தேசிய பறவைகள் தினம்

🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚

*தேசிய பறவைகள்*
*தினக்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚

பறவைகள்
மனிதர்களை விட
மரத்தின் அருமையை
நன்றாக உணர்ந்துள்ளது....
ஆம்....!
நாம் மரத்தை வெட்டி
வீடு கட்டுகிறோம்
பறவைகளோ
மரத்திலேயே !
வீடு கட்டிக்கொள்கின்றன ......

எந்தப் பறவையும்
பெற்ற பிள்ளைகளை
குப்பைத்தொட்டியில்
போடுவதில்லை .......
முதியோர்களை
அநாதியாக விடுவதுமில்லை...
ஆம்....!!
அவற்றிற்கு
"ஆறாவது அறிவு" இல்லை....

பறவைகள்
காவியுடை உடுத்தாத
'மகான்கள்' தான்....
நேற்றையப் பற்றி
கவலையும் இல்லாமல்
நாளையப் பற்றி
எதிர்பார்ப்பும் இல்லாமல்
இன்றைய தினத்தில்
ஆனந்தமாக வாழ்வதால்......

'ஆறறிவு' படைத்த
மனிதர்களுக்கு
சோறு போட்டுக்கொண்டுள்ளது 'ஐந்தறிவு' படைத்த
கிளிகள்......

சித்த மருத்துவத்துக்கு
மருந்து தயாரித்து
கொடுக்கிறது
மருத்துவக்கல்லூரி
சென்று படிக்காத
தேனீக்கள்......

பயிர்களுக்குத்
தீங்கு செய்யும்
புழு பூச்சிகளை
அழிக்கும்
வேலைகளைச் செய்தாலும்
விவசாயிகளிடம்
கூலி கேட்பதில்லை
சிட்டுக்குருவி மைனாக்கள்....

கிடைத்தது
பழையச்சோறே! ஆனாலும்
பங்கிட்டுச் சாப்பிடும்
காகத்தின் பண்பாடு....
தன்னுடைய
சோடி இறந்தால்
கடைசி வரைக்கும்
தனியாக வாழும்
புறாக்களின் மனக்கட்டுப்பாடு
மனித சமுதாயத்திற்கு
என்று வருமோ....?

ஆசையே !
துன்பத்திற்கு காரணம் என்று
புத்தர்
மரத்தடியில் இருந்து
சொன்னதை
மனிதர்கள்
கடைப்பிடித்தார்களோ
இல்லையோ.....!.
மரத்தின் மீது இருந்து
கேட்ட பறவைகள்
கடைபிடிக்கின்றது.....
ஆம்.....!!
எதையும்
கூட்டில்
சேமித்து வைப்பதில்லையே...!!

கடவுள் நம்பிக்கை
என்பது
தலையில் மொட்டை
போடுவது....
நெற்றியில்
பட்டை போடுவது....
உடம்பில்
மதச்சட்டையை
போடுவதல்ல.......
நாளை
இறைவன்
தனக்கு தேவையானதை
அளிப்பான் என்று
இன்று எதையும்
சேர்த்து வைக்காமல்
நிம்மதியாக தூங்குகிறதே
அதுதான் கடவுள் பக்தி.....

புறாவிற்காக
தன் தசையையே
அரிந்து கொடுத்த
சிபி மன்னர் பரம்பரையில்
வந்த நாம் தான்
சுயநலத்திற்காக
புறாவையே
வேட்டையாடுகிறோம்....

மயிலுக்கு
போர்வை அளித்த
பேகன் பரம்பரையில்
வந்த நாம் தான்...
பணத்திற்காக
தோகைகளை பிடுங்குகிறோம்....

மனிதர்கள்
இல்லாத உலகில்
பறவைகள் வாழ முடியும்.....
பறவைகள்
இல்லாத உலகில்
மனிதர்கள் வாழ முடியாது....

இனியாவது
பறவைகளை நேசிப்போம்...!!
அவைகளைப் பாதுகாக்க
வழி என்னவென்று யோசிப்போம்....!!

*கவிதை ரசிகன்*

🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚

எழுதியவர் : கவிதை ரசிகன் (5-Jan-25, 10:03 pm)
பார்வை : 12

மேலே