ஒருவள்

கருக்கப்பட்ட எண்ணமதில்
மடிந்து போன
நிஜங்களை அள்ளி
சிதை மூட்டுகிறேன்
காற்றோடு பற்றி
எரியட்டும் கனவுக்கூட்டில்
கல் எறிந்த
கொடும்பாவி கைகள்
வணங்கிய வாழ்வை
வாட்டியவர் பொசுங்கிப் போய்விட
எரிதழல் அணைத்துத்
துணை சேர்க்கிறேன்
கதறி வீழும்
நொடிகளின் கண்ணீர்
தேங்கி அழுகிப் போயின
வளர்த்த நகங்கள்
திக்கற்ற நடுக்காட்டில்
திசை தேடி அலையும்
ஊர்க்குருவியாய் உள்மன
அலைகழிப்புகள்
இறகுகள் பொருத்திப்
பிறந்திட்ட புதுமை
வானம் அளக்க
வழி சொன்னது
வாழ்க்கைப் பயணங்களுக்கு
வெட்டி வீழ்த்திய
கால்கள் வேராகிப்
போன வீரம் இங்குண்டு
மையென்று கரியள்ளிப்
பூசிய விரல்கள்
பொய்த்திடத் தேடுகிறேன்
தனியொரு மனிதம்!!