பூங்கொத்திற்கு தீயிட்டது யார்

நினைவில் இருக்கிறதா
இந்த நாள்?
பத்தாண்டுகளுக்கு முன் இந்நாளில்
உதிக்காமலேயே அணைந்திருக்கலாமே
சூரியன்?!

நெஞ்சுகளை பல
உருக்கிய தீ...
இளம்பிஞ்சுகளை பல
கருக்கிய தீ...
அது, கண்ணீர் விட்டே
அணைந்த தீ...

மரமே சவப்பெட்டிக்கு
விறகு தந்து,
பூச் சொரிவது போல,
பாட சாலையே
பிள்ளைகளுக்கு
பாடை ஓலைகள்
பின்னித் தந்ததே!

கல்வி தேடி வந்த பிள்ளைகள்
கூரைத் தீயினுக்கிரையானதே, பாரதி!
இதில்,
"தேடு கல்வி இல்லா ஊரை
தீயினுகிரையாக்கச்" சொன்னாயே நீ!
இந்த பூங்கொத்தினுள்
பந்தம் வீசியது யார்?

கற்ற வைத்த பள்ளியே,
பற்ற வைத்து விட்டதா?

உரிமம் தந்த அதிகாரிகளே,
உயிரை பிடுங்கிய சதிகாரர்களா?

கூரை வேய்ந்த வகுப்புகளை,
பெற்றோரும் மறந்தது தவறில்லையா?

அல்ல,
விட்டில்கள் ஆகியே பிள்ளைகள்
ஆயின தழல் தழுவிய பொம்மைகளா?

யாதாயினும் காரணம்,
மனதில்
தீயினால் சுட்ட மனப்புண் இது!

வெப்பக் கண்ணீர் துளிகளால்
ஓர் இதய அஞ்சலி,
தொண்ணூற்று நான்கு மொட்டுகளுக்கும்!

எழுதியவர் : வைரன் (16-Jul-14, 10:46 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 733

மேலே