தசையினை தீ சுடினும்- சிறுகதை

காதல் ஒரு போதும் தீர்வதில்லை... தீர்வது போல ஒரு தீவிரத்தை இந்த வாழ்க்கை வலை வீசி கதை பேசினாலும், காதல் தீராது...... காதல் என்பதே தீராதுதானே.......?

தீ சுட்ட இதழ் கொண்டவனாய், ஆதி, பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்....அவன், கனவுகளை விரட்டி பிடித்து, பின் விரட்டி விடுபவன். கனவு காண்பது அவனின் தீராப் பசி.. மந்திர மனதுக்காரன். எல்லாமே பெரியது அவனுக்கு.... வான் கொண்ட நீலமும், அது கொண்ட நீளமும், தான் கொண்ட யாகமும், அது கொண்ட தேகமும் அவனை தீரா சிந்தனைக்குள் சிதறடித்துக் கொண்டே இருந்தது.....

தீ சுடினும் வலி காட்டாத முகம், ரசனை மிகுந்தது என்பது அவனின் உள் நோக்கிய சித்தாந்தம். நீண்ட தலை முடியும், நீண்ட தாடியும், அவனை அழகாக்கிக் கொண்டிருப்பதாக அவன் வீட்டு நிலைக்கண்ணாடி, நிலை கொள்ளாமல் கூறுவதாக, அவன் நம்பினான்... நம்புவது மட்டுமே நிஜம். அது 'ஜனனமாகட்டும்..... மரணமாகட்டும்.....'என்பது அவனின் வேதாந்தம்....

'இன்னைக்கு ஆபீஸ் போக பிடிக்கல'- வார்த்தைகள் காதோரம் கிசுகிசுக்க, கவனத்தை பின்னால் அமர்ந்திருந்த, தன் மனைவி பூங்குழலியின் பக்கம் சற்று திரும்பிய உடல் மொழியில் கொடுத்தான்....

' ஏன்.... என்னாச்சு.. உடம்பு சரியில்லையா?" என்றான் ஆதி, வழக்கமான நிதானத்துடன்...."அப்பப்பா..... எவ்வளவு வாகனங்கள்..... இங்கு வண்டி ஒட்டி அலுவலகம் செல்வதும், வீடு திரும்புவதும், போர்க்களம் கடந்து உயிர் திரும்புதல்"- நிதானம் இழந்த உள் மனசு, புலம்பத் தொடங்கியது .....

"வீடு.... ஆபீஸ்...... சமைக்கறது.... துணி துவைக்கறது.... தூங்கறது..... ச்சே...... நாம மனசு விட்டு பேசியே ரெம்ப நாளாச்சுல்ல..... ப்ளீஸ்.... ஆதி.... என்னை, எங்கயாது கூட்டிட்டு போ.... லைப் போர் அடிக்குதுடா....." என்றாள் பூங்குழலி.......

அவள் குரலில் இந்த அசுர வாழ்க்கை தூவியிருந்த, கலப்பட விதைகள், முளை விட்டிருந்ததை உணர முடிந்தது...

ஆதி, எதுவும் பேசவில்லை...

பைக், நகரம் தாண்டி, மேட்டுப் பாளைய சாலையில் பயணிக்கத் தொடங்கியிருந்தது.....

பூங்குழலி, பைக்கில் சற்று முன்னால் நகர்ந்து அமர்ந்தாள்.... மெல்ல, கட்டிக் கொண்டாள்....

எதிர்க்காற்று, அவளின் முகத்தை தழுவிச் சென்றது. அடைபட்டு, சுருண்டு கிடந்த கூந்தல், தன் சிறகுகளை விரித்து, காற்றோடு கை கோர்க்கத் தொடங்கியது....

"என்ன ஆதி..... எதும் பேச மாட்டேன்கிற...ம்.... என்னை உனக்கு பிடிக்குமா?"-புல்வெளியில் அமர்ந்த படி, அவனையே பார்த்துக் கொண்டு, கேட்டாள் பூங்குழலி......

"புடிக்காமத்தான் லவ் சொல்லி, உன் பதிலுக்காக ஆறு மாசம் காத்திருந்தேனா...?"-மெல்ல வலது கண்ணை சுருக்கி, கண் அடித்தபடியே பதில் கூறினான் ஆதி.....

