நட்பின் முத்திரை

பெண்ணே!

எனது இளமைப் பொழுதினில்
அறிமுகமானவளே!

நீ எனக்கு அறிமுகமான நாட்கள்-
என் வாழ்க்கைப் பயணத்தின்
இனிய நிறுத்தங்கள்!

அந்த இடைவெளியில்
இளைப்பாறல்கள்!

பெண்ணே!

பெயரில்லா முகத்திரையை
நாமிருவரும் அணிந்து கொண்டோம்...

இதயங்களில் இருந்தது
விவரிக்கத் தெரியாத உணர்வுகள்!

மறைத்துப் பேசினோம்
சில நாட்கள்...

மனம் விட்டுப் பேசினோம்
பல நாட்கள்...

அதன் பின்...
அத்தனை திரைகளையும்
அங்கேயே அறுத்தெறிந்தோம்!

நட்பென்ற மூன்றெழுத்தை
நீ எனக்குச் சொல்லித்தந்தாய்!

இதயங்களை நாம்
பரிமாறிக் கொள்ளவில்லை...

உணர்வுகளை
உரசிக் கொள்ளவில்லை...

நடந்தோம் வெகு தூரம்!

எனது வாழ்க்கைப் படகு
இன்னொரு நிறுத்தம் நோக்கி
ஊர்ந்து வந்தது!

பெண்ணே!
எனது இதயத்தின்
அத்தனை அணுக்களிலும்
ஏதாவதொரு ஓரங்களை
உனக்காக ஒதுக்கியுள்ளேன்!

அந்த
இனிய நினைவுகள்
இன்னும் என் இதயத்தில்
பதிந்துள்ளது-

நங்கூரமாய்...
நட்பின் முத்திரையாய்...

30.08.1994

எழுதியவர் : மனோ & மனோ (25-Jun-14, 4:20 pm)
Tanglish : natpin muthtirai
பார்வை : 77

மேலே