ராதை, சீதை, ஊர்மிளை

அவளும் நானும் அப்படித்தான்.

அர்த்தமோடும் அர்த்தமில்லாமலும் நாள் கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்.
அவள் பேச ஆரம்பித்தாளானால்... எனக்கு, வந்த காலையையும் தெரியாது;
பின்பு அந்திசாய்ந்து, போன சூரியனையும் தெரியாது.

பூ மலர்ந்ததும் நாசியை வருடும் வாசமாய், அவள் உரையாடலில்
மணங்கமழும். நானும் அமுதுண்டவனைப் போல அயர்வேதுமின்றி
அவள் அழகு மொழியில் திளைத்திருப்பேன்.

“ஒன்றுமே தெரியாதெனக்கு” என்று பவ்யமாய்ச் சொல்வாள்.
ஆனால், ஒன்றைச் சொன்னால், அது இவ்விதமில்லை...
இப்படித் தானிருக்குமென்று எந்தத் துறையிலும் அவள் விவாதம் செய்யும்
அழகில் அவ்வப்போது லயித்துப் போவேன் நான்.

இதிகாசங்கள் பேசுவாள்... அதை அவள் கற்றுணர்ந்து சொல்லும் விதம்,
ஆஹா! அழகே அழகு!!

உடனே, குழந்தைகளோடு சேர்ந்து பொம்மைப்படம் பார்க்கவேண்டும்,
போகிறேனென்பாள்.

அதைக்கேட்டு நான் சிரிப்பேன்.
அவள் முறைப்பாள். அவள் முறைப்பால் என் சிரிப்பது வெடிக்காமல்,
வாய்க்குள்ளே அடங்கிப் போகும்.

தேனின் சுவையை நாவால் தான் உணருதற்கியலுமென்று
யார் சொன்னார்கள்? அவள் மொழியின் இனிமையால்
எந்தன் செவியுமதை உணர்ந்துக் களிக்கும். திளைக்கும்.

அன்றும் அப்படித்தான், வந்ததும் கேட்டாளென்னை...
“ராதை, சீதை, ஊர்மிளை இவர்களில் யார் சிறந்தவர்கள்” என்று.

நான் சொன்னேன், “ஊர்மிளை”

அவள் கேட்டாள், “ஏன்?”

“ராதைக்குக் காதல் கொள்ள, கண்ணன் கிடைத்தான்...
சீதை பெரும்பான்மை நேரங்களில் வனவாசமிருந்தாலும்
கணவனுடன்தான் பொழுதைக் கழிக்க இருந்தாள்”

“அப்போ... நீ கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு
உன்னோட அண்ணா கூட போ. நான் வீட்லயே இருக்கேன்னு
சொன்ன ஊர்மிளா பெஸ்ட். அப்படியா?”

“அப்படி இல்லை”

“வேற எப்படி?”

“வனவாசமென்றாலும் அன்பு கொண்ட கணவன் அருகிலிருக்க..
ஒரு தூய்மையான பெண்ணிற்கு (சீதைக்கு) அதுவே சொர்க்கம்...
ஆனால், ஊர்மிளைக்கு அந்த சொர்க்கமும் கிடைக்கவில்லை......
உண்மையான அன்பு கணவனிடமிருந்தும், அவன் விடைபெறும் போது,
தன் தாங்கவொண்ணா துயரத்தைத் தாங்கிக் கொண்டு
எங்கு அதை உணர்ந்தால் கணவனும் வாடிப் போவானே என்று
தன்னைக் கட்டுப் படுத்தி, சோகத்தை மறைத்தவாறே அவனைப் பார்த்துப்
‘போ’ என்கிறாள்....பின்பு விழித்திருந்தால் சோகம் நம்மை
வாட்டுமென்றெண்ணி தன் பொழுதைத் தூங்கியே கழித்தாளென்பர்”

“சீதையும் அப்டி ஒண்ணும் சொர்க்கத்துல வாழ்ந்துடலயே?
ஏன் சீதா கூட இப்டி ராமனைப் போகச் சொல்லிட்டு சோகமா
தூங்கிக்கறேன்னு சொல்லி இருக்கலாம் தானே?!” சீதை ஏன் இல்லை?
ஒருத்தங்க சிறந்தவங்கன்னு சொல்லும்போது
மத்தவங்க ஏன் இல்லைன்னும் சொல்லணும் தானே?!”

