நீர்ச் சுழலில் குறைகுடம்

அரிசிக் குழையங்களின்
செரித்தல் சுகம் தவிர்த்து
கோழிக்குழைய
பொரித்தல்களின்
அசீரணவாயு விடுத்தல்களாகிப்
புன்னகைக்கிறது என்
அன்றாடங்கள்....

மேற்கத்தியங்களின்
மின்னணுக் குப்பைகள்
எல்லாம்...
மெருகேறித் திளைத்திருக்கிறது
என் பால்பொடி முதல்
படுக்கையறை வரை....!!!

தொடுதிரை விளையாட்டில்
புதைந்து...
புலர்ந்து சிரிப்பதை
ரசிக்கமறந்து விட்டிருந்த
எனைப் பார்த்து
அழுகிறது பூக்கள்.....!!!

விளம்பரச் சுத்தங்கள்
பழகி
பழக்கப் படாமலேயே
ஒளிர்கிறதென்
அழுக்கேறா சமையலறை.....!!!

ஆண்டுக்கு இருமுறை
வாடிக்கைகள் தேய்ந்துபோய்
அன்றாட வழக்காய்
மாறிவிட்டிருக்கிறது
புத்தாடை சேர்க்கைகள்...

வளர்ச்சியின் செறிவு
எதுவெனத் தெரியாமல்
தலைமுறைகள்
கடந்தும்.... கடத்தியும்
வாங்கிச் சேர்த்தலே
வளர்ச்சியின் அடையாளமென
சித்தரிக்கப்பட்ட
குடியிருப்புகளின் நடுவில்
நான்....!!!

தப்பித்து மீளும்
போதெல்லாம்
தடைக்கல்லாய் வீழ்த்தி
விடுகிறது
பிறர்நோக்குப் பார்வை
சமூகங்களில்
என் பணச்செறிவு
நிலைநிறுத்தத் தேவைகள் .....!!!

தேவையாய் இருக்கிறது
இந்தக் குறைகுட
மாற்றங்கள்...!!! ஏனெனில்..

ஓடுநீர் சுழலில்
ஒட்டைக்குடமாய் சுழன்றால்
மனிதனாகிறேன்...

சுழல்வட்டம் தவிர்த்து
வேர்பற்றத் துணிந்தால்
மனிதர்களாய் அல்லாத
ஏதோவொரு
சாதிக்காரனாகிறேன்....!!!

எழுதியவர் : சரவணா (19-Jun-14, 9:43 am)
பார்வை : 159

மேலே