வேடிக்கை

சகாதேவன் :

யாருக்காவது உடனடியா ரத்தம் தேவையா ? சகாதேவனுக்கு சொல்லிவிட்டால் போதும், உடனே ஆட்டோ பிடிச்சி, அவனே வந்து, ரத்த தானம் கொடுப்பான். கூடவே, முக நூலில், அவனது நண்பர்கள் இரண்டாயிரத்து சொச்சம் பேருக்கும் ஸ்டேடஸ் போட்டு தெரியப் படுத்துவான். உதவி பண்ணுங்க, ஷேர் பண்ணுங்கன்னு கெஞ்சுவான்.

இது மட்டும் இல்லை, எங்கேயாவது விபத்துன்னா, சகா, தன் கை வேலையெல்லாம் விட்டுட்டு அங்கே ஓடிப்போவான். இருக்கிற காசிலே , அங்கே உதவி செய்கிறவர்களுக்கு, டீ வாங்கிக் கொடுப்பான், ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுப்பான். சுமங்கலமோ அமங்கலமோ இல்லை சோகமான பேரிடரோ , சகாவின் உதவிக் கரம் எப்போதுமே நீளும்.

சொல்லப்போனால், அவன் மொபைல் ரிங் டோனே “தர்மம் தலை காக்கும்! தக்க சமயத்தில் உயிர் காக்கும்!” எம்ஜிஆரின் பாட்டு தான்.



இத்தனைக்கும் அவன் வேலை வெட்டி இல்லாதவன் இல்லேங்க. ஒரு கம்பனியிலே சேல்ஸ்மேன் வேலை.


***

நகுலன்

சகாதேவனுக்கு இரண்டு நிமிடம் முன்பு பிறந்தவன் நகுலன். ஒரே நேரத்தில், ஒரே வயிற்றில் ஜனித்த இரட்டைபிறவிகள். பிறப்பு, வளர்ப்பு, படிப்பு எல்லாம் ஒன்று தான். ஆனால், குணத்தில் எவ்வளவு வித்தியாசம்?

நகுலனுக்கு வெட்டியா வேடிக்கை பாக்கிறதுன்னா, வேர்க்கடலை உருண்டை சாப்பிடறா மாதிரி. அவ்வளவு இஷ்டம்! எங்கே கூட்டம் சேர்ந்தாலும், கைவேலையை அப்படியே விட்டுட்டு, தன்னோட ஸ்கூட்டரை, பக்கத்திலேயே எங்காவது பார்க்பண்ணிட்டு, வேடிக்கை பார்க்க நின்றுவிடுவான்.



ரோட்லே எவனாவது மேன் ஹோலை திறந்து வேலை பார்த்தால் போதும், நகுலனும் தலையை நீட்டி, எட்டிப் பார்ப்பான். சிக்னல்லே, எதாவது மோட்டார் பைக் கார் மேலே இடித்து, சண்டை வந்தாலோ, அங்கே இவன் ஆஜர். முடிஞ்சா உசுப்பேத்தி விடுவான்.

நகுலன் போகும் வழியில், ஏதாவது ஆள் பேரிலே பஸ் மோதி, அந்த ஆள் பரிதாபகமாக கீழே விழுந்துட்டால், அங்கே நகுலன் கூட்டத்தோடு கூட்டமாக நிற்பதை பார்க்கலாம். , சாக்கடையில் ஒரு குடிகாரன் உருண்டு கொண்டிருந்தாலோ,வெயில் தாங்காமல் எவனாவது மயக்கம் போட்டாலோ, நகுலன் ‘உள்ளேன் ஐயா!’ என்று அட்டண்டன்ஸ் போட்டு விடுவான்.

ஒண்ணுமே வேண்டாம், ரோட்லே போற பையன் தன் கையிலே வெச்சிருந்த மட்டன் பிரியாணி பார்சல் தவறி கீழே போட்டால் கூட, அதை வேடிக்கை பார்க்க கும்பல் கூடுமே, அதுலே நகுலன் முதல் ஆளா இருப்பான்.

சார், சார், அவசரப்பட்டு, தப்பா நினைச்சிடாதீங்க. நகுலன் தப்பி தவறி கூட உதவியெல்லாம் செய்துட மாட்டான். அந்த வழக்கமெல்லாம் அவனுக்கு கிடையவே கிடையாது. சுட்டுப் போட்டாலும், அந்த மாதிரி தப்பெல்லாம் அவன் பண்ணவேமாட்டான்.

