தெளிவு

மகிழ்ச்சித் திளைப்பில் அறிவு மயங்கிடும்
இலக்கை மறக்காதே; கடமை மறக்காதே
புகழ்ச்சி உரைகள் பூரிக்கச் செய்யும்
போதையில் திளைக்காதே; போர்வையில் கிடக்காதே
விரித்த வலையிலே புள்ளினம் சிக்கிடும்
வருந்திப் பயனில்லை; தப்பிக்க வழியில்லை

எதிர்ப்பு வரும்போது விழிப்பு வந்திடும்
தயங்கி நிற்காதே; தடுமாற்றம் கொள்ளாதே!
குதித்து எழவே துடிப்பு மேலிடும்
துவண்டு போகாதே; பயந்து சாகாதே!
பதுங்கும் வேங்கை ஒதுங்கி மறையாது
பாய்ச்சிலில் தெரிந்துவிடும்; பார்வையில் புரிந்துவிடும்

வெற்றி விளிம்பிலும் எச்சரிக்கை வேண்டும்
எட்டாக் கனியாகும்; கைநழுவிப் போய்விடும்
கற்றுத் தெளிந்தவருக்கும் சறுக்கல் உண்டாகும்
செருக்குக் கூடாது; பகையுணர்வு ஆகாது
குற்றம் புரிந்து கெட்டவர்கள் ஆயிரம்
கதைகள் நிறையவுண்டு; கருதினால் நன்மையுண்டு.

எழுதியவர் : குழலோன் (4-Jul-14, 12:24 pm)
சேர்த்தது : குழலோன்
Tanglish : thelivu
பார்வை : 435

மேலே