என் அப்பா

என் அப்பா................!
என் அப்பா! நான் மிகவும் மதிக்கக் கூடியவர்! ஒரு கடின உழைப்பாளி! ஒரு காசு கூட வீணாக செலவழிக்காதவர்! எங்கு சென்றாலும் எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்த பின்புதான் உணவு உண்ணவேண்டும் என்ற கொள்கையுடன் செலவு செய்யக் கூடியவர்! இளம் பருவத்தில் செய்யக்கூடிய சிறு தவறுகளைக் கூட அன்போடும் கண்டிப்போடும் சொல்லி திருத்தக் கூடியவர்!
எங்களை எந்த ஒரு பொருளுக்காகவும் எந்த ஒரு காரியத்துக்காகவும் அடுத்தவர்களை நம்பி வாழக்கூடாது என்று கற்றுத்தந்தவர்! மற்றவர்களை மதிக்கக் கற்றுத்தந்தவர்! ஒருமுறை எங்கள் வீட்டில் மின்சார ஒயரிங் செய்ய இருவர் வந்திருந்தனர் எனக்கு ஐந்தாறு வயதிருக்கலாம் நான் அதில் ஒருவரை "அந்த ஆள்" என்று சொல்லிவிட்டேன் என் அப்பா ஓடி வந்து அவருடைய புறங்கை வைத்து ஒரு அடி போட்டார் பார்க்கலாம் அவர் அடித்த இடத்தில் என் அப்பாவின் விரல் மடிப்புகள் அப்படியே பதிந்துப் போயிருந்தன! காரணம் நான் அவரை அந்த மாமா என்று சொல்லவில்லையாம்! எனக்கு இன்றும் அந்த அடியும் மதிப்புக் கொடுத்து பேசவேண்டும் என்ற எண்ணமும் நினைவிலிருந்து மறையவில்லை!
என் முதல் ஆசிரியர் என் அப்பா! எங்கள் வீட்டு சுவர் அப்போது மண்ணால் பூசப் பட்டிருந்தது! அதில் கொஞ்சம் இடத்தில் சிமென்ட் பூசி அதயே கரும்பலகையாக்கி அதிலே என் கைகளைப் பிடித்து முதன் முதலில் எனக்கு 'அ" என்ற எழுத்தை எழுதக் கற்றுக்கொடுத்தார்! இத்தனைக்கும் என் அப்பாவிற்கு படிப்பறிவு பெரிதாக இல்லை! "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்" என்றால் என் இறைவன் என் தந்தை தானே! சாக்பீஸ் தீர்ந்துவிட்டால் ஆள்காட்டி விரல் கொண்டு அந்த எழுத்தின் மீது எழுதச் சொல்வார்! அப்பொழுது எனக்கு சிரிப்பாக வந்தது! இப்பொழுது அது என்னை சிந்திக்க வைக்கிறது! அழகான கையெழுத்துக்கு என்னை சொந்தக்காரியாக்கியது என் அப்பா தான்! திருமணமான ஆரம்பக் காலகட்டத்தில் என் கணவர் என் கையெழுத்துக்களைப் பார்த்து மிகுந்த ஆச்சரியப்படுவார் அதற்குக் காரணம் என் தந்தைதான்!
எனது அப்பா மிகப் பெரிய உழைப்பாளி! எப்பொழுதும் சோம்பலுடன் உட்கார மாட்டார்! அவர் கைகள் ஏதாவது ஒருவேலையை செய்துகொண்டே இருக்கும்! நான் பிறந்த நாட்களில் எங்கள் வீட்டில் வறுமை மட்டுமே நிரந்தர சொந்தக்காரராக இருந்ததாம்! அப்பொழுது என் தந்தை மாடுவளர்த்து அதிலிருந்து பால் கறந்து விற்றார்! காட்டிற்கு சென்று விறகு பொறுக்கிக் கொண்டுவந்து அதை விற்று குடும்ப பாரத்தை சுமந்தார்! இப்படியானபோதும் என் அன்னையை கூலி வேலைக்கு அனுப்பவில்லை! அதன் பின்பு எனக்கு மூன்று வயதானபிறகே அரசு ரப்பர் கழகத்தில் பால்வேட்டும் வேலை கிடைத்தது! காலை நான்கு மணிக்கு பால் வெட்ட சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்து கூடை பின்னுவது, கட்டில் நாற்காலி பின்னுவது போன்ற வேலைகளை செய்வார்! அம்மாவும் சேர்ந்தே கூடை பின்னுவார்! சிறிதளவே உள்ள தோட்டத்தில் கிழங்கு வகைகளை விவசாயம் செய்வார்! இப்படி கடின உழைப்புக்குச் சொந்தக்காரர் என் அப்பா!