வேறே என்னய்யா பண்ணுவான்னு தானே கேக்கிறீங்க? நகுலன் , நல்ல வக்கனையா கம்மென்ட் அடிப்பான். அதிலே கில்லி.‘பிரியாணி போச்சே’ன்னு வருத்தப்படற பையனை பார்த்து “ஏன் தம்பி, பார்த்து போகக் கூடாது? கடையிலேயே துன்னுட்டு போயிருக்கலாமில்லே?” என்று நக்கலாக கேட்டு, பையன் வயித்தெரிச்சலை கொட்டிகொள்வான்.

நகுலனுக்கு நக்கலன் என்ற பெயர் இன்னும் பொருத்தம் !

சாலையில் விபத்து நடந்து, ரத்த வெள்ளத்திலே துடிக்கிற ஆளை வேடிக்கை பார்த்துக்கொண்டே “ விபத்துக்கு யார் காரணம்?” என்பது பற்றி, சுற்றி இருக்கிறவர்கள் கிட்டே விவாதம் பண்ணுவான். அதுக்காக ஆம்புலன்ஸ்க்கு எல்லாம் போன் பண்ணமாட்டான்.

“ நான் பார்த்தேன் சார், நடந்து போறவன் பேரிலே தான் தப்பு. வண்டிக்கு குறுக்காலே போனான், அடிபட்டான். நல்லா வேணும் சார் இவங்களுக்கு. என்ன நான் சொல்றது?“.என்று ஹை கோர்ட் தீர்ப்பு வேறு கொடுப்பான்.

நகுலனுக்கு சாலையில் நடக்கும் நிகழ்வு பெரிதா சிறிதா என்பது முக்கியமல்ல. அது அவனுக்கு ஒரு டைம் பாஸ். அவ்வளவே.!



****

நகுலன் அன்று ஒரு வாடிக்கையாளரை பார்த்துவிட்டு, சென்னை கிண்டி பக்கத்தில் வந்து கொண்டிருந்தான். சாலையில் ஒரு ஆட்டோ குடை சாய்ந்து இரண்டு பேருக்கு பலமான காயம். கூட்டம் சேர்ந்து விட்டது. நகுலன் தன் ஸ்கூட்டரை அவசரஅவசரமாக நிறுத்தினான். கூட்டத்தோடு ஜோதியில் ஐக்கியமாகி விட்டான்.

பக்கத்தில் நின்றிருந்த ஒரு தாடிக்காரனிடம் கேட்டான். “என்ன ஆச்சு சார் ?”.

நகுலனை திரும்பி பார்த்து விட்டு அந்த தாடிக்காரன் சொன்னார் ”ஆட்டோ டிரைவர் பேரிலே தாம்பா மிஷ்டேக்கு! வேகமா லெப்ட் சைடுலே ஓவர்டேக் பண்ணான். எதிர்க்க தண்ணீ லாரி வந்துடிச்சுபா. ஆடோ காரன் அடிச்சான் பாரு ப்ரேக்! ஆட்டோ அப்பிடியே மல்லாக்க கவுந்திடுச்சு. பாவம், உள்ளே இருந்த சவாரிக்கும் அடி பலம்பா. ரெண்டு பெரும் பொழைக்கிறது கஷ்டம்”

“அட பாவமே!” கேட்டுக்கொண்டேயிருந்தபோது, நகுலனின் கூரிய பார்வை அங்கே அடிபட்டு விழுந்திருப்பவர்களை பார்த்தது. “அங்கே பாருங்க ! டிரைவர் கால் லேசா ஆடுது பாருங்க. உயிரு இன்னும் இருக்கு போலிருக்கு. சீக்கிரம்ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகலைன்னா, அந்த ஆளு மேலே போக டிக்கெட் வாங்கிடுவாரு. போலீஸ், ஆம்புலன்ஸ் இன்னும் வரலியா?”.

“அவனுங்க எங்கே நேரத்துக்கு வந்திருக்கானுங்க? எல்லாம் முடிஞ்சப்புறம் மெதுவா வருவானுங்க! சினிமா மாதிரி! ”தாடிக்காரர் சிரித்தார். அந்த மொக்கைக்கு பதில் கடி கொடுக்க நகுலன் தீவிரமா யோசிக்கஆரம்பிக்கும் போது, அவன் அலைபேசி அழைத்தது.

