என்பாட்டனுக்குப் பத்து குறள்

1. ஈரடியா லுலகளந்த வாமனனிற் பெருந்தகையாம்
ஒன்றரையோ டொருக்காலா லளந்ததகை.

2. பச்சிளம்பாலர்க்குத் தாய்ப்பாலும் பண்பிலா மூடர்க்கென்
முப்பாட்டன் முப்பாலுங் குறி.

3. நித்யமறியிலீர் நிலையிலீர் மூடர்காள் கண்கொள்வீர்
அகரமுதல அடிசேரா தார்.

4. என்புதோல்போர்த்தி நல்ஞான முட்கொண்டோன் வையத்துள்
இலக்கண மீந்தா னன்பிற்கு.

5. உள்ளும்புறமும் அழுக்கணிந்து அணிபயின்றீர், பயில்வீர்
ஒழுக்கம் சொன்னானென் வள்ளுவன்.

6. ஈகஈயளவேனும்பின் னீட்டுவீரிணையிலா யின்பமுள்மனத்தே இதை
விளங்கிட விளங்குவீர் ஈகை.

7. தூரமிலங்கும் பொருளினுமாசை கொண்டோம் துறவுகொள்வோம்
பின்காணு மின்பம் ஆழி.

8. கற்றலின்சிறப்பை கற்றோன்சொல் லியம்பிற்று; இவ்வுலகில்
நிற்றலுக் குறுதுணையாம் கல்வி.

9. நட்பின்நாற்றம் நுகருதியோ?! இல்லையேல் ஊட்டும்
குறளெனும் நறுமலர் உவந்து.

10. எல்லாம்பாடிவிட்டா னென்பாட்டன் அவன்பேற்றை நாயேநான்பகறல்
ஒட்டைச்சுவரின்வழி காணும் கைக்கடலே.

*****************************************************************************************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

*****************************************************************************************************************************************
விரிவு:

1. அன்று வாமனன் மகாபலியை ஆட்கொள்ள வேண்டி, கீழுலகையும் மேலுலகையும்
அளக்க அவருக்கு இரண்டடிகள் தேவைப்பட்டது... ஆனால் தம் 'ஒன்றே முக்காலடி'
திருக்குறளால் அனைத்தையும் அளந்து விட்டாரே திருவள்ளுவப்பெருமான்?! எனில்,
திருமாலினும் பேறு பொருந்தியவர் இவரென்றல்லவோ கருத வேண்டும்?

2. தளிரிளம் குழந்தைகட்கு எவ்விதம் தாய்ப்பால் மிகவும் இன்றியமையாததோ? அவ்விதமே,
பண்பற்றுத் திரியும் மூடர்க்கு, என் முப்பாட்டனாகிய திருவள்ளுவப்பெருமானின் 'அறம், பொருள்,
இன்பம்' எனும் முப்பாலடங்கிய திருக்குறளைப் பருகுதலும் இன்றியமையாததே.
(திருக்குறள் 'உணர்ந்தவர்கள்', பண்புடைத்தோர் என்பது மறைமுகப் பொருள்)

3. எது நிலையானது என்று அறியாமலிருக்கும்; நிலையற்ற;
இன்றோ நாளையோ அழியப்போகிற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் மூடர்களே,
கண்டுகொள்ளுங்கள், திருக்குறளின் "அகர" எனத் துவங்கும் பாடல் முதலாக "சேரா தார்" என
முடியும் பாடல் வரையிலான பாடல்களை.

எது நிலையானது என்பதை, அது உங்களுக்கு உணர்த்தும்.

4. என்னையும் உன்னையும் போன்றே, எலும்பும் தசைகளிலுமாய் ஆன, ஆனால்
எனக்கும் உனக்கும் இல்லாத நிறைஞானத்தை நிறைவாய்க் கொண்ட ஒருவன் (வள்ளுவன்),
இவ்வுலகத்தில் அன்பு செய்வதெங்கனம் என்பதற்கு அழகிய இலக்கணம் அளித்தான்.

