அணமையில் படித்த புத்தகம் ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் நாவல் கபஞ்சாங்கம்

அணமையில் படித்த புத்தகம் : ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் .....(நாவல்)
ஆசிரியர் க.பஞ்சாங்கம்
வெளியீடு : காவ்யா, சென்னை -24
முதல் பதிப்பு : 2005, மொத்த பக்கங்கள் : 170, விலை ரூ 85

இவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் நாவலை அண்மையில் படிக்கவில்லை. படிக்கும்போதும், படித்து முடித்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் கேள்விகளாக மனதில் எழுப்பிக்கொண்டேயிருக்கும் நாவல் இந்த நாவல். நான் , என் என்று தன்னை ஒரு பாத்திரமாக இந்த நாவலாசிரியர் வரித்துக்கொள்ளும் வார்த்தைகளோடுதான் கதை ஆரம்பமாகின்றது. உள்ளத்துக்குள் கொதித்துக்கொண்டிருந்த பெரு நெருப்பை வார்த்தைகளாய் கொட்டி வடிக்கும் வடிகாலாய் இந்த நாவல். ஒரு அத்தியாயம் என்பது 2, 3 பக்கங்களில் ,ஏன் ஒரு அத்தியாயம் (33) சில வரிகளில் என்றாலும், தொடர்ச்சியாய் இழவு வீட்டில் முட்டி முட்டி அழும் ஒரு மன நிலையோடு , ஏன் இப்படி நிகழ்ந்தது , நிகழ்கிறது என்னும் கேள்விகளோடு கதை நகர்கின்றது

தன்னோடு கல்லூரியில் வேலை பார்க்கும் பாலன், எந்த அநியாயத்தையும் பொறுத்துக்கொள்ள இயலாத பேராசிரியர் பாலன், தலித் என்பதாலேயே அவமானப்படுத்தப்படும் பேரா. பாலன், குழந்தைத் தனமான பாலன், போட்டித்தேர்வு எழுதி அதிகாரியாகப் போகும் பாலன், அதிகாரியாக வாழும் காலங்களில் தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளால் புழுங்கித் தவிக்கும் பாலன்,தன்னுடைய குடும்பம் முழுவதும் தன்னுடைய பணத்தை நம்பி வாழும் சூழ் நிலையால் மனம் குமுறும் பாலன், குடும்பத்து மூத்த மகனாகப் பிறந்ததால் முழுக்க குடும்பத்தை தாங்கும் பாலன்,தன்னுடைய தங்கை வாழ்க்கை திருமணம் என்னும் பந்தத்தால் தலைகீழாகப் போவதைப் பொறுக்காமல் அழும் பாலன், தன்னுடைய மனைவியின் குடும்பத்தினருக்கு தான் சம்பாதித்துக் கொடுக்கும் வீட்டில் கிடைக்கும் மரியாதையும் , மதிப்பும் தன்னுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் அவமானமும், அவமரியாதையும் கண்டு மனதுக்குள் வெம்பி, மனைவியோடு சண்டை போட்டு அடிக்கும் பாலன், இது போன்ற நேரங்களில் பிறப்பால் தலித் இல்லையென்றாலும் தன்னை தலித்தாக பாவித்துக்கொள்ளும் தன்னுடைய நண்பன் கொடுக்கும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பாலன், ஓசோவை படித்து ஆகோ ஓகோவென்று புகழ்ந்து விட்டு, அம்பேத்கரின் புத்தகங்களைப் படித்தபின் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து ஓசோ புத்தங்கங்களை இனித் தொடுவதில்லை என்று சொல்லும் பாலன், நண்பனின் அண்ணல் அம்பேத்கர் பற்றிய புரிதல், ஏன் இந்த சமூகம் இப்படி சாதி வயப்பட்ட சமூகமாக இருக்கிறது என்பதை அண்ணல் அம்பேதகர் புத்தகங்களால் புரிந்து கொள்ள முயலும் நண்பன், , தற்கொலைக்கு முயலும் பாலன், கடைசியில் டில்லியில் இறந்து போன பாலன் என்று இந்த நாவல் முழுவதும் பாலன் என்னும் மனிதனின் அகமனமும் அவன் புறச்சூழலும் முரண்படும் இடங்களும் ,முடிவில் பாலன் முடிந்து போவதும் , அவனுக்கு உயிருக்குயிராய் இருக்கும் பிறப்பால் தலித் அல்லாத நண்பனும் , அவனது நடவடிக்கைகளும் என நாவல் விரிகின்றது.


