அம்மா அப்பா மற்றும் வெறுமை

தொலைக்காட்சியை
வெறித்துக் கொண்டிருந்தார்
அப்பா !
படித்து முடித்த
செய்தித்தாள்
மேசையில் கிடந்தது !
ஒரு மணிநேரத்தில்
முடிந்து போன
இருவேளைச் சமையலில்
அம்மாவுக்குச் சற்றே
ஏமாற்றந்தான் !
கிராமத்தின்
விஸ்தாரங்களில்
சிங்கமென நடைபோட்ட
அப்பாவுக்கு
நகரத்தின் குறுகல்கள்
திகைப்பூட்டின !
ஆசையோடு
அக்கம்பக்கத்திடம்
நட்பு வாங்கப்போன
அம்மா
வெறுமை வாங்கித்
திரும்பி வந்தாள் !
ஆங்கிலத்தில்
' டாட்டா ' காட்டிவிட்டுச்சென்ற
பேரன் பேத்தியிடம்
அம்மாவும் அப்பாவும்
அந்நியமாய்ப் புன்னகைத்தார்கள் !
வீட்டைப் பார்த்துக்கொள்ளும்படி
கூறிவிட்டு
நானும் மனைவியும்
அலுவலகம் கிளம்பினோம் !
சொன்னபடியே,
அவர்கள்
வீட்டைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் !
வீடு
அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் !
==============
- குருச்சந்திரன்