“நகுலா! எங்கே இருக்கே?”. மறுமுனையில் கொஞ்சம் கவலை தோய்ந்த குரலில் அவனது சுபெர்வைசர்,

“இங்கே தான் சார், தாம்பரம் பக்கத்திலே! இன்னும் ஒரு மணி நேரத்திலே வந்திருவேன் சார்!”.

“சரி, சீக்கிரம் வா, உன் தம்பி சகாதேவனை பில்ராத் ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணியிருக்காங்க. நீ உடனே அங்கே வா!”

“சார், என்ன சார் ஆச்சு என் தம்பிக்கு? காலைலே கூட நான் அவன் கூட போன்லே பேசினேனே!” நகுலனின் குரலில் பதற்றம்.

“என்னமோ, சரியா தெரியலே நகுலன். உங்க அம்மா தான் போன் பண்ணாங்க. உன் தம்பி அமிஞ்சி கரை பக்கம் வந்துக்கிட்டுருந்தான் போலிருக்கு. அங்கே ஏதோ ஜாதி கலவரமாம். அது நடுவிலே இவன் மாட்டிகிட்டான். எல்லாரும் ஓடியிருக்காங்க. இவன் பாவம், கூட்டத்திலே சிக்கி, கீழே விழுந்திருக்கான். எல்லோரும் இவனை மிதிச்சிகிட்டே ஒடியிருக்காங்க. வயிற்றிலே ஒரு உடைந்த கண்ணாடி கிழிச்சி, அங்கேயே மயக்கமாயிட்டான். நல்லவேளை, அவன் பிரெண்ட் பார்த்து உடனே பில்ராத்லே அட்மிட் பண்ணிட்டான். ரத்தம் கொஞ்சம் போயிருக்கு.ஆபேரஷன் பண்ணனுமாம். வேறே பயப்பட ஒன்னுமில்லையாம்.”

“சரி சார், நான் உடனே போய் பார்கிறேன். தேங்க்ஸ் சார் ”

“இப்போ தான் உன்னை கேட்டு உங்க அம்மா கிட்டேயிருந்து போன் வந்தது. ரொம்ப நேரமா உனக்கு ட்ரை பண்ணாங்களாம். நீ எடுக்கலேன்னு எனக்கு பண்ணாங்க! ஏன் எடுக்கலே ? ”

“வண்டி ஒட்டிகிட்டிருந்தேன் சார்”

“சரி, முதல்லே உங்கம்மாக்கு போன் பண்ணி பேசு !”


****
நகுலன் பில் ரோத் ஹாஸ்பிடல் போகும் போது, சகாதேவன் படுக்கைக்கருகில் அவனது நண்பர் இருபது பேர் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அத்தனை பேரும், சகாதேவனுக்காக ரத்தம் கொடுக்க முன் வந்தவர்கள் . ரத்தம் தேவைப் படலாம் என டாக்டர் சொன்னவுடன், ரத்த தானம் செய்ய நான் நீ என நண்பர் பட்டாளம் சேர்ந்து விட்டது.


ஒரு நண்பன் கேட்டான் “ தலை, நீ பிழைச்சது பெரிய விஷயம்பா. நேரத்திலே உன்னை இங்கே சேர்க்கலைன்னா கொஞ்சம் பிரச்சனையாயிருந்திருக்குமாம். டாக்டர் சொன்னாரு. ஆமா! உன்னை இங்கே யாரு அட்மிட் பண்ணது?”

சகா சொன்னான் “தெரியலே இஸ்மாயில். நான் மயக்கத்திலே இருந்தேன். தாமஸ்னு அட்மிட் கார்ட்லே பேர் போட்டிருந்தது. டாக்டர் சொன்னாரு”

“யாரு தாமஸ்?”

“அதான் யாருன்னு சரியா எனக்கு நினைவுக்கு வரல்லே”. சரி, இஸ்மாயில், உனக்கு எப்படி நான் இங்கேயிருக்கறது தெரியும்?”