அவர் பிள்ளைகள் நாங்கள் சும்மா இருப்போமா? எங்களுக்கும் அப்பா ரப்பர் பால் வெட்ட,கூடை பின்ன கட்டில் பின்ன என்று எல்லா வேலைகளையும் கற்றுத்தந்தார்! நேர்மையாக எந்த வேலை செய்தாலும் தப்பில்லை என்பதைக் கற்றுத்தந்தார் என் அப்பா அதனால் எங்களுக்கு எந்த வேலை செய்தாலும் நாங்கள் வாழ்வோம் ஜெயிப்போம் என்ற தன்னம்பிக்கை உருவானது! நான் இப்போது பேஷன் டிசைனராக பணியாற்றுகிறேன்! அதற்கும் காரணம் என் தந்தை தான் ! நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தையல் கற்றுக் கொண்டேன் அப்பொழுதும் என் அப்பா என் அருகில் உட்கார்ந்து எனக்கு துணிகளை எப்படி அழகாக மடிப்பது அதன் விளிம்புகளில் எப்படி தைப்பது என்பதை பொறுமையாகச் சொல்லித்தருவார்! இத்தனைக்கும் அப்பாவிற்கு தையல் தெரியாது! எதைப் பற்றிக் கேட்டாலுமதற்கு ஒரு அழகான விளக்கம் தருவார்!
லீவு நாட்களில் என் அப்பாவுடன் காலை நான்கு மணிக்கு ரப்பர் பால் வெட்ட அவருக்கு உதவிக்குச் சில நாட்கள் செல்வதுண்டு! அப்பொழுது வானத்தில் வெள்ளி பாய்ந்து செல்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்! ஆனால் அந்த விடிவெள்ளியே என் தந்தை தான்! அவ்ளோ பெரிய நட்சத்திரமாகிப் போனார் என் தந்தை என் மனதில்! அடுத்த வீடுகளில் சென்றால் மற்ற பிள்ளைகளைப் பார்த்து தீய செயல்கள் கற்றுவிடக் கூடாது என்பதற்காக எங்களை அவர் கண்களுக்குள்ளே வைத்து வளர்த்தார்!
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே கைகளில் பைபிளைத் தந்து படிக்கவைத்தார்! எதைக்கேட்டாலும் இறைவன் தருவார் என்ற நம்பிக்கையை எனக்கு வளர்த்தவர் என் அப்பா! எங்களுக்கு கிணறு இல்லாத நேரத்தில் நான் பக்கத்து வீட்டுக் கிணற்றில் நீர் எடுக்கும் பொழுது பக்கத்து வீட்டுக் காரர் என் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது என்று சொன்ன காரணத்திற்காக உடனே அது மாலை வேளை என்று கூட பார்க்காமல் ஆட்களை அழைத்து கிணறு தோண்டினார்! பதினைந்து அடியில் மறுநாளே தண்ணீர் வந்தது! என் வீட்டிற்கு வரும் என் தோழிகள் எங்கள் வீட்டுக் கிணறு எங்கள் வீட்டிற்கு உள்ளே இருக்கிறதே என்று சொல்லி ஆச்சரியப் படுமளவுக்கு வசதிகள் செய்து தந்தார் இத்தனைக்கும் என் தந்தைக்கு சொற்ப வருமானமே இருந்தது!