“ஊர்மிளை, தன் சோகத்தைத் தாங்கிக் கொண்டாள்.
தான் கணவனுடன் செல்வதைத் தவிர்த்ததினால், கணவனுக்குத்
தன்னால் வரும் துன்பங்களையும் தவிர்த்தாள்.
சோகம் இல்லாதவள் போல் காட்டிக் கொண்டதன் மூலமாக,
லக்ஷ்மணன் இவள் நிம்மதியாயிருப்பாள் என்று எண்ணுமாறு செய்து
அவனுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தாள்.
இதனால் ஊர்மிளை சிறந்தவள்...”

“அப்போ கூட போனதுனால சீதா தொல்லையா ம்ம்?”

“உடன் சென்றது அன்பின் வெளிப்பாடு.
ஆனால் பொன்னாலொரு மானிருக்கும் என்பது இயற்கைக்குப் புறம்பானது
என்பதை அறிந்திருந்தும் கணவனிடம் அதை வேண்டினாளே... சீதை!?”

“சீதா யார்? அத சொல்லுங்க முதல்ல.
அவ என்ன.. ஏதோ ஒரு மிடில்- க்ளாஸ் பொண்ணா?
அவ ஒரு ராஜா மகள் சார். சூப்பர் ஹீரோ ராம்-ஐ ஒரு பார்வைல
சைட்ட் அடிக்கவச்ச பொண்ணு தானே? ம்ம்?"

“ம்ம்ம் ம்ம்ம்..”

“கோல்டன் மானைப் பார்த்தது ராம் கூட தான். அது இயற்கை இல்ல,
கேக்காதனு ஏன் சொல்லல அவன் ம்ம்? அவ காதல் ஊர்மிளைய விட
கொறஞ்சது இல்லை”

“நான் அவளை குறைந்தவள் என்று சொல்லவில்லையே?!
மூன்று பேரும் சிறந்தவர்கள் தாம்.
அவர்களில் உயர்ந்தவர் யாரென்று தானே குறிப்பிட்டேன்?
அது இயற்கையில்லை கேட்கவேண்டாமென்று ராமன் சொல்லாததற்கு
அவனுக்கு அவளிடத்திலிருந்த அன்பும் காரணமாயிருக்கலாம்.
மேலும் அவள் இதுவரை அவனிடம் எதுவும் கேட்டதும் இல்லையே?”

“சும்மா எல்லா சுகத்தையும் விட்டுட்டு, காட்டுல இருக்கேன்னு போறது
க்ரேட் தானே? அவ கேட்டான்றதுனால இயற்கைல இல்லாதத கொண்டு வந்து தரேன்னு
சொன்ன ராமன் மேல தானே தப்பு?”

“அன்பு அதிகமாகும் போது, காதல் அதிகமாகும் போது,
அது இல்லாததையும் கூட கொண்டு வந்து கொடுக்கப் பார்க்கும் “

“அப்போ கேட்ட சீதா மேல மட்டும் நீங்க எப்படி குறை சொல்லலாம் ம்ம்?”

“அப்பாவிடம் காசு இல்லை...
அவரிடம் பிறந்த நாளுக்காக ஒரு சிறியபரிசை கேட்கிறாய்.
நீ இதுவரை அவரிடம் வாங்கித் தருமாறு எதையும் கேட்டதே இல்லை.
அப்பா என்ன செய்வார்?”

“கண்டிப்பா இயற்கைல கெடைக்காத பொருள்-னா, கெடைக்காது...
வேற சாய்ஸ் சொல்லுடா-னு சொல்வார். இதுல ராம், மானை
அவர் கண்ணால பாத்திருக்கார். நோட் பண்ணிக்கோங்க”

“சரி அதையும் குறித்துக் கொள்கிறேன். இயற்கையில் கிடைக்கும்
பொருளாயிருந்தால் அப்பா என்ன செய்வார்?”

“அவர் சக்திக்கு முடியும்னா முடியும்னு ட்ரை பண்ணுவார் வாங்கித் தர..”

“ம்ம்ம்ம்.....
அதைத்தான் ராமனும் செய்தான்.. அது மாய மானாய் இருந்தாலும் கூட
அவன் அதை பிடித்துவிட்டானே?”

“இதுல எந்த பாய்ன்ட்-ல சீதை கொறஞ்சு போறான்னு சொல்லுங்க..”

