வெற்றிமுகம் நூலாசிரியர் திரு நிக்கோலஸ் பிரான்சிஸ் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

வெற்றிமுகம் !

நூலாசிரியர் : திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பிரான்சிஸ் பதிப்பகம், பிளாட் எண் 26, மகிழம்பூ தெரு, பாமா நகர்,
தபால் தந்தி நகர் அஞ்சல், மதுரை-14. விலை : ரூ. 120



“வெற்றிமுகம்”, நூலின் தலைப்பை படித்தவுடன், நூல் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. நூலாசிரியர் நிக்கோலஸ் பிரான்சிஸ் அவர்களின் வெற்றிமுகம், முகப்பு அட்டையில் மிளிர்கின்றது.

நூலை காணிக்கையாக்கிய விதத்திலேயே வித்தியாசப்படுகிறார். “என் மனைவி ஏடா, மகள் கார்மலீட்டா இருவரின் விலைமதிப்பில்லா அன்பிற்கு இந்த ‘வெற்றிமுகம்’ சமர்ப்பணம்!”.

கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, கடவுச்சீட்டு அதிகாரி எஸ். மணீஸ்வர ராஜா, அமெட் கடல்சார் பலகலைக்கழக துணைவேந்தர் கர்னல் முனைவர் க. திருவாசகம் ஆகியோர் அணிந்துரை நூலிற்கு அணி சேர்ப்பதாக உள்ளன.

நூலாசிரியர் திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ், மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூகப்பணிக்கான முதுகலைப் பட்டப்படிப்பில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர். மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், பேச்சாளர், எழுத்தாளர் பன்முக ஆற்றல் மிக்கவர். ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர். அழகுதமிழில் எழுதி உள்ளார். தாய்மொழி தமிழ் இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டு அளப்பரியவை. பாராட்டுக்கள். “ஆளுமை ஆற்றலுக்கான துரித வழி” என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியவர்.

படித்துவிட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது. வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் உள்ளவர்கள், இந்த நூல் படித்தால் சாதிக்க முடியும் என்று உறுதி கூற முடியும்.

நம்மை நாம் உணர்ந்து கொள்ள நமது ஆற்றலை தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள உதவிடும் உன்னத நூல்.

பத்து தலைப்புகளில், முத்தான, சத்தான கட்டுரைகள் வடித்து தன்னம்பிக்கை விதைத்து உள்ளார். “தன்னம்பிக்கை” என்றால் வெளிநாட்டினர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்களை வாசிப்பதை விடுத்து, நம்மவர் மதுரைக்காரர் தமிழில் எழுதிய இந்த நூல் படித்தால் தன்னம்பிக்கை வளரும். முதல் கட்டுரையை, உலகப்பொதுமறையான திருக்குறள் எழுதி தொடங்கி உள்ளார்.

‘வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற’

(திருவள்ளுவர் சொல்லாத பொருளே இல்லை, அனைத்தும் சொன்னவர் அவர்)

நம்மால் முடியும் என்ற உறுதியுடன் முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

மன உறுதி என்பது மிகவும் முக்கியம். அதனை நூல் முழுவதும் நன்கு வலியுறுத்தி உள்ளார். வெற்றி பெறுவதற்கான சூத்திரத்தை எழுதி உள்ளார், பாருங்கள்.

“நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்குத் தோன்ற வேண்டும். அதை நான் முழுமையாக நம்ப வேண்டும். இதுவே சுய முன்னேற்றத்திறகான முதல் படி. அப்பொழுது தான் அந்த எண்ணம் உயிர் பெற்று, வளரத் துவங்கி வெற்றியின் கனிகளைப் பெற்றுத் தரும்”.

“உங்களை நீங்களே நம்பிக்கொண்டு உங்கள் முன்னேற்றத்திற்கு உழையுங்கள்”

கல்வெட்டு போன்ற வைர வரிகள். உழைப்புக்கு ஈடு இணை உலகில் எதுவுமில்லை. விதைப்பதற்கு யோசித்தால் அறுவடை இருக்காது. விதைத்துக் கொண்டே இருந்தால் அறுவடை இருக்கும்.

நமது சிந்தனை, செயல், முன்னேற்றம் நோக்கியதாக இருந்தால் முன்னேற்றம் உறுதி. இந்த நூல் படித்தால் பல்வேறு தன்னம்பிக்கை சிந்தனைகள் நமக்குள் உருவாகி விடுகின்றன. அது தான் ஆசிரியரின் வெற்றி.