“கேசவன் தான்ம்பா எனக்கு போன் பண்ணி உனக்கு ரத்தம் தேவைப் படும்னு சொன்னான்”
“கேசவன் எங்கே ? “

“இங்கே தான் இருக்கேன் மச்சான். வயித்திலே அடி பட்டு நீ மயக்கமா இருந்தே. ரத்தம் வேறே சட்டை எல்லாம் நனைஞ்சு. நல்ல வேளை, நானும் தாமசும் உன்னை சமயத்திலே பார்த்தோம். அதை விடு! . நீ பிழைத்ததே பெரிய விஷயம் . உனக்கு இப்போ எப்படியிருக்கு? அதை சொல்லு . பரவாயில்லையா?” –கேசவன்

சகாதேவன் “ எனக்கு ஒண்ணுமில்லேடா! டாக்டர் சொல்லிட்டார், நல்ல நேரத்திலே என்னை அட்மிட் பண்ணிட்டாங்களாம். நாலு யூனிட் போதுமாம். ரொம்ப தேங்க்ஸ் எல்லாருக்கும் ! டாக்டர், இவங்க எல்லாரும் என் நண்பர்கள். உங்களுக்கு எப்போ தேவையோ, இவங்களுக்கு போன் பண்ணினா, இவங்க குரூப் ரத்தம் உங்களுக்கு கிடைக்கும். என்னடா, உங்க எல்லோருக்கும் ஓகே தானே?”

“டபுள் ஓகே” கூட்டத்தில் அனைவரும் கோரஸ் பாடினார்கள்.

கூட்டத்தோடு நின்று கேட்டுகொண்டிருந்த நகுலன், முணுமுணுத்தான். “வேறே வேலையில்லை இந்த சகாவுக்கு, எப்ப பாரு தானம் பண்ணு, தர்மம் பண்ணுன்னு சொல்லிக்கிட்டு”.

அப்போது நகுலனுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தவன் சிரித்தான். “நீங்க சொல்றது சரிதான்! ” .

திரும்பிய நகுலனுக்கு ஆச்சரியம். கொஞ்ச நேரம் முன்பு கிண்டி பக்கத்தில் பார்த்த தாடிக்காரன். “ அட நீங்களா ! இப்போதானே கிண்டி பக்கத்திலே பார்த்தோம். அதுக்குள்ளே இங்கே! நீங்க சகாதேவன் நண்பரா?”.

தலையை ஆட்டிவிட்டு அந்த தாடிக்காரன் நகர்ந்து விட்டான்.

தம்பியுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, நகுலன் ஆஸ்பிடல் வாசலுக்கு வந்து தன் வண்டியை எடுத்தான்.

***

அடுத்த நாள்.

நகுலனுக்கு ரொம்ப வருத்தமான நாள்.

பின்னே என்ன, தெருவில் ஒரு விபத்து கூட கண்ணில் மாட்டவில்லை. ஒரு ஆர்பாட்டம், சண்டை ஒன்னும் நடக்கவில்லை. மோடி மஸ்தான், மூலிகை விக்கறவங்க, குடிமகன் இப்படி ஒருத்தர் கூட டைம் பாசுக்கு அகப்பட வில்லை.

அங்கும் இங்கும் பார்த்து கொண்டே ஸ்கூட்டரில் வந்தவன், எதிரில் வந்த லாரியை பார்க்கவில்லை. லாரி டிரைவரும் மப்பில் இருந்ததால், நகுலனை பார்க்கவில்லை.

லாரியும் ஸ்கூட்டரும் நீண்ட நாள் பிரிந்த காதலர் போல சந்தித்துக் கொண்டன. ரொம்ப நெருக்கம். “டமால்”. இடையில் மாட்டிய நகுலன், அப்பளம் போல உடைந்தான். மண்டையில் பலமான காயம். அவனை சுற்றி ஒரே ரத்தம். கண்கள் இருட்டிக் கொண்டே வர, மயக்கமானான்.




நேரம் போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு போனது என்றே தெரியவில்லை. மெதுவாக கண்ணை விழித்தான். அவனை சுற்றி ஒரு இருபது பேர்,அவனையே பார்த்துக் கொண்டிருந்தது போல மங்கலாக தெரிந்தது. உடலை அசைக்க முடியவில்லை. வாய் திறக்க முடியவில்லை. நா குழறியது. “தண்ணீ! தண்ணீ!”. ஈனமாக முனகினான்.

கூட்டத்திலிருந்த ஒருவன், “டே மச்சி, ஆள் க்ளோஸ் டா. பாரு, எவ்வளவு ரத்தம்? மண்டைலே அடி. இவன் நிச்சயம் பொழைக்க மாட்டான் ! ”
இன்னொருத்தன் சொன்னான் “ கஷ்டம்பா! அடிபட்டு சாவருத்துக்கின்னே வரானுங்கோ !.ரோட்டை பார்த்து வரவே மாட்டனுங்கபா” .