“முடியாத பொருளை கேட்டிருக்க வேண்டாம்.
கேட்டால் அதை எப்படியாவது பெற்றுத் தரவேண்டும் என்பது
அன்புள்ளவர்களிடம் இருக்கும் அடிப்படை...
அவள் லக்ஷ்மணனை தகாத முறையில் பேசி
ராமனிடத்தில் அனுப்பினதிலும் குறை இருக்கிறது.”

“ராம் மானைப் பிடிச்சிட்டார்ன்றது நீங்களே சொன்ன ஸ்டேட்மென்ட்.
அப்றம் எங்க அது முடியாத பொருள்னு ஆகுது ம்ம்?

இது என்னங்க? அன்பு இருக்கறவங்க கேக்கறத வாங்கித் தரணுமுன்னு
சொல்ற நீங்க, அப்டி அன்பு இருக்கவங்களுக்கு ஆபத்துன்னா கூட
ஒரு ஆள அனுப்ப ட்ரை பண்றது தப்புன்னு சொல்றீங்க?”

“லக்ஷ்மணனுக்கு அண்ணன் ஆபத்தில் விழமாட்டான் என்று தெரியும்.
அதை அவன் சீதையிடம் தெளிவுபடுத்துகிறான். அதற்கு பின் சீதை
அவனை எவ்விதம் சாடுகிறாள்?”

“அதுதாங்க காதல். அவனுக்கு தெரிஞ்சா போதுமா?
அவ ஃபீல் பண்ணணுமில்லையா ராம் பாதுகாப்பா இருக்கார்னு?!"

“கணவனின் மீது காதல் இருக்கலாம். ஆனால் தாயாய் நினைத்தவனை
தவறாக அல்லவா பேசுகிறாள்?”

“ஹலோ... அவ பேசினத நாம நேர்ல பாக்கல. அவளோட உயிர், ராமன்.
ஒரு நல்ல மனைவி, காதலி அவன காப்பாத்த தான்
எப்படியும் முயற்சி பண்ணுவா..
அதுல, இது தான் சரின்னு யாரும் சொல்ல முடியாது”

“சரி தான். அறிந்ததை வைத்து மட்டுமே நம்மால் சொல்ல இயலும்”

“இப்டி பேசினாதான் லக்ஸ் போவான்னு தெரிஞ்சதுனால
அவ அப்டி சொல்றா”

“ஓ!”

“ஏன் நம்ம வள்ளுவர் சொல்லயா? பொய்மையும் வாய்மையிடத்துன்னு ம்ம்?”

“ம்ம்...”

“ஒருத்தர் மேல தப்பு கண்டுபிடிக்கறது ரொம்ப ஈஸி சார்”

“ம்ம்.. நீ சொல்வதும் சரிதான். தவறு கண்டுபிடிப்பது நம் கடமையல்லவே”

“கடமையோ இல்லையோ... இப்டி ராமாயணம் பாரதம் கேரக்டர்ஸை
நாமே இப்படிதான்னு முடிவு பண்ணிட கூடாது.
நீங்க ராதை பத்தி சொன்னது கூட
என் பாய்ன்ட் ஆஃப் வ்யூ-ல தப்பா தான் தெரியுது”

“ஓ அப்படியா! அதையும் சொல்லேன் திருத்திக் கொள்கிறேன்...”

“நம்ம கம்பர் வால்மீகி-லாம் கவிதை சொல்றவங்க தானே?
கவிதைல கற்பனை கலந்திருக்கும் தானே?
அவங்களை எவ்ளோ நம்பளாம்னு நீங்களே சொல்லுங்களேன்.
அவங்க கிட்ட பேசி பாருங்க. யோசிச்சுப் பாருங்க. நெறைய புரியும்”

“ம்ம்.. நிச்சயம் கேட்கிறேன்.. சொல்வார்கள் என்று தான் நினைக்கிறேன்...
யோசித்தும் பார்க்கிறேன்”

“ம்ம்ம்... சீதா கூட பெஸ்ட் கேரக்ட்டர் தான்...”

“ம்ம்ம்...”

“அவ ராம் கூட போகாம ஊர்மிளை மாதிரி
வீட்லயே ஸெட்டில் ஆகியிருந்தா நாம எப்படி கதை படிக்கறது?”

“ம்ம்ம்... சரி தான்”

“தங்க மான்-னு கதைல ட்விஸ்ட் இல்லைனா, நