சிறப்புக்கவிதை 19 - தெருவோர பிஞ்சுகள் - கீதமன்

அதிசயங்களால் நிறைந்தது குழந்தைகளின் உலகம். அழத் துவங்கும் குழந்தைக்கு அன்னை அதிசயம், தவழத் துவங்கும் குழந்தைக்கு தரை அதிசயம், நடக்கத் துவங்கும் குழந்தைக்கு உயரம் அதிசயம், விளையாடத் துவங்கும் குழந்தைக்கு பொம்மைகள் அதிசயம், வெளியேறத் துவங்கும் குழந்தைக்கு காணுமிடமெல்லாம் அதிசயம். ஊடே சில குழந்தைகளின் உலகம் அநியாயங்களால் நிரம்பியிருக்கிறது.

சில குப்பைகளின் அரை நிமிட உணர்ச்சிப் பெருக்கினால் குப்பைத்தொட்டிகள் பிரசவித்த குழந்தைகளின் உலகம் அநியாயம். தவணைமுறையில் புற்று ஏற்றிக்கொண்டிருக்கும் குடிகாரத்தகப்பனால், தட்டுகையோடு சிக்னல்களுக்கு எட்டி உதைக்கப்படும் குழந்தைகளின் உலகம் அநியாயம். வற்றிய கிணற்றால் முற்றிய வறுமை நீக்க பிச்சைக்கு விற்கப்படும் குழந்தைகளின் உலகம் அநியாயம். காருக்கு உள்ளே ஒரு குழந்தை காட்பரீஸ் சப்பிக்கொண்டிருக்க , வெளியே கையேந்தி நின்று சமூகத்தின் அசிங்கப்பார்வைகளை அப்பிக்கொள்ளும் குழந்தைகளின் உலகம் அநியாயம்.

இந்த அநியாயங்களை காணச்சகியாது முகாரி அரற்றுகிறது கவிதை வரிகள்.

"கருவோடு
வந்த
கால்கள்
திருவோடு
சுமந்து
தெருவோடு
அலைகின்றன

கருவறைக்குள்
கண்விழித்த
நம் நாட்டின்
எதிர்காலம்
தெருவோரம்
துயில்கின்றன”

எனத் தொடங்கி எதுகையோடும், லேசான சந்தநயத்தோடும் செல்லும் வரிகள், அழகியலை மீறி அவலநிலைகளை எளிய வார்த்தைகளால் முகத்திலறைகிறது. தகிக்கும் தார்ச்சாலைகளில் பல அரசாங்கங்களின் கையாலாகாத்தன கரியை முகத்தில் பூசிக்கொண்டு, சட்டத்தை விட பெரிய ஓட்டை உடைய சட்டையை போட்டுக்கொண்டு, பலநாள் பசிக்கு புழுதியை புசிக்கும் குழந்தையும் அதிசயங்களாலான உலகத்தை காணும் ஏக்கத்தோடுதான் தன் முதல் அழுகையை துவங்கியிருக்கும். மாறாக, அழுகையே தன் உலகமாகிவிடும் அநியாயம் நடக்குமென எண்ணியிருக்காது.

தொடர்ந்து பசி, பிணி, வறுமை, கல்லாமை போன்றவைகளின் பிடியில் சொல்லொணாத்துயர் கொள்ளும் பிஞ்சுகளின் சோக கீதமாக கவிதை மாறுகையில், சிறிது கவிதையை விட்டு விலகி இந்தத் தெருவோர குழந்தைகளின் வெளியில் தெரியாத இரக்கமற்ற கொடூரமான வன்முறைகள் நிரம்பிய கோரமான பின்புலங்களைப் பற்றி யோசிக்காமல் இருக்கமுடிவதில்லை.

தோல் ஒடுங்கி, பிதுங்கும் என்புகளோடு பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்கும் இந்த குழந்தைகளை முன்வைத்து முதலே இல்லாது பல்லாயிரம் கோடி லாபமீட்டும் வியாபாரம் நடத்தப்படுவதை அறிவீர்களா?. ஸ்லம்டாக் மில்லியனர், நான் கடவுள் போன்ற வெகுஜன சினிமாக்கள் தோலுரித்ததும் இந்த கொடூர கும்பலைத்தான். ஆனால் மக்களுக்கு நினைவிலிருப்பதோ ரகுமானின் ஆஸ்கார்களும், நரமாமிசம் உண்ணும் அகோரியும்தான். அவற்றைப் பற்றி பேசிக்கொண்டே எதிரே வரும் குழந்தைத் தொழிலாளிக்கு (ஆம், அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல) ஒரு ரூபாய் தானமிட்டு விட்டு சென்று விடுவோம். அந்த ஒரு ரூபாய் அவர்களின் பசியாற்றுவதற்கு பதிலாக அந்த கொடூர வியாபாரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை விதைப்பதாக மாறுவதை நாம் அறிவதில்லை.

இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டிற்கு 60000 குழந்தைகள் தொலைந்து போவதாக குறிப்பிடுகிறது UNICEF நிறுவனம். அவர்கள் தொலைகிறார்களோ, தொலைக்கப்படுகிறார்களோ, கடத்தப்படுகிறார்களோ அல்லது விற்கப்படுகிறார்களோ, எதுவாகினும் அவர்களில் பெரும்பாலானோர் எதோ ஒரு திசையில் இந்த வியாபாரத்தின் புதிய தொழிலாளியாகவே சமூகத்தினுள் புகுத்தப்படுகின்றனர்.

இந்த கொடூர வியாபாரத்தின் உச்சகட்டம், அதிக வசூலுக்காக குழந்தைகள் முடமாக்கப்படுவது. எந்தக் குறைபாடும் இல்லாத குழந்தைகளை விட , பல மடங்கு பிச்சை கிடைக்கின்ற காரணத்துக்காகவே குழந்தைகள் வேண்டுமென்றே முடமாக்கப்படுகின்றனர். 15000 முதல் 25000 என்ற சொற்ப தொகைக்காக பல மருத்துவர்களே இதற்கு துணை புரிகின்றனர் என்பது கூடுதல் துயரம்.

குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பதில்லையே. குழந்தைகளுக்கு கிடைக்கும் அளவிற்கு வளர்ந்தவர்களால் பிச்சை பெறமுடிவதில்லை. அதிக பிச்சைக்காக முடமாக்கப்பட்டு. போதிய உணவிடாது வறுமையில் வாட்டப்படும் இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவராகும் போது அவர்களது உள்ளுறுப்புகள் திருடப்பட்டு தெருவில் விடப்படுகின்றனர். பெண்கள் விபசாரத்துக்கு விற்கப்படுகின்றனர். குழந்தைகளுடன் போட்டியிட முடியாத வளர்ந்த முடவர்கள் பசியில் வாடி இளமையிலேயே உயிர் துறக்கின்றனர். முடவரல்லாதோர் திருட்டு, கொலை, கொள்ளை எனத்துவங்கி சமூக விரோதிகளாக மாறுகின்றனர்.

இவ்வாறு ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தை அரித்துக்கொண்டிருக்கும் கொடிய புற்று நோயாக வளரும் இந்த வியாபாரத்தின் உயிர்நாடியாக இருப்பது , கதறியழும் பிஞ்சுக்குழந்தைகளின் மீது இயற்கையாகவே மனிதருக்கு ஏற்படும் பரிவும், பரிதாபமும்தான். கண் தெரியாத ஒரு குழந்தையின் மீது பரிதாபப்பட்டு நாமிடும் ஒவ்வொரு ரூபாயும், இன்னொரு குழந்தையின் கண் பார்வை பறிபோவதற்கான அஸ்திவாரம்.

தன் குழந்தைக்கு சிறிய கீறல் ஏற்பட்டது என்றால் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு ஒதுங்கி விடுகிறோமா என்ன?., இல்லையே.. நூற்றுக்கணக்கில் மருத்துவருக்கு செலவு செய்து அந்தக் கீறலின் அடையாளம் கூட தெரியாதவாறு செய்து விட்டுத்தான் ஓய்கிறோமல்லவா. அப்படியிருக்க,நாம் சார்ந்த சமூகத்தின் குழந்தைகளான தெருக்குழந்தைகளின் மீது காட்டப்படும் இந்த பாரபட்சம் வன்முறைக்கு இணையானது என்பதை உணர்தல் வேண்டும். அடுத்த முறை இது போன்ற குழந்தைகளை காண நேர்ந்தால் , குழந்தைகள் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் இலவச சேவை எண் 1098க்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பரிவு, பாசத்தின் உண்மையான வெளிப்பாடாக தொடர்ந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்தல் இருக்கட்டும். புண்ணியம் என எண்ணி, பிச்சை மாஃபியா எனப்படும் இந்த விசச்செடிகளுக்கு நீரூற்றுவதை தவிருங்கள்.

மீண்டும் கவிதைக்கு வருவோம். முன்பே சொன்னது போல், இக்கவிதை அழகியலை ஆராய்வதற்கான கவிதை அல்ல, அவல நிலைகளை உணர்வதற்கான கவிதை. கவிஞர் அதை தெளிவாக உணர்ந்ததன் பொருட்டே, மிக எளிமையான வார்த்தைகளால் இக்கவிதையை நெய்திருக்கிறார். வாசகனுக்கு கருத்தை தெளிவாக புரியவைக்கும் பணியை பொருத்தமான சொல்லாடல்களால் செவ்வன செய்திருக்கிறார். இறைவனின் படைப்பில் அனைத்து குழந்தைகளும் சமமே, ஆனால் சமூக ஏற்றத்தாழ்வும், மனிதனும் பேராசையும், பாரபட்ச மனப்பான்மையும் குழந்தைகளுக்கான உலகத்தை சமமாக வைத்திருப்பதில்லை. வறுமைக்கும், பிணிக்கும் விற்கப்படும் குழந்தைகளின் நிலையை தெளிவாக எடுத்துரைத்து, அதன் பக்க விளைவுகளை சிந்திக்க வைத்து விழிப்புணர்ச்சி கொடுத்த வகையில் இந்தக் கவிதை சிறப்பு பெறுகிறது.

கவிதை எண் : 190589

எழுதியவர் : ஈ.ரா. (14-Jun-14, 5:31 pm)
பார்வை : 530

மேலே