நேரம் போய்க்கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து யாரும் உதவிக்கு வருவதாக இல்லை. ஒவ்வொருவரும் ‘இவ்வளவு பேர் இருக்காங்களே,நமக்கென்ன வந்தது?" என நினைத்தார்களோ என்னவோ?

நேரம் போய்க்கொண்டிருந்தது. நகுலனுக்கு வலி பிராணன் போய்க்கொண்டிருந்தது.

சில கார் ஓட்டிகள், போகிற போக்கில், தங்கள் ராஜ பார்வையை நகுலன் பக்கம் திருப்பி விட்டு “த்சோ த்த்சோ” போட்டு விட்டு சென்றனர்.

இன்னும் சிலர், தங்கள் ஸ்கூட்டரை நிறுத்தி நகுலனை பார்த்து விட்டு “ஐயோ பாவம்! யாரு பெத்தபிள்ளையோ?” சொல்லிவிட்டு தங்கள் வழியே சென்றனர். கொஞ்சம் பேர், நமக்கெதுக்கு வம்பு என்று, கொஞ்சம் தள்ளியே வண்டியை ஒட்டிக் கொண்டு சென்றனர்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. இங்கே நகுலனுக்கு உயிர் போய்க் கொண்டிருந்தது. “ஹெல்ப்! ஹெல்ப்! “ நகுலன் கதறினான். வாய் எழும்பவில்லை. சுற்றி நின்ற யாரும் உதவிக்கு வரவில்லை. வேடிக்கை பார்த்ததோட சரி.

கூட்டத்தில் யாரோ சொன்னார்கள் “அந்த ஆள் உதடு அசையிது பாரு.” கூட இருந்தவன் சொன்னான், “மச்சி, நீ போய் அவனை தொட்டுடாதே, பின்னாடி பிரச்னையாயிடும். அவன் பொழைக்க சான்சே இல்லை!”

நேரம் போய்க்கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தை கிழித்து கொண்டு ஒரு தாடிக்கார ஆள் வேகமாக வந்தான். நேராக விழுந்து கிடந்த நகுலனிடம் போனான். “கையை கொடு. எழுந்துக்கோ!” என்றான். “அட என்னை காப்பாற்ற கூட ஒருத்தன் வரானே!”. ஆச்சரியத்துடன் நகுலன் கையை நீட்டினான். கூட்டம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது.

தாடிக்காரன் நகுலனை தூக்கினான். அவனை பிடித்து கொண்டு நகுலன் எழுந்தான். “எப்படி என்னால் எழுந்துக்க முடிந்தது? கண் இப்போ நல்லா தெரியுதே! அட நீங்களா? நீங்க எங்கே இங்க?”

தாடிக்காரன் சொன்னான் “உங்க பின்னாடி தான் வந்து கிட்டிருந்தேன். சரி வாங்க போகலாம்! “ .

கூட்டம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. தூரத்தில் ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்டது. நகுலன் தற்செயலாக கீழே குனிந்தான். தரையில் ரத்த வெள்ளத்தில் , அசைவற்று ஒரு உடல். நகுலன். ”நானா அது! நானா கீழே கிடப்பது ? அப்போ நீங்க யாரு?.”

”நாந்தான் யமதூதன் !. நேத்தி உன் தம்பியை தூக்க வந்தேன். அவன் கிட்டே நெருங்க முடியலே. அவன் ஆயுசு கெட்டி. இன்னிக்கு உன்னை தூக்கிட்டேன். சரி, வா, நாம போகலாம்.“


****முற்றும்



விவேகானந்தர் சொன்னது :

உன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணமும் , செயலும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை நிரந்திரமாக பாதுகாக்க தயராக இருக்கிறது என்பதை நீ எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். பிரதிபலன் கருதாமல் , நாம் உலகிற்கு செலுத்தும் ஒவ்வோர் நல்ல எண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கபடுகிறது அத்தகைய நல்ல எண்ணம் நமது கர்ம சங்கிலியை ( கர்ம வினையை ) இணைக்கும் வளையம் ஒன்றை உடைத்தெறிகிறது “

எழுதியவர் : முரளி (12-Jul-14, 2:49 pm)
Tanglish : vedikkai
பார்வை : 148

மேலே