சிம்ஸ் பூங்கா...... வெறிச்சோடிக் கிடந்தது.... ஆங்காங்கே சில குடும்பங்கள், சில ஜோடிகள் என்று பெயருக்கு பூத்த பூக்கள் போல மரங்கள் கொண்ட மைதானமாய் விரிந்து கிடந்தது.....

"காதலிக்கும் போது அவ்ளோ பேசுவ.... கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் எவ்ளோ யோசனை...."- பூங்குழலி.

"ஹே..... ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு மாதிரி இருக்கறது தான் வாழ்க்கை.... பதினாறு வயசுல இருந்த மாதிரியே இருபத்தியாறு வயசுல இருக்க முடியுமா.....? இல்ல, இருபத்தியாறு வயசுல இருந்த மாதிரி முப்பத்தாறு வயசுல இருக்க முடியுமா....? ம்....அதுக்காக காதல் குறைஞ்சிடுச்சுன்னு அர்த்தம் இல்ல.... என்ற ஆதி.. அவளை ஆழமாகப் பார்த்தான்....

"உன் தாடியும்... தலை முடியும் தாண்டா... உனக்கு செம லுக் குடுக்குது..... இருபது வயசுல பார்த்த மாதிரியே தான் முப்பது வயசுலயும் இருக்க.... நான் பாரு.... ஆண்ட்டி ஆகிட்டேன்...." என்றாள் பூங்குழலி....

அவளின் உடல் மொழி சிணுங்கியது... அவன் தன்னை இன்னும் இளமையாக உணரத் தொடங்கினான்....

நிறைய பேசினார்கள்...... நிறைந்து பேசினார்கள்.... பேச்சில் காதலும், காமமும், மழை விடத் தொடங்கியிருந்தது..... உச்சி மலைக் காற்றின் நெடுந்தூர பயணம் அவர்களைத் தழுவிச் சென்றது...

மீண்டும், பூத்த பூவாகி இருந்தாள்... பூங்குழலி.. அரும்பு மீசை வந்தவனாக தன்னை உணர்ந்தான் ஆதி....

வாழ்வின் நெருக்கடியில் இருந்து தொடுவானம் தீண்ட துடிக்கும் பறவைக் கூட்டங்களுக்குள் ஒளிந்து கொண்டவர்களாகி போனார்கள்.....

இருவரும், ஆங்காங்கே அமர்ந்திருக்கும் ஜோடிகளைப் பார்த்து, அவர்களுக்குள்ளாகவே பேசி சிரித்துக் கொண்டார்கள்....(பழைய நினைவுகள் .... )

"ஆதி, அந்த பையனப் பாரேன்..... கிஸ் பண்ண எவ்வளவோ ட்ரை பண்றான்.. ஆனா அது விவரமான பொண்ணு..... விட மாட்டேங்கறா பாரு.."

பூங்குழலி, காட்டி பேசிய திசையில், ஆதியும் திரும்பி, அந்த காட்சியை ரசித்தான்....

"என்ன விவரமா இருந்து என்ன பிரயோஜனம்..... முக்கியமான நேரத்துல கவுந்துருவீங்கள்ல...." என்று, கண் அடித்து சிரித்தான் ஆதி....

"போடா.... பி ஹச் டி " என்று சொல்லி, கன்னத்தில் செல்லமாக அடித்தாள் பூங்குழலி...

பேச்சு எங்கெல்லாமோ சென்று, 'அடுத்த ஜன்மத்திலும் நீயே என் துணையாக வேண்டும்' என்றான்.....

"என்ன திடீர்னு எமோசனல்?" - பூங்குழலி... விழி விரிய கேட்டாள்....

அவள் பார்வை முழுக்க ஆதியின் முகமே காட்சியாகி இருந்தது....

"சரி எமோசனல் இல்ல........... ஜாலி... ஓகேயா...." என்று தொடர்ந்தான்....அவன் கண்கள் மெல்ல சிவக்கத் தொடங்கி இருந்தது.....

