அது

எதோவொரு நாளில்
அது எனக்கு
அறிமுகமானது !

அன்றிலிருந்து
அது எனக்கு
உற்ற நண்பன் !

யாராவது
அதைச் சீண்டினால்
எனக்கு
பொல்லாத
கோபம் வரும் !

திடீரென்று ஒருநாள்
அது
என்னைத் தாண்டி
வளர்ந்து நின்றது !

அது சொல்வதையெல்லாம்
கேட்க ஆரம்பித்தேன் !

எனக்கே தெரியாமல்
நானதன்
அடிமையானேன் !

தனக்கான
பெருந்தீனியை
கொண்டா கொண்டா
என
நாலாப்புறமும்
அது என்னை
விரட்டியது !

அதைத்
திருப்திப்படுத்துவதே
என் வாழ்நாள்
இலக்கானது !

சில தனிமைகளில்
அது
பூதாகரமாக
என்னைப் பார்த்துச் சிரிக்கும் !
பயமாக இருக்கும் !

என் நண்பர்கள்
அதைக் கொன்றுவிடும்படி
சொன்னார்கள் !
ஆகவே,
நானதைப் பட்டினி போட
ஆரம்பித்தேன் !

பசியால்
அது துடித்தது !

சிறுகச்சிறுக
அதைக் கொன்று விட்டதாய்
நண்பர்களிடம் சொன்னேன் !

ஒருநாள்
என் மனதின்
பாதாள அறைதிறந்து
உள்ளே சென்றேன் !

அங்கே,
சாதுவாய்
அது
அமர்ந்திருந்தது !

அதற்கான உணவை
அளித்துவிட்டு
" பயப்படாதே
நானிருக்கிறேன் "
என்றேன். !

அது புன்னகைக்க .........

நானும்,
அதுவாகிய நானும்
கைகுலுக்கிக் கொண்டோம் !

============================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (2-Jul-14, 2:22 pm)
Tanglish : athu
பார்வை : 83

மேலே