இப்பனித்துளி மிளிரும் உன்னால்

அடர்நீலவானத்து
அழகான வீதியில்
வெள்ளி விளக்குகள்
உயிர்கொண்டு மினுமினுக்கும்!

உணர்வெல்லாம் கரைந்து - உன்மேல்
உன்மத்தம் கொண்டுநான்
நதிமணலில் கால்கட்டி,
வெகுநேரம் அமர்ந்திருப்பேன்!

அந்நேரம்,
வானத்து வால்மீனாய்,
வருமுந்தன் ஞாபகமென்னை,
வாள்போல் குத்துமடி!

காலைப்பனியை
கதிரவன்வந்து சுட்டாலும்
சுடும்போதேனும் - தீண்டுமவன்
அநுக்கிரகம் பனித்துளிக்குக் கிட்டும்!

சோலைமேல்தவழ் பனியாய்ப்போனேன் –உன்
காணாச்சித்திரம், கார்மேக மழையாய்
வந்தென்னை மண்தள்ளி
வதைப்பதைநா னென்சொல்வேன்?!

ஓடிவருவாய்!
என் நீர்த்திவலை மென்மனம்
மண்ணுக்குள்ளூறி
மறைந்து போகுமுன்னே...

மறைந்து போனால்,
மறுபடியும் மண்ணின்று தளிர்க்கும்
மகத்துவ மந்திரம்நான்
அறியேனடி தோழீ!!


**************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (23-Jun-14, 2:30 pm)
பார்வை : 168

மேலே