பசுமை உலகில் படர்
நன்றிகள் சொல்ல விளைந்தால் வேளாண்மை
ஒன்றே உலகுக் கினியது - நன்றாய்
விசுவாசம் தன்னை புவித்தாய்க்கு காட்டிப்
பசுமை உலகில் படர் !
கண்போல் நமைக்காத்த பூமிமுலைப் பாலினை
உண்டே நாம்வளர்ந்தோம் பின்புபோய் - மீண்டும்
கொசுவாய் யவள்ரத்தம் தீர்ப்போமோ? வேண்டாம்
பசுமை உலகில் படர் !
எங்குதான் போனதோ நம்முலகு? மானிடர்நாம்
தங்குதற்கு இடமுண்டே யானாலும் - இங்கு
பசுமாடு மேய்வதற்குக் கூடஇடம் இல்லை
பசுமை உலகில் படர் !
பச்சைப் பசும்வயல் பாரெங்கும் மண்வாசம்
இச்சைக் கினியதாய் நெல்மணிகள் - மிச்சத்
திசுக்களை யாவது வருடட்டும் ! வாராய்
பசுமை உலகில் படர் !
-விவேக்பாரதி