"சின்ன உடம்பு, பெரிய கண்ணு, லைட்டா தூக்கின மாதிரி மூக்கு, ரோஸ் கலர் உதடு.. வலது பக்கம் வகிடெடுத்து சீவின தலைமுடி....உடம்பை ஒட்டின மாதிரி தாவணி....ஜல் ஜல்ன்னு கணுக்கால்ல ஆட்டம் போடற கொலுசு.... இடது மூக்குத்தில மின்னற முகம்....வயசு ஒரு பதினெட்டு இருக்குமா......? அங்க பாருடி.... ப்பா..... சின்ன வயசுல உன்ன பார்த்த மாதிரியே இருக்குல்ல....." என்றான் ஆதி....

அவன் கண்களில் கவிதை படித்த திருப்தி....

அவனின் கண்கள் நிலை குத்திய இடத்தில் பூங்குழலியும் பார்த்தாள்....

" ம்ஹும்..... யாரை சொல்ற ஆதி..... நீ சொல்ற மாதிரி யாருமே அங்க இல்லையே...."- பூங்குழலி சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் தேடியபடியே கூறினாள்....

"ஹே........ லூசு....... அந்த சிவப்பு தாவணிடி"- ஆதி....

"நீதான் லூசு..... கிட்டத்தட்ட எல்லாருமே யூனிபார்ம் மாதிரி சிவப்பு தாவணிதான் போட்ருக்காங்க"- பூங்குழலியின் முகம், தேடலைச் சுமந்த பார்வையானது....

சட்டென, ஏதோ மாந்தரீகன் போல, ஆதி கூறினான்....

"அவ இங்க வருவா பாரு.....வந்து, அதோ அங்க இருக்கற சேர்ல உக்காருவா....போட்டோ எடுத்துக்குவா..... அவ பார்வை முழுக்க என் மேல தான் இருக்கும்......"

பூங்குழலி மந்திரக்காரனைப் பார்ப்பது போல பார்த்தாள்.. ஆதியும் தவம் கலைந்தவனின் புரியாமை போல, புலம்புவதாகவே உணர்ந்தான்....

அவள், அவன் சொன்னது போலவே, அங்கு வந்து அமர்ந்தாள்.. புகைப் படம் எடுத்துக் கொண்டாள்....

"ம்ம்.... பாரு... சேர்ல பாரு........"- கிசுகிசுத்த கணவனை, செல்ல முறை, முறைத்தாள் பூங்குழலி...

"ஒரு கூட்டமே உக்காந்து போட்டோ எடுக்குது.... இதுல யாரன்னு பாக்க...." அலுத்துக் கொண்டாள் பூங்குழலி....


அவளின் கண்கள் ஆதியையே தேடியது.....


கண்களை அழுந்த துடைத்துக் கொண்ட பூங்குழலியின் கண்களில் எதிரே, புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்த அந்த இளம் ஜோடி, அவளின் காதலையும், காதல் கணவனையும், அவர்கள் வந்து கொண்டாடிய அந்த ஒரு அழகிய நாளையும் கண் முன்னே நினைவுகளாக்கிக் கொண்டிருந்தது....

கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்..... மனதுக்குள் வெட்டிய மின்னலென, அந்த ஜோடி, அவளின் எண்ணங்களை சுழல வைத்ததுக் கொண்டிருந்தது..... இன்னும் ஆழமாய் பார்த்தாள்.....உள்ளமும், உடலும் ஒரு வித நடுக்கத்தை, உராய்வை உணர்ந்தது....

"நீண்ட தலை முடியும், தாடியும் வைத்துக் கொண்டு அந்த பையன், தன் கணவன் ஆதியைப் போலவே இருக்கிறான்...... அந்த பெண், ஆதி அன்று சொன்ன அந்த ஒற்றை மூக்குத்தி, கணுக்கால் கொலுசு, வலது பக்க வகிடு, சிவப்பு தாவணிப் பெண் போலவே இருக்கிறாள்...."- 'கடவுளே.....' என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் பூங்குழலி.... அவளுக்கு எல்லாமே கற்பனையாக, கனவு போல இருந்தது....இறந்து போன தன் கணவனைப் போலவே ஒருவன், தன் கணவன் கூறிய, பார்த்த, ரசித்த, அதே உடலமைப்பு கொண்ட பெண்ணுடன், தாங்கள் வந்தமர்ந்த அதே இடத்தில்........"