என் அப்பாவுக்கு அறுபத்தி இரண்டு அல்லது அறுபத்தைந்து வயதிருக்கலாம் ! ஆனால் என் அப்பாவைப் பார்த்தால் என் அண்ணனா? என்று கேட்கும் அளவுக்கு இளமையாக இருப்பார்! அவ்ளோ பெரிய உழைப்பாளி என் அப்பா! இன்றுவரை என் அப்பாவின் வயதை நான் தெரிந்துகொண்டதில்லை ஏனென்றால் அவர் வயதாகி விடக்கூடாதே!
பிள்ளைகளாகிய நாங்கள் நல்ல நிலைக்கு வந்த பிறகும் என் அப்பா இப்பொழுதும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார் நாங்கள் ஓய்வெடுக்கச் சொல்லியபின்பும் ஓய்வெடுத்தால் ஏதாவது நோய் வந்துவிடுமாம் அதற்காக வேலை செய்துகொண்டிருப்பதாக சொல்வார்! அவர் கைகள் சும்மா இருந்து நான் பார்த்ததே இல்லை! அவர் கைகள் சும்மா இருக்கும் நேரங்களில் நாளிதழ்கள் படித்துக் கொண்டிருப்பார்! எழுதப் படிக்கத் தெரியாத மனிதர் ஆங்கில நாளிதழ் வரை அழகாக எழுத்துக் கூடிப் படிப்பார்! என் தந்தை எனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடியவராகவே தெரிகிறார்!
தான் உண்ணும் உணவையும் அடுத்தவர்களுக்கு கொடுத்து பகிந்துண்ணுதலையும் உதவி என்று கேட்டவர்க்கு அம்மாவின் தாலிவரை கழற்றிக் கொடுத்து உதவி செய்து மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தையும் வளர்த்தார்!
எனக்கு திருமணம் முடிவதற்கு முன்னதாகவே என் தந்தை சிறிய வீடுகள் என்றாலும் மூன்று வீடுகள் கட்டியிருந்தார்! என் திருமணத்திற்கு யாரிடமும் கடன் வாங்காத அளவிற்கு நான் பிறந்த அன்றிலிருந்தே எனக்காக சேமித்தார்! என் திருமணத்திற்கு என்னைப் போன்ற அழகான மணமகன் வேண்டும் என்றும் அரசு வேலையில் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொண்டு என் கணவருக்கு என்னை மணமுடித்துக் கொடுத்தார்! என் திருமணம் முடிந்த அன்று இரவு என் தந்தை வீட்டில் அழுது கொண்டே இருந்தாராம் என் மகளை சீக்கிரம் கல்யாணம் செய்து கொடுத்து விட்டேனே என்ற வருத்தம் அவருக்கு!
என் அப்பாவுடன் வேலைக்கு செல்லும் நாட்களில் எனக்கு எப்படியாவது ஒரு பெரிய அரசுப் பொறுப்பில்வரவேண்டும் என்ற எண்ணமே இருந்தது! இன்றும் அதே எண்ணம் தான் அப்படி சிறுவயதிலேயே வாழ்வின் உன்னதங்களை புரிய வைத்தவர் என் அப்பா! அந்த அப்பாவிற்கு நான் என்ன செய்தேன்? ஒன்றும் செய்யவில்லை! நான் எங்கு சென்றாலும் எல்லோரும் கேட்பது இப்படி ஒரு மகளை பெற்றெடுத்த பெற்றோரை நான் பார்க்கவேண்டும் என்பதுவே! நான் எடுத்த முடிவு "இந்த உலகமே என்னைப் பெற்றெடுத்த பெற்றோரைப் புகழ வேண்டும் என்பதே " நிச்சயம் அதை நிறைவேற்றுவேன்!
என்றும் இறைவன் என் அப்பாவிற்கு தீர்க்க ஆயுசையும் நல்ல உடல் நலத்தையும் சந்தோஷத்தையும் தரவேண்டுமென்பதே என் ஆசை! என் அப்பாவை விட ஒரு புத்தி சாலியும் உழைப்பாளியும் இவ்வுலகில் இல்லையென்றே சொல்வேன் ! அப்பா நான் உங்களை வாழ்த்த வில்லை மனதார வணங்குகிறேன்!
...............சஹானா தாஸ்!