சும்மா சில கிறுக்கல்கள்

கவனம் தப்பினால்
தப்பி ஓடுவது யார்?
கைகோர்த்து
பயம் சேர்த்து நடக்கும்
காதலர்கள்

எரிந்து கொண்டே இருக்கும்
சூரியனுக்கு
எண்ணெய் ஊற்றும்
பணக்காரன் யார்?

யுகம் தோறும்
நைட் ஷிப்ட்
அலுத்துக் கொள்ளாதா நிலவு?

நின்று கொண்டே இருப்பதால்
மூட்டு வலி வராதா மரங்களுக்கு?
வலித்தால் யாரிடம் போகும்
எப்போது இவை தூங்கும்?
பசித்தால் யாரை கேட்கும்?

ஆயிரம் பேருக்கு போய் சொல்லி
கல்யாணம் நடத்தி
களைத்து விட்டதாம் அலைபேசி

காட்டில் பாட்டுக் கச்சேரி
குயிலுக்கு
குரலுக்கு மிளகும் வெண்ணையும்
ஒண்ணாக்கி தருவது யார்?

புத்தகம் முழுவதும்
குட்டி போட்டு வைத்திருக்கும்
மயில் இறகுக்கு
குடும்ப கட்டுப்பாடு
கட்டாயம்...!

இருவரின் ஓட்டத்தை
உலகமே கவனிப்பது
அதிசயம் - கடிகார முட்கள்

இன்று விடுமுறை கேட்டு
விண்ணப்பம்
போர்வைக்கு குளிர் ஜுரம்

வான் சாலையோரம் நின்ற
வென்மேகத்தின் தேகத்தில்
கருப்பு புகை தூவி
கடந்தவன் யார்?
அழகு போனதால் அழுகிறது
கருத்த மேகம்

நிலவும் இருளும்
இரவில் புணர்ந்த அடையாளம்
புல் மெத்தையில்
புலரும் போது தெரியும்
பனித்துளிகளாய் ...!

மரத்தை கொத்தி இசைத்தால்
புல்லாங்குழலாகிறது
மரங்கொத்தியே
மனம் திறந்து சொல்
எங்கு மறைத்து வைத்திருக்கிறாய்
நீ கொத்திய
கத்தும் குழல்களை?

ஓடி வந்த நதி
ஓய்வெடுக்கிறது குளத்தில்

திருடனாய் பார்த்து
திருந்தாவிட்டால்
வடையை காக்க முடியாது
எத்தித் திருடும் காக்கைக்கு
எட்டும் இடத்தில் ஏதாவது வைப்போம்
திருட்டை ஒழிப்போம்

கிளி தத்துவம்
---------------------------
பறந்து சிறந்தது
கூண்டில் இன்று பிச்சை எடுக்கிறது
பருவம் மாறும்
மீண்டும் பறக்கும்
ஆனால் இறக்கவில்லை
இறகுகளை இழக்கவில்லை

எழுதியவர் : Raymond (13-Jun-14, 4:21 am)
பார்வை : 165

மேலே