வைகறையே
இரவு போர்வையை ஆதவன் விலக்க ,
நித்திரை களைந்து நிலமகள் விழிக்க ,
நிலமகள் நிலையை கண்ணுற்று கீழ் வானம் ....
சிலிர்த்து நாணத்தால் பூசுமே செந்தூரம் !
விழித்திருக்கும் வெண்ணிலவும் விண்மீனும் இரவுதோறும் .....
விடிந்ததும் விடைபெருமே விண்ணிலிருந்து தினந்தோறும் !
வாடைக்காற்றும் குளிர்நிலவும் சேருமே இரவில்...
தோன்றுமே பனித்துளிகள் சாட்சியாய் உறவில் !
இரவின் பிரிவால் பனித்துளிகள் கலங்கும் ,
கதிரவன் தீண்ட காற்றுடன் கலக்கும் !
பறக்குமே புள்ளினங்கள் கானத்துடன் இறை தேடி
தவமாய் நிற்குமே மரங்கள் இறைவனை வேண்டி !
பூவிதழ் தன்னை பூந்தென்றல் தீண்டும் ..
மது உண்ண போட்டியிடும் தேனியும் பொன்வண்டும் !
மலரிதழ் விரிந்து மகரந்தம் மணக்கும் ..
சிறகடித்து வண்ணத்து பூச்சி மலர்மீது மயங்கும் !
இரவில் மெய்யான கனவுகள் பொய்யாகும் !
ஆதவன் வருகையால் நாளொன்று மெய்யாகும் !
வைகறை காட்சிகள் பதிந்ததே மனதில் ...
வடித்தேன் கவிதையை தாய்மொழி தமிழில் !!