தெய்வாதீனம் 4 எதிர்பாரா சந்திப்பா இறைவன் திட்டமா- 2
1990-ஆம் ஆண்டு நாங்கள் டெக்ஸஸ் மாகாணத்தின் தலை நகரமாகிய ஆஸ்டினில் இருந்தோம்.  நான் ஒரு civil engineering கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.  எங்கள் மகள் (சௌமியா) டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பு படித்துக் கொண்டிருந்தாள்.  அவளும் அவளைப் போல், இங்கு வளர்ந்து, இளங்கலை வகுப்பிலிருந்த வேறு சில இந்திய மாணவர்களும் சேர்ந்து, புதிதாக இந்தியாவிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு உதவியாக ஒரு வரவேற்புக் குழு அமைத்திருந்தனர்.  அவர்கள் செயல் பட்ட விதம் பல்கலைக்கழக அயல்நாட்டுமாணவர்கள் இலாகாவே செய்ததுபோல் இருந்தது.
இப்பொழுதெல்லாம் கணினித்துறை வளர்ச்சியினால் பலரும் அமெரிக்காவுக்கு வேலை செய்ய நேரடியாக வருகிறார்கள்.  தொண்ணூறுகளுக்கு முன்னே மருத்துவர்களைத் தவிர மற்றவர்கள் வேலை செய்ய நேரடியாக வர முடிந்ததில்லை.  மேற்படிப்புக்கு வந்து பிறகு வேலை கிடைத்துத் தங்கினவர்கள் தங்குவார்கள்.  சிலர் இந்தியா திரும்பிவிடுவார்கள்.
அப்படி M. B. A. படிக்க வந்தவர்களுள் வெங்கடேசும் ஒருவர்.  அவர் ஆஸ்டின் வந்து இறங்கியதும் அவரை வரவேற்க (அவர் எதிர்பார்த்த) நண்பர் விமான நிலையத்திற்கு வரவில்லை. நல்லகாலம் வெங்கடேசிடம் சௌமியா குழுவிடமிருந்து வந்த கடிதமும், அதில் எங்கள் வீட்டு தொலைபேசி எண்ணும் இருந்தது.  இரவு 11 மணிக்கு விமான நிலையத்திலிருந்து ஃபோன் வந்தது.  தங்குவதற்கு இடமில்லாமல், வெங்கடேசன் அன்றிரவு எங்கள் வீட்டில் தங்க நேர்ந்தது.
மறுநாள், நான் அவரை அழைத்துச் சென்று, வங்கிக் கணக்கு திறக்கவும், வாடகை வீடு தேடி அமைக்கவும் உதவினேன்.
மூன்றாம் நாள் காலை வென்கடேசனிடமிருந்து ஃபோன் வந்தது.
"சார், நான் உங்களுடன் பேச வேண்டும்".  சரியென்று போய் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
"என்ன விஷயம்?"
"நான் எதிர்பார்த்தபடி இல்லை.  நான் இப்பவே திரும்பிப் போய்விடலாமென்று நினைக்கிறேன்"
"திரும்பிப் போனால் வேலை இருக்கா?  வந்ததுக்கும் திரும்பிப் போறதுக்கும் ஏர் டிக்கட் செலவுக்கு வாங்கிய கடனைத் தீர்க்க முடியுமா?"
அப்போதெல்லாம், விமானச் செலவுக்கு வாங்கிய கடனைத் தீர்க்க ஆயுள் முழுதும் இன்தியாவில் சம்பாதிக்கும் பணம் போதாது!
"இல்ல சார்.  ஏங் கம்பெனில எடுத்துப்பாங்க.  எல்லாம் யோசிச்சேன்.  கடன சமாளிச்சுடலாம்"
"வெங்கடேஷ்.  கொஞ்சம் இருந்து யோசிங்க.   இப்ப திரும்ப வேண்டிய அவசியம் என்ன?  ஒரு ஸெமஸ்டர் பாருங்க."
"சார் இங்க படிப்பும் ஒண்ணும் நான் நனச்ச மாதிரியா இல்ல.  ரொம்ப ஏமாற்றமா இருக்கு.  டயத்த வீணடிக்காம திரும்பிப் போறதுதான் சரின்னு படுது"
"வெங்கடேசன்! நீங்க இப்பதான் வந்திருக்கீங்க.  வந்த அலுப்பு, இட மாற்றம், சூழ்நிலை மாற்றம் எல்லாம் சேர்ந்து ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்க.  ஊர்ல அம்மா, மனைவி, குழந்தையப் பிரிஞ்சிரிக்கீங்க வேற.  இந்த மன நிலல நீங்க சரியா யோசிச்சு முடிவுக்கு வர நிலல இல்ல. நீங்க கொஞ்சநாள் - ஒரு ஸெமஸ்டர் பாத்துட்டு - 'சார்.  எல்லாம் நன்னாதான் இருக்குங்க.  ஆனாலும் இந்தப் படிப்பு ஒண்ணும் பிரயோசனப்படாது. திரும்பிப் போறதுதான் நல்லது'ன்னு உங்க மனசு தெம்பா இருக்கும்போது சொன்னா அதை எடுத்துக்கலாம்"
ஒருமாதிரி ஒப்புக் கொண்டு விட்டடவர் போல் தெரிந்தது.
ஒரு ஸெமஸ்டர் முடிந்த பின் ஒருநாள் ஃபோனில் "சார்.  நல்ல காலம் அன்னக்கி நான் உங்கள வந்து பாத்துப் பேசினேன்.  கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் புரிபடுது" என்று கூறி நன்றி தெரிவித்தார்.
பிறகு சில நாட்களில் தாய், மனைவி குழந்தையையும் அழைத்து வந்துவிட்டார்.  இன்னும் அமெரிக்காவில்தான் இருக்கிறார் -  ஒரு கல்லூரியில் பேராசிரியராக!

