என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

மண்ணில் நடக்கும்
அட்டூழியங்களை
வானம் பார்த்து
வடித்தது விழிநீர்
மழையாய் ....!

ஒவ்வொரு துளியும்
சொல்லால் அடித்தது
துடிக்கச் செய்தது !

எங்கெங்கு காணினும்
கொலை கொள்ளையடா
கண்டும் கைகட்டப்பட்டு
கலங்குகிறேன் என்றது !

பாலியல் வன்கொடுமை
பாரினில் அரங்கேறுவதை
பார்த்தும் பாராமுகமாய்
பரிதவிக்கிறேன் என்றது !

தீவிரவாதம்
தீராவாதமாய்
உலகை உலுக்குவதைக் காண
உள்ளம் பதறுகிறதே !

மதங்களின் பெயரால்
மனிதன் கீழ்த்தரமாய்
சண்டையிட்டு மாய்வதை
சகிக்க முடியவில்லையே !

விளைச்சல் நிலத்தை
வளைத்து வாங்கி
கூறுபோட்டு விற்றால்
விவசாயம் என்னாகும் ....
மண்ணைத் தின்பீரோ ....??

நீர்நிலைகளை மேடாக்கி
அடுக்கடுக்காய் அடுக்கினீர்....
அஸ்திவாரம் ஆட்டங்கண்டு
சீட்டுக்கட்டாய் சரிந்தபோது
மனம்தாளாமல் அழுதேன்
உறைந்து விழுந்தேன் ....!

காலத்தின் கோலமோ
கலாச்சாரம்
காலாவதியாகி விட்டதோ ?
கவலையில்
கண்ணீர் வடிக்கிறேன் !

வனங்களை அழித்தீர்
இயற்கை சிதைத்தீர் !
என்னையும் பொழியவிடாமல்
பொய்க்கச் செய்யும்
புண்ணியவான்களே ......!!
நீரின்றி அமையாது உலகு
அறிவீர் ....
நீர் வாழ .....
நான் அவசியம்
உணர்வீர் ......!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jul-14, 8:51 pm)
பார்வை : 119

மேலே