5. உள்ளே மனத்தூய்மையில்லாமல், புறத்திலும் தூய்மையை கடைபிடியாது,
வீண் பகட்டிலும் ஆடம்பரத்திலும் திளைத்து கூட்டம் கூட்டமாய் திரிவோரே....
உள்ளும் புறமும் ஒழுக்கமுடன் இருப்பதெங்கனம் என அன்றே வள்ளுவன்,
வரையறுத்துக் கூறிவிட்டான். முதலில் அதைப் பயிலுங்கள்.

6. தம்மினும் வறியவர்க்கு, மிகச்சிறிய (ஈ) அளவிலேனும் உதவி செய்க.
அவ்விதம் தன்னலம் கருதாமல் செய்யும் தர்மத்தினால், இவ்விதம் இருக்கும் என்று
அளவிட்டுக் கூறவொண்ணா இன்பம், உங்கள் உள்மனத்தில் பெருக்கெடுக்கும்.

திருக்குறளில் ஈகை எனும் அதிகாரத்தின் பத்து பாடல்களை ப் விளங்கிக்கொள்ளுங்கள்.
ஈகை என்பது என்னவென்பது தானே விளங்கும்.

7. தமக்குச் சொந்தமிலாத, தம் தகுதிக்குமப்பாற்பட்ட பொருட்களின் மீதெல்லாம்
ஆசைக் கொண்டோமே? அதனால் என்ன பயன்? அது கிட்ட வேண்டுமே என்ற ஏக்கமுடன்,
கிட்டாமல் போகும்போது, கிடைக்கவில்லையே என்ற நிராசையும் உடன் சேர்ந்து நம்மை
வருந்தத்தானே செய்கிறது?

தாமரை இலைபட்ட தண்ணீராய், தம் கையில் பொருலிருந்தும் அதன் பேரில்
மோகம் கொள்ளாமல், அது கையை விட்டு நீங்கினால் வருந்தாமலிருக்கும் வரம் பெற்றோர்க்கு,
கடல்போன்று பெரும் அளவில் இன்பம் காத்திருக்கிறது.

8. படித்தும், கேள்வி ஞானத்தின் மூலமும் ‘கற்றலின்’ சிறப்பை, நிரம்பக்கற்றோனாகிய
வள்ளுவப்பெருமானின் சொல் அன்றே அறிவித்துவிட்டது. அத்தகு சீர்மிகு கல்வி,
செய்யவேண்டுவது யாது? வேண்டாதன யாவை? எது அறம்? எது மறம்? என்பனவற்றையும்,
அவற்றினால் விளையும் பலன்களையும் உணரச்செய்து உன்னை
இவ்வுலகில் வாழ்வாங்கு வாழச் செய்வதுவாம்.

9. நல்ல நட்பின் மணத்தை இதற்குமுன் அனுபவித்ததுண்டா? நல்ல நட்பின் இலக்கணம்
என்ன என்பதை அறிந்திருக்கிறீர்களா? நல்ல நட்பை தேர்ந்தெடுக்கும் திறமுண்டா?
இல்லையேல் கவலை வேண்டாம்.

ஏனெனில், மேற்சொன்ன எல்லாவற்றையும் உவந்து போதிக்க
திருக்குறள் உங்களுக்காய் காத்திருக்கிறது.

10. மக்கள் உடலாலும், உளத்தாலும் நல்வாழ்வு வாழ, செய்ய வேண்டுவன
வேண்டாதன எல்லாமும் அன்றே என் முன்னோனாகிய வள்ளுவப்பெருமானால்
சொல்லப்பட்டு விட்டது. இன்று அவன் புகழை ஒன்றுமறியானாகிய நான் பாட முயலுதலும்,
அவன் பாடிய பாடல்களின் பொருளுரைக்க முயலுதலும்,

ஒருவன்,
சுவற்றிலிடப்பட்ட ஓட்டையின் வழியாக கடலைகண்டு, அந்த கடலின் அளவு
எனது உள்ளங்கையின் அளவே என சொல்வதைப்போன்றதாம்.

*****************************************************************************************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (18-Jul-14, 10:02 am)
பார்வை : 1979

மேலே