" நாம் ஏன் இப்படிக் கிடக்கிறோம்? நம் வாழ்வைத் திருடியவர்கள் யார் ? இதோ என் முன்னால் நிர்வாணமாக எலும்பும் தோலுமாய் நிற்கிறானே சிறுவன், இவனுக்குச்சேர வேண்டிய உணவையும் துணியையும் திருடிய தீய சக்திகள் யார் ? ஆட்டைத் தொடுகிறான், மாட்டைத் தொடுகிறான், நாயைக் கொஞ்சுகிறான் ; ஆனால் நம்மைத் தொடமாட்டானாம். அந்த அளவிற்கு நம்மைக் கேவலமான பிறவியாய் அருவருக்கத்தக்க ஒரு பொருளாய் ஆக்கிய நாசகாரர்கள் யார் ? இதிலுள்ள சூழ்ச்சிகளை எல்லாம் கொஞ்சமாவது அறிந்தோமா ? சரி, இனி மேலாவது அறிய முயல வேண்டாமா ? நமது அன்றாட வாழ்வையே அலங்கோலமாக்கிய மிருகத்தனங்களை நாம் ஏன் இன்னும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டும் ? பொங்கி எழ வேண்டாமா? எழுந்து இந்த அக்கிரமங்களின் ஆணிவேரையும் சல்லி வேர்களையும் அழித்து ஒழித்து விட்டலவ்வா இப்படித் திருமணம் முடிக்க நினைக்க வேண்டும். ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவனும் இத்தகைய திருமணங்கள் மூலம் , இன்னொரு தாழ்த்தப்பட்டவனைத்தானே இந்தத் திமிர் பிடித்த உயர் சாதியினருக்குப் பெற்று வளர்த்துக் கொடுக்கிறான. எண்ணிப் பார்த்துச்செயல்பட வேண்டாமா ? சரி, திருமணம் முடிக்கிறீர்கள்; பெற்ற பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும். அம்பேத்கர் சொன்னது போலப் பிச்சை எடுத்தாவது பிள்ளைகளைப் படிக்கப் போட வேண்டாமா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை 'கல்வி கற்பதில்தான் ' இருக்கிறது என்பதை அந்த மேதை சொல்லால் சொல்லியதோடு மட்டுமல்லாமல் செயலால் செய்தும் காட்டினாரே ! நான் இந்த மண்விழாவில் மணமக்களுக்குச்சொல்லிக் கொள்ள விரும்பவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் . தாழ்த்தப்பட்ட மக்களாகிய நமக்கு விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க்கை " போராடுதல் " ஒன்றுதான் . " வாழ்க்கையே போராட்டம் " என்று சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைக் கூட்டம் நூத்துக்கு நூறு நமக்குத்தான் பொருந்தும். இதைப் புரிந்து கொள்ளுங்கள் . கணவன்-மனைவியாய் இணையும் நீங்கள் அதோடு வாழ்க்கையைச்சுருக்கிக் கொள்ளாதீர்கள் . உங்கள் மேல் இந்த ஆதிக்கச்சாதிகள் திணித்திருக்கும் பாரங்களுக்கு எதிராகப் போராட இணைந்திருக்கிறோம் என்று எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; வரலாறு நம்மை விடுதலை செய்யும் ; வாழ்க மணமக்கள்; வளர்க நீடூழி " (பக்கம் 13). ஒரு தி.க.காரரும், பாலனும், நான் என்று வரும் பாத்திரமும் கலந்து கொண்ட திருமணத்தில் பாலன் பேசியதாக கூறப்பட்ட வரிகள்தான் மேலே சொல்லப்பட்டவை. இதைப் போன்ற பகுதிகள் நாவல் முழுவதும் , நியாயமான பல விமர்சனங்கள் இந்த நாவலில் இருக்கின்றன.


