அம்மாவின் பொய்கள் - குமரிபையன்

இன்றைக்கு மட்டும் சென்று வா மகனே
நாளைக்கு பள்ளி இல்லை என்பாள்
இதில் உனக்கு பிடித்த உணவு என்பாள்..!
நாளைக்கும் இதையே சொல்வாள்..!

விளையாட போனால் அடிப்பேன் என்பாள்
விளையாடி வந்தால் அலசி விடுவாள்..!
படிக்காவிட்டால் சோறு இல்லை என்பாள்
பட்டினி போடாமல் எனக்கு சோறு ஊட்டுவாள்..!

மதிப்பெண் கையொப்பம் இல்லை என்பாள்
மறு நாள் காலையில் போட்டு வைப்பாள்..!
தின்பண்டம் வாங்க காசில்லை என்பாள்
திரும்ப அழைத்து கையில் காசு தருவாள்..!

அப்பா.. நீ சொல்லப்பா....
என் அம்மா என்னிடம் பொய்யே சொன்னாள்..?
ஏன் சித்தி மட்டும் உண்மையை சொல்கிறாள்..?

இன்றைக்கு மட்டும் சென்றுவா நீ
இனி நாளைக்கு பள்ளி இல்லை என்பாள்..!
என் அம்மாபோல் மறுநாளும் அனுப்பாமல்
என்னை தூங்க விட்டு வேலை தருவாள்..!

விளையாட போனால் அடிப்பேன் என்பாள்
விளையாடி வந்தால் அடித்து துவைப்பாள்.!
படிக்காவிட்டால் சோறு இல்லை என்பாள்
படிக்காத இரவுகளில் பட்டினியாய் போடுவாள்..!

மதிப்பெண் கையொப்பம் இல்லை என்பாள்
மண்டியிட்டு கேட்டாலும் போட மாட்டாள்..!
தின்பண்டம் வாங்க காசில்லை என்பாள்
திரும்பவும் கேட்டால் காதை திருகுவாள்..!

ஏன் அப்பா என் அம்மா எப்போதும்
என்னோடு பொய் மட்டும் சொன்னாள்..?
ஏன் அப்பா சித்தி மட்டும் எப்போதும்
என்னோடு உண்மையை சொல்கிறாள்..?

(மனைவி இறந்து மறுமணம் செய்து கொண்ட அப்பாவிடம் மகன்)

எழுதியவர் : குமரி பையன் (9-Jun-14, 9:34 am)
பார்வை : 554

மேலே