ஹிந்தி திணிப்பை எதிர்த்த போராட்டம்

ஹிந்தி மொழி தமிழ்நாட்டில் தேவை தானா?ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் நம் தமிழ் சந்ததியினர் மதியிழந்து போய்விட்டனரா?அதனால் ஏற்பட்ட விளைவுகள் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் இன்று வாட்டுகிறதா?
இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகஇருந்தாலும் கூட வெகுஜன மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வரலாற்று அறிவையும் பெற்றுவிடவில்லை.இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட மொழிகள் பாரததேசத்தில் இருந்தாலும் ஹிந்தியை மட்டும் அன்றைய தலைவர்கள் தேசியமொழி ஆக்க வேண்டும் என்று கோரியதற்கு ஹிந்தி மொழி அதிக மக்களால் பேசப்படும் மொழி என்னும் தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதை எதிர்த்து ‘அப்படியானால் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படும் காகத்தை அல்லவா தேசியப் பறவையாக அறிவித்திருக்க வேண்டும்?’ என்று அறிஞர் அண்ணா தொடுத்த கேள்விக்கு இன்று வரை காங்கிரஸ்காரர்கள் பதில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடிய தலைவர்களை எல்லாம் ஹிந்தி மொழியை ஒழித்த துரோகிகள் என்று தூற்றி ஒரு மாபெரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அவலநிலை இன்றுவரை தமிழ்நாட்டில் தொடர்கிறது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் இறுதிக்கட்டத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் பள்ளிக்கூடங்களில் கட்டாய ஹிந்தி அமல்படுத்தப்பட்ட போது பெரியார்,பாரதிதாசன் போன்றோர் எதிர்த்து பிரச்சாரம் செய்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை இனிதே விதைத்து வைத்தனர்.ஆகவே 1965 இல் நடைபெற்றது மட்டுமே ஹிந்தி எதிர்ப்பு என்று நினைப்பது தவறு.
ஆங்கிலேய அரசின் ஹிந்தி திணிப்பு தமிழ் உணர்வாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு 1950 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதாவது இன்னும் 15 வருடங்களுக்கு மட்டுமே ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருக்கும்,பிறகு ஹிந்தி மொழி பாரதத்தின் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டு ஆங்கிலம் துடைத்து நீக்கப்படும் என்று. ஹிந்தி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டால் தென்னிந்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள் ) மூன்றாம் தர குடிமகன்களை போல் நடத்தப்படுவர்.இது தமிழ் தலைவர்களின் முதல்அச்சம்.
ஹிந்தி தெரிந்தால் தான் மத்திய அரசு வேலை கிடைக்கும் நிலை ஏற்படும்.அதாவது ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவன் ஹிந்தி மட்டும் படித்தால் போதும்.தெற்கில் இருப்பவர்கள் மாநில மொழியும் தமக்குப் பரிச்சயம் இல்லாத ஹிந்தியையும் கற்க வேண்டும்.இது ஒரு வித பிரிவினையை உருவாக்கிவிடும்.
இத்தனையும் மீறி ஹிந்தி கற்பதால் என்ன பெரிதாக நிகழ்ந்து விடப் போகிறது? என்று மேலோட்ட சிந்தனையாளர்கள் நினைக்க தோன்றும்.இன்றும் பல ஆங்கில மெட்ரிக் பள்ளிகளில் நவநாகரீக பெற்றோர்களின் பிள்ளைகள் தமிழை விட்டு வேற்று மொழி படித்ததன் விளைவு,இன்று அவர்களால் பேருந்து பலகையை கூட வாசிக்க முடிவதில்லை.தமிழை ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கும் பச்சைத் தமிழ்க் கலைஞர்களை பார்க்கிறோம்.
ஹிந்தி படிக்க வேண்டாம் என்று தமிழகத்தில் யாரும் தடுக்கவில்லை.வேற்று மொழியை கற்க விரும்பாத சோம்பேறிகளின் உளறல்கள் தான் ‘திராவிட கட்சிகள் ஹிந்தி படிக்கவிடவில்லை என்பது.
ஹிந்தி தெரியாத காரணத்திற்காக திராவிட அரசை குறை கூறும் தமிழர்களை போல் ஒரு நாளும் வட இந்தியாவில் இருந்து வேலை நிமித்தம் தமிழகத்திற்கு படை எடுத்து வரும் மக்கள் தன் மாநில அரசை ‘தமிழ் பயிற்றுவிக்கவில்லை’ என்று பொருமியிருக்க மாட்டார்கள்.
எந்த ஒரு இந்தியனும் உலகில் அதிக மக்கள் பேசும் சீன மொழி நம் பாடத்திட்டத்தில் இல்லை என்று இந்திய அரசை தூற்றவில்லை.