காரரைப் பார்த்ததும், பவ்யமாக ஏதும் தெரியாதவன் மாதிரி “ ஏ, கழுதை வாடீ, என்ன திமிரா நிக்கிறே? வர்றியா? இல்லை போலீஸ்காரன்கிட்டே ஒப்படைக்கட்டுமா? என்று மிரட்டினான். அதற்குள் அவளும் சுதாரித்துக் கொண்டு, அந்த போலீஸ்காரர் வருவதற்குள், இருவரும் அங்கிருந்து மெல்ல நகர்ந்துச் சென்றனர். அவள் யார்? அவன் யார்.? எதற்காக அடித்தான் என்று எவருக்கும் விளங்கவில்லை. “ பாவி, ஒரு பொம்பளைன்னு கூட பார்க்காமே நடுத்தெருவிலே போட்டு இந்த அடி அடிக்கிறானே “ என்று பேசிக் கொண்டே கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்தது.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (9-Jun-14, 8:51 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 351

மேலே