இருள் விளக்கு
நல்லது என்று விளங்கியவை எல்லாம்
நல்லதாய் இருந்ததில்லை
நல்லதாய் இருக்க வேண்டியது கூட
நல்லதாய் இருந்ததில்லை
இருளுக்குப் பயப்படாதவன் எவனுமில்லை
பயப்படத் தகுதியானது இருளும் இல்லை
இருள் உன்னை மறைத்துக் கொள்கிறது
ஒளியோ உன்னைக் காட்டிக் கொடுக்கிறது
ஆரம்பமாய் ஆதிமுதல் இருப்பது இருள்
அத்துமீறி அடக்குமுறையில் நுழைவதே ஒளி
முதல்குடி நானென்றும்
வந்தேறி நீயென்றும்
பிரதேசவாதம் பேசிடுமா இருள்?
விட்டுக்கொடுப்பென்றால் அது இருள்தான்
தொட்டுக்கொள்ள ஒளிக்கு இடம் கொடுக்க
நிழலென்று தூரம் துரத்திவிட்டது இருளை
பொறுமைக்கு இலக்கணம் பூமியல்ல
ஒளி மறையும்வரை பொறுத்திருக்கும்
இருள்தான் பொறுமைசாலி
ஒளியைக் கண்ட இருள்
பொருளுக்குப் பின்னால் ஒளிவதை
கோழைத்தனம் என்று நினைத்து
பெருமைப்பட்டதாம் ஒளி
ஒளிச்செறிவு கூடக் கூட
நிழல் இன்னும் கறுத்தது
தெளிவான ஒளியில்தான் நிழல்
தெளிவாகத் தெரிந்தது
கோழைத்தனம் தெளிவடையாதென்று
ஒளிக்குத் தெரியுமா என்ன?
விட்டுக்கொடுப்பை இயலாமையென்று
ஒளி நினைத்தது
விட்டுக்கொடுத்தலே வீரமென்று
இருள் விளங்கி வைத்திருந்தது.
இருள் ஒருபோதும் வர்ணபேதம்
பார்த்ததே இல்லை
ஏழுநிறப் போலி ஒற்றுமை
நீரில் பட்டதும் பிரிந்து போனது
ஒளித்தொகுப்பு செய்வதாக
பெருமைப்பட்டது ஒளி
உண்மையில் உணவுத்தொகுப்பு
அந்தரங்க அரங்கேற்றமாய்
இருள்தாக்கத்தில் நடந்தது
கருந்துளையின் சக்திகளை
ஒளித்துகள் ஒருபோதும்
அண்டத்தில் கொண்டதில்லை
கருஞ்சக்தி என்னவென்று
குறைபுத்தி ஒளிக்கற்றை இதுவரைக் கண்டதில்லை
இருள் என்பது உயிர்களுக்கு அருள்
காதலர்களுக்குப் பிடித்தமான பொருள்
தூங்கவைத்து நிம்மதி தருவது இருள்
இருளைக் காதலிக்கும் வெளவாலாக
கண்ணிழந்து களிப்புற அந்தமானோர் உண்டா?
இருள்தாக்கம் - dark reaction
கருந்துளை - black hole
கருஞ்சக்தி - dark energy