பத்து கட்டுரைகளுக்கும் பொருத்தமான பத்து திருக்குறளைத் தேர்வு செய்து திருக்குறள் மூலம் பத்து கட்டுரைகளையும் தொடங்கியது தனிச்சிறப்பு. தன்முன்னேற்ற கருத்துக்களின் கருவூலம் திருக்குறள். உலகின் முதல் தன்னம்பிக்கை பயிற்சியாளர் நமது திருவள்ளுவர் என்பதை உணர்த்திடும் நூல் இது.

பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். அதனால் தான் ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று பொன்மொழி சொன்னார்கள். பேசும் கலை பற்றிய நுணுக்கங்களை விரிவாக விளக்கி உள்ளார். நேர மேலாண்மை பற்றிய கட்டுரை மிக நன்று. நம்மில் பலர் நேரத்தை எப்படி பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்பதை அறியாது, பயனற்ற தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து, நேரத்தை விரையம் செய்து வருகின்றனர். சரியான திட்டமிடுதல், முக்கியத்துவம் அளிப்பது, செயல் அட்டவணை பற்றி விளக்கமாக எழுதி நேரத்தின் அருமையை அருமையாக உணர்த்தி உள்ளார்.

நூலாசிரியர் 1998ஆம் வருடம் இந்திய பண்பாட்டுப் பிரதிநிதியாக அமெரிக்கா சென்று வந்த புகைப்படம் நூலில் உள்ளது. எனவே வெற்றி பெற்ற மனிதரின் அனுபவப் பதிப்பாக நூல் உள்ளது. பாராட்டுக்கள். ஊருக்கு உபதேசம் என்று இல்லாமல் நூலாசிரியரும் எழுதியதை கடைபிடித்து வருகிறார். கடைபிடித்ததை எழுதி உள்ளார். பயனுள்ள நூல். பரவசம் தரும் நூல்.

ஆரோக்கிய எண்ணம், அதாவது நேர்மறை சிந்தனை தான் வெற்றியின் ரகசியம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். ஊக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை ஊக்கத்துடன் எழுதி உள்ளார். வாழ்வியல் நெறியையும் வலியுறுத்தி உள்ளார்.

உண்மை, நேர்மை, நம்பகத்தன்மை, உணர்வுகள் மேலாண்மை, தூய்மையான வாழ்க்கை இவற்றை கடைபிடித்து வந்தால் படித்த வாசகர்கள் அனைவரின் முகமும் வெற்றிமுகமாகும் என்பது உறுதி.

மகாகவி பாரதியார் பாடினாரே, அச்சமில்லை அச்சமில்லை என்று. அதனை வழிமொழிந்து அச்சம் கொள்ளாதே என்ற கட்டுரையில் துணிவை விதைத்து உள்ளார்.

தயக்கம், அச்சம் காரணமாகவே, பலர் நல்ல வாய்ப்பை இழந்து, வெற்றியை தவற விட்டவர்களை நாம் பார்த்து இருக்கிறோம். முடிவு எடுத்தலின் அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார். முடிவு எடுக்க தள்ளிக்கொண்டே சென்றால் வெற்றியும் தள்ளிக்கொண்டே செல்லும். எனவே முடிவு எடுத்தல் அவசியம்.

அறிவே செல்வம் கட்டுரையில் இருந்து சிறு துளி. “அறி” என்ற வினையிலிருந்து அறிவு என்ற பெயர் தோன்றிற்று. “அறி” என்றால் அறிந்து கொள், தெரிந்து கொள் என்று பொருள்படும். அறிவு என்பது புலன்களால் பெறும் முடிவு, எண்ணத்தால் எய்தும் பயன், சிந்தனை, தெளிவு, ஆய்வு, முடிவு போன்றவற்றைப் பொதுவாக குறிக்கிறது.

“உழைப்பின் மேன்மை” கட்டுரையில் உழைப்பின் மேன்மையை, அவசியத்தை நன்கு விளக்கி உள்ளார்.

பொருத்தமான புகைப்படங்கள், நல்ல கருத்துக்கள், மிக நேர்த்தியான அச்சு, நூல் மிக நன்றாக வந்துள்ளது. பாராட்டுக்கள். இந்த நூல் நமக்கு விலையன்று. மூலதனம். ஆம். இந்த நூல் மூலம், பல வெற்றி என்ற வருமானத்தை ஈட்ட முடியும். நூலாசிரியர் திரு. நிக்கோலஸ் பிரான்சிஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

--
--

.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (4-Jul-14, 10:54 pm)
பார்வை : 279

மேலே