அவனாகியவன்

சொல்லி கொள்ள சொந்தமின்றி
சொந்த மண் விட்டு
சோகமாய்
வந்தான் அவன்..

உறக்கம் வேண்டாம்
உணவும் வேண்டாம்
கனவுகள் போதும்
என்றான் அவன்..

ஏதேனும் செய்ய வேண்டும்..
எப்படியும்
சாதித்தே ஆக வேண்டும்..
சூளுரைத்தான் அவன்..

போர்வை இல்லை..
ஊசியாய் குத்துகிறது
கொள்ளை குளிர்..
துடித்தான் அவன்..

இரத்தம் இன்றி
ஒளி இழந்த கண்கள்..
சிவப்பு சாயம் பூச
அழுதான் அவன்..

கனவுகளின் வாயிலில்
விசும்பும் தாயின்
முகம் கண்டான்..
நொடிந்தே போனான்..

எண்ணி எடுத்த அரிசியை
உலையில் போட்டான்..
நுரைத்தெழுந்த சோகத்தோடு
நொறுங்கி போனான்..

முயன்று தான் பார்த்தான்
மீண்டும் தோற்றான்..
முயன்று முயன்று
வியர்த்து போனான்..

அதோ..
அந்த கண்ணுக்கெட்டிய
தொலைவில்
சிரித்தபடி நிற்கிறான்..!!

வெற்றி களிப்பா அது..??
இருக்கலாம்..
தோல்வியோடு அவன் புரிந்த
கோர போர்களின்
முடிவாகவும் இருக்கலாம்..

அதுவரை..
எங்கோ இழுத்து செல்கிறது
அவனையும்
அவன் காலங்களையும்
அவனாகிய
அவன் கனவுகள்..

எழுதியவர் : மது (2-Jul-14, 8:29 pm)
பார்வை : 329

மேலே