வாசித்துக் காட்டலாமா - ஒரு அலசல்

வாசிப்பை வளர்க்க,வாசகரை கவனிக்க வைக்க வாசித்துக் காட்டலாமா? - ஒரு அலசல்

வாசிப்பு எனும் விடயம் தளத்தில் மட்டுமல்ல பரவலாக எல்லா இடங்களிலும், எல்லா மட்டத்திலும் குறைந்துகொண்டே வருகிறது. தவிர மொழியின் உச்சரிப்புகளும், உரையாடல்களும்கூட அவ்வண்ணமே. இதற்கு முன் மொழியப்படும் சில காரணங்களில் முதன்மையானது நேரமின்மை, ஓரளவிற்கு இதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இல்லையென்றாலும் கேட்க வழியில்லை.

அடுத்ததாக பொறுமை இல்லாதது. "தேநீர் சொல்லிவிட்டு கடைக்காரர் கொண்டு வருவதற்குள் பொங்கிவிடும் அவசர காலம்தான்நம்முடையது. பொறுமையை கற்றுத்தருவதும், கடைபிடிப்பதும் சாத்தியமற்றதாகி விட்டது. ஆக இதை தவிர்க்க வேண்டிய கட்டாயம் பெருகி வரும் இந்நிலையில் இணைய உலகிலும், எழுத்துலகிலும், சில கவிஞர்கள்/படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை ஒலிநாடாவில் பதிவு செய்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் சிலர் காணொளிகளாகவும் வெளியிட முயற்சிக்கின்றனர். இவைதான் இனி வரும் காலங்களுக்கான படைப்புகளின் மீது கவனம் வளர்க்கவும், வாசகர் வட்டத்தை விரிவு செய்யவும், படைப்புகள் உயிர்ப்போடு உலவவும் வழி செய்யும் விடயமாகத் தெரிகிறது. இப்பொழுதே ஒலிநாடா புத்தகங்களுக்கான முயற்சி நடந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.அறிந்திருப்பீர்கள்.

நம் தளத்தில் இதற்கான முயற்சி நடக்குமானால் படைப்பாளிக்கும் வாசகர் வட்டத்திற்கான இணைப்பு பலப்படுவதுடன், தள தோழமைகளின் வாசிப்பும்/கவனிப்பும் பெருகுமென எண்ணுகிறேன். நேரம் நிறைய மிச்சப்படுவதுடன், பாடல் கேட்க விழையும் நேரங்கள் அனைத்தும் வாசிப்பிற்கு/கவனிப்பிற்கு மாறும் வழியுள்ளது. சொந்த குரலில் பதிவு செய்வது படைப்பாளிகளுக்கும் உச்சரிப்பிற்கான திறனை/பயிற்சியை ஊக்குவிக்கும் வாய்ப்பும் உள்ளது.

செய்ய வேண்டுவன:
**படைப்பாளிகள் ஏதேனும் ஒரு எளிமையான ஒலிநாடா சாதனம் கொண்டு சொந்தக் குரலில் தெளிவாக தங்கள் படைப்பை பதிவு செய்து தளத்தில் பதிவேற்றுவது. ( படைப்புகள் கண்டிப்பாக எழுத்திலும் இருக்க வேண்டும் )
**கவிதை எழுதும் பக்கத்திலேயே ஒலிநாடா பதிவை பதிவேற்ற ஒரு நிரல் கொடுப்பது.

தளத்தாரின் சாதக பாதகங்கள் பற்றி அவர்கள்தாம் முடிவெடுக்க வேண்டும். ஆயினும், படைப்பாளிக்கு இது எளிதான விடயமாகத்தான் தெரிகிறது.ஒலிப்பதிவை அந்தந்த கவிதைகளின் கீழ் சொந்த குரலிலேயே பதிவதன் மூலம் படைப்புகள் கவனிக்கப்பட ஒரு எளிமையான தீர்வு கிட்டும் என நம்புகிறேன். காணொளி இணைத்தும் இதை செய்யலாம், ஆயினும் அதற்கான செலவினங்களை கருத்தில் கொள்ளும் பொது, சொந்த குரலிலே கைபேசியிலோ/வேறு சாதனத்தை பயன்படுத்தி ஒலியை பதிவு செய்வது ஆரம்ப காலத்திற்கு போதுமானதாக இருக்கும்.

ஏற்கனவே நம் தளத்தில் நிறைய மாறுதல்கள் செய்திருந்தாலும்,குறிப்பிட்ட இந்த மாறுதல் வாசகனை அள்ளி வரும் வழியை அதிகரிக்கலாம். தளத்தின் படைப்புகள் பெரும்பான்மையாக கவனிக்கப்படுவதும் அதிகரிக்கலாம்.

தளத்தின் பெரியோர்களும், தோழமைகளும் இது பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்வது எல்லோருக்கும் பயனளிக்கும். தளத்தார் கவனத்திற்கும், செயலாக்கத்துக்கும் பெரிதும் உதவும்............. அனைவருக்கும் நன்றி......மீண்டும் சிந்திப்போம் .......

எழுதியவர் : சர்நா (9-Jul-14, 7:13 pm)
பார்வை : 640

மேலே