சகலமுமானவன் நான் நிச்சயப் பெண்
அம்மாவின் நெஞ்சுவலி
எனக்கும் வந்ததோ...அன்று....
அக்காவின் பிரசவ வலியை விட
செலவுக்கு வழி..?
தம்பியின் கல்விக் கட்டண நச்சரிப்பு....
எல்லாம் என் கண்முன்னே நிற்க...
என் கனவில் வந்தவனை
இரத்தமில்லாமல், சத்தமில்லாமல் கொன்றுவிட்டு,,
என்னைப் பெண்பார்க்க வந்த
சோடாபுட்டி எத்துப்பல் நோஞ்சானை
மனதாரக் காதலித்தேன்
மன்மத வல்லவனாய் நினைத்து.
கல்யாணராமனாக்கி..
என் இரவு வாஞ்சை எண்ணத்தை
கிளறிவிட வழிநெடுக நிற்பார்களே...
முதிர்கன்னியானாலும் பெண்ணை
தனியாக வாழ விடுவார்களா
இந்த நாட்டிலே..
வராது வந்த வரனை
நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போன
நொடியை மறந்துவிட்டேன்,
குடித்துக் குடித்து
சொத்தை அழித்ததுமில்லாமல்
செத்தும்போன அப்பாவை
திட்டி திட்டி சலித்துப்போன
என் அம்மாவின் நிலை
அதைவிட மோசம்.
அறியாப் பருவம் தானே...
வளர்ந்தபிறகு எதிர்த்தா
கேள்வி கேட்கப் போகிறாள்
என்று தொடுத்தாளோ...
உன்னை மன்னவனுக்கு மணமுடிப்பேனடி
என்று தாலாட்டுப்பாடியவள்,
வரதட்சணை மலிவில்
இப்படி ஒரு மாப்பிள்ளையை
பார்த்துவிட்டேனே என் அழகுக் கிளிக்கு
என்று அவள் கண்களில்
ததும்பிய கண்ணீர்த் துளியை
வெளியே வரவிடாமல் இறுக்கினாள்.
எல்லோரும் போனபிறகு
உட்கார்ந்து அழுகலாமே என்று
அவள் கண்கள் கழிப்பறை பக்கம் போனது
என் தலையாட்டல் சம்மதத்தை
கண்டுகளிக்க முடியாததுதானே..
அவள் தவித்த தவிப்பு
எனக்குத் தானே தெரியும்..?