தீ சுடும் என்பார்

சிதிலமடைந்த இரவொன்றில்
சிதறடிக்கப்பட்டன கனாக்கள்
துளித் துளியாய்
வழிகிறது காதல்
வலியுடனே..

அவிழ்ந்த கூந்தலும்
அழிக்கப்பட்ட மையும்
பறை சாற்றின ,
பெண்மை பலியானதை ..

வெட்டி எறிந்த
நகத் துண்டுகளில்
ஒட்டியுள்ளன எஞ்சிய
சதைத் துணுக்குகள்
வெறி நாயின்
வீச்சத்துடனே..

அசைவற்றுப் போன
இமைக்கு ஆறுதலாய்
விழி நீர் ஒழுகிற்று ..

இதயம் வலித்து
உணர்த்தியது, உயிர்
மிச்சமிருப்பதை ..

எச்சில் இலைக்குப்
படையல் ஆனேன் ,
பாதகன் நீ
என்றறியாமல் ..

இருட்டில் காதல்
வாங்கிய நீ
வியாபாரிதான் ,நான்
விலை பொருளில்லை..

உன் கள்ளச் சந்தைக்கு
கைப்பொருள்
இவள் அல்லவே ..

ஊரை எரிக்க
நான் கண்ணகியில்லை,
உண்மையை உணராவிடில்
உன்னையே எரிப்பேன்
ஊர்கூட்டி வைத்து !!

எழுதியவர் : கார்த்திகா AK (11-Jun-14, 8:02 pm)
Tanglish : thee sudum enbaar
பார்வை : 268

மேலே