அக்னி எழுதுகோல் - ✿ சந்தோஷ் ✿
வெறி வெறி
வெறித்தனமாய் எழுதிட வேண்டும்.
கதறி குதறி
கண்டத்துண்டமாய் சிதைத்திட வேண்டும்.
புரவி வேகத்தில்
நரி தந்திரத்தில்- மனித
பிறவி ஞானத்தில்
சீர்கேடுகளை கொன்றிட வேண்டும்.
மரபுகளை உடைத்தெறிந்து
இலக்கணத்தை புறக்கணித்து
புறப்பட்ட புதுக்கவிதைகள் இனி
புரட்சியாளனின் புது ஆயுதமாக வேண்டும்.
எழுதுகோலே..!
என் எழுத்துக்கோலே.....!
உன்னால் என்னால்
என்ன செய்திட முடியும் ?
உன்னால் என்னால்
என்ன செய்திட முடியாது.
அரிப்பெடுத்த சதைப்பன்றிகள் -சிறுமிகளை
கற்பழிக்க முற்பட்டால்
திமிறிக்கொண்டிருக்கும் அப்பன்றிகளின்
ஆண்குறியை மயிரோடு
மயிரின் வேரோடு
வெட்டி கொளுத்தி
எரித்து எரிந்திட
ஓர் அக்னிநாக்காய் நீயாக வேண்டாமா?
மனம் கொந்தளித்து நான் தீயாக வேண்டாமா?
ஒரே ஒருநாள்
பெய்திட்ட
சிறு மழையில்
பெரும் கட்டிடம் இடிந்துவிட்டதாம்
பல அன்றாடங்காய்ச்சிகளின்
பொன்னான உடல்களின்
பிணத்தில் வீசுகிறதாம்
அதிகாரப் பேய்களின்
பணவாடை..!
அந்தோ...! பரிதாபம்..!
அய்யோ....! பாவம்....!
இந்த இந்த
கேடுக்கெட்ட வாசகத்தையா
ஊடக கூலிகளை போல
நானும் எழுதிட வேண்டுமா.?
அந்த இந்த எந்த
அநியாயங்களையும்
அக்கிரமங்களையும்
கண்டும் காணாமலும்
எருமையின் பொறுமையாக
இருந்திடலாமா ?
புதுக்கவிதை வாளெடுத்து
புரட்சி அவதாரம் நாம்
எடுத்திட கால அவகாசம்
இனியும் எதற்கு..?
ஏய் எழுதுக்கோலே....!
என் எழுதுக்கோலே..!
இனி உனக்கு தீனி
மை அல்ல..! அக்னி..!
இனி நான் அப்பாவி
எழுத்தாளன் அல்ல..! ...பாரதீ...!
------------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்