பூங்குழலிக்கு தலை சுற்றியது....

"ஒரு வேலை மறு ஜென்மமா.....?!!!"---------அவள் இன்னும் இன்னும் குழம்பினாள்..

"தன் கணவன் கூறிய அத்தனை அடையாளங்களும் அவளுடன் ஒத்துப் போகிறது....அது மட்டுமல்ல.... அந்த பையன் அப்படியே தன் கணவனைப் போலவே இருக்கிறான்...."

பூங்குழலியின் மனம் துடித்தது..... ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது..... இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தாள்...நெஞ்சு விம்மியது.... சந்தோசம் மட்டுமே வாழ்வென தெரிவது போல அந்த ஜோடி இன்னும் இன்னும் நெருக்கமாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள்....

ஏக்கம்.... பெருந்தவிப்பை, பூங்குழலிக்குள் விதைத்தது....துக்கம், சட்டென வடிந்து போன மழையின் வழியென, காய்ந்தும், ஈரம் பசை கொண்ட வழியாக தன்னை வழியாக்கிக் கிடந்தது....

"கண்டிப்பாக அது தன் கணவன் ஆதியே தான்.. அதே இடது கை பழக்கம், வலது கையில் கடிகாரம் கட்டும் அதே சுபாவம்.. இன்னும் உற்று நோக்கினாள்..... வலது கண்ணை சுருக்கி கண் அடிக்கும் அதே குறும்பு முகம்...."

"சரி.. அவன் ஆதியாகவே இருந்தாலும் என்ன செய்ய முடியும்....? தான் தவழ்ந்த கைகளில் வேறொரு பெண்..."

அவனைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல ஒரு ஊற்று கொப்பளிக்கத் தொடங்கியது.... அவள் எங்கும். காற்றில்லா தேசத்து மரமாக அமர்ந்திருந்தாள்.... அவர்களை ஆழமாய் பார்த்துக் கொண்டேயிருந்தாள்....

ஆதியின் சாயலில் இருந்தவன், தன் காதல் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததை இப்போது, சற்று உற்றுக் கவனிக்கையில் கேட்க முடிந்தது....

"சிவப்பு கலர் சுடிதாரில், சின்ன கண்கள் கொண்ட ஒருத்தி, பாப் கட்டிங் கொண்ட தலை முடியோடு..... பப்பா........ எவ்ளோ அழகு அவ.........நீ வேண்ணா பாரேன்.... அவ, இங்க வந்து உட்காருவா... என்னப் பார்த்துக்கிட்டே போட்டோ எடுத்துக்குவா.............

திக் என்றது...... பூங்குழலிக்கு....

"ஆதி............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????"

வாய்க்குள் வார்த்தை நீச்சல் மறந்து மூழ்கியது...ஏதேதோ எண்ணங்களின் சுழற்சி அவளைக் கொத்தத் தொடங்கியது....இருப்பினும் சமாளித்துக் கொண்டே பூங்குழலி, அவன் காட்டிய திசையில் ஆவலோடு கண் விரிய பார்த்தாள்....

சிவப்பு கலர் சுடிதாரில், ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள்... அவளின் பார்வை முழுக்க ஆதியைப் போல இருந்தவன் மேல் தான் இருந்தது....அது தீரா காதலுக்கான பார்வையாகப் பட்டது...........

நடை உடை.... பாவனை..... அதிர வைக்க, இன்னும் ஆழமாய், உடல் வியர்த்து, உள்ளம் நடுங்கி கூர்ந்து கவனித்தாள் பூங்குழலி....

வந்து கொண்டிருந்தவள்... வந்து கொண்டிருந்தவள்.......................................

பூங்குழலியைப் போலவே இருந்தாள்.....

சிறு குறிப்பு: 25 வருடங்களுக்கு முன் சிம்ஸ் பூங்காவிற்கு வந்து விட்டு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானது, ஆதி மட்டுமல்ல......


கவிஜி

எழுதியவர் : கவிஜி (10-Jun-14, 12:51 pm)
பார்வை : 432

மேலே