தெரு

தெரு
அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும்
என் வீட்டு திண்ணை தூணை
மூன்று முறை சுற்றி வந்து
நான்காம் முறையில் தட்டு தடுமாறி
தவறி விழுந்து இந்த தத்து பிள்ளை
தன் தாய் மடியில் தன் முதல் கண்ணீர் சிந்தியது
பின்னர் அங்கொரு குழாயடி தண்ணீரில்
பிறந்த மேனியில் என்னை குளிக்க வைத்து
பின் முன்னழகில் நீ என்னை ரசித்து
உன் முன் வழுவால்
மீண்டும் ஒருமுறை என்னை அணைத்து கொண்டாய்
வைகறையில் சூரியனை நீ வரவழைத்து
எனக்கு விடியலை அறிவித்தாய்
அதிகாலையிலும் அந்திமாலை பொழுதிலும்
என் அக்கா உன் தலைவாரி
உன்னை சீரித்து சிங்காரித்து
பன்னீர் தெளித்து குங்கும கோலமிட்டாள்
முதல் சைக்கிளை உருட்டிக் கொண்டு
நடை பயிலும் குழந்தையை போல்
ஏறி இறங்கி
அங்கொரு கல்லிலும்
அங்கொரு குழியிலும் கொண்டு சென்று
நம் முதல் இரத்த பாசம்
முட்டிய முத்தத்தில் தொடங்கியது
முரட்டு வெயிலிலும் மஞ்சள் மாலையிலும்
சந்தோஷமான சனிக்கிழமைகளும்
மறக்க முடியாத பல ஞாயிறுகளும் -உன்னிடமே
பையல்கள் நாங்கள் முழுவதும்
நொண்டி விளையாடி கண்ணாமூச்சி கண்டு
மட்டைபந்து அடித்து பல பேய்கதைகள் பேசி
பிரியா பிணைப்பு பெற்றோம்
தித்திக்கும் தீபாவளியிலும் –மனம்
திகட்டாத பல பொங்கல் திருநாளும்
சலிக்காத பல ஊர்த் திருவிழாக்களிலும்
அலங்கோலமானதோ எங்கள் பேரு
அலங்காரமானதோ இந்த தே(தெ)ரு