+செய்யும் தொழிலே தெய்வம்+

காற்று அதன் வேலையை கலங்காமல் செய்கிறது
நீரும் தாகம் தீர்க்கவந்தால் தீர்த்துவிட்டே ஓய்கிறது
நெருப்பும் கூட தயக்கமின்றி எரித்துவிட்டுச் செல்கிறது
நீமட்டும் உன் வேலைநேரம் உறக்கமேனோ கொள்கிறாய்
காவல்காக்கும் நாயின்குணம் திருடன் வந்தால் குரைத்திடும்
நடனமாடும் மயிலின்குணம் மேகம் கருத்தால் ஆடிடும்
கூவித்திரியும் குயிலின்குணம் காலை நேரம் கூவிடும்
வேலைநேரம் வேலைவிட்டே நீ வேறுவேலை பார்ப்பதேன்
செய்யும் தொழிலை வணங்கினாலே வயிறுதானாய் நிரம்பிடும்
பொய்மை விட்டு உழைத்திட்டாலே பெற்றசொத்து நிலைத்திடும்
உண்மைபக்தி உழைப்பில்காட்ட பார்க்கும் உலகம் போற்றிடும்
நன்மை நாளும் உன்னையடைய விருப்பமுடனே வந்திடும்
பார்க்கும் வேலை எதுவென்றாலும் தெய்வமென்றே வணங்கிடு
நேர்த்தியாக வேலை செய்தே நிம்மதியைப் பெற்றிடு
தீரும் பல துன்பமென்றே நிச்சயமாய் நம்பிடு
சேரும் மகிழ்ச்சி சேர்த்துவைத்தே சேர்ந்துவாழ்ந்தே கும்பிடு