பாலனின் வாழ்க்கையை விவரிக்கும் பகுதி போலவே , பாலனின் டைரிக்குறிப்புகளும் பல்வேறு விவாதங்களை மனதுக்குள் எழுப்புகிறது. ஏன் இந்த நாவல் பலரின் கவனத்தையோ, பரிசையோ பெறவில்லை என்பது கேள்விக்குரியாய் நிற்கிறது. தடித்த புத்தகங்களுக்குத்தான் பரிசு கொடுப்பார்களோ, சமூகத்தில் தடித்துப் போய்க் கிடக்கும் சாதிக்கொடுமைகளை மிகத் துல்லியமாக, நுண் கண்ணாடிகளால் காட்டும் இதனைப் போன்ற நாவலகள் ஏன் தமிழ் இலக்கிய உலகில் விவாதிக்கப்படுவதில்லை என்னும் கேள்விக்கு சாதி சார்ந்த சமூகம் என்பதுதான் பதிலாக இருக்கும். தந்தை பெரியார் கூறியது போல, " உனது இலக்கியம் சாதியைக் காப்பாற்றும் இலக்கியம், உனது கடவுள் சாதியைக் காப்பாற்றும் கடவுள், உனது மதம் சாதியைக் காப்பாற்றும் மதம், உனது மொழி கடவுளைக் காப்பாற்றும் மொழி " என்று கூறியதைப் போல அனைத்தும் சாதிமயமாகிப் போன சூழலில், கலகக் குரலாய் வரும் இதுபோன்ற நாவல்கள் நிராகரிக்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. நாத்திகனாக வாழும் நண்பனை உயிருக்குயிராய் நேசிக்கும் பாலன், தன்னுடைய சடங்குகளை விடாத தன்மையும், மகன் இறந்த நிலையிலும் கூட சடங்குகளை விடாப்பிடியாக விடாத பாலனின் தந்தை என , கவிஞர் இன்குலாப் சொன்னதைப் போல " தொட்டில் தொடங்கி சுடுகாடு வரைக்கும் " விடாது பிடித்துக்கொண்டிருக்கும் சடங்குகளை ஏன் விடாப்பிடியாக ஒடுக்கப்பட்டவர்கள் பிடித்துக்கொண்டு தொங்கவேண்டும் எனும் கேள்வியையும் இந்த நாவல் எழுப்புகிறது.,

சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, மிக நேர்மையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிகழும் அவமானங்களை, அவமரியாதைகளை பிறப்பால் தாழ்த்தப்பட்டோராக இல்லாத ஒருவர் எழுதிய நாவல் இது. மிகக் கூடுதல் கவனத்தை இந்த நாவல் பெற வேண்டும். நாவலின் தலைப்பு ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் என்று இருந்தாலும் ஒரு மரணம், ஒரு பேராசிரியர், ஒரு அதிகாரி, ஒரு தலித்தாக இருந்ததனால் ஏற்பட்ட நிகழ்வுகள் என இந்த நாவல் விரிகின்றது. இந்த நாவலைப் படிக்கும்போது நான் மிக நெருங்கிப் பழகிய , பழகும் சில நண்பர்களின் வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் போன்ற நிகழ்வுகள் பல சுட்டிக் காட்டுப்பட்டுள்ளன. படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவத்தை இந்த நாவல் அளிக்கக்கூடும் . வாசித்துப்பாருங்கள்.

எழுதியவர் : வா. நேரு (14-Jun-14, 12:16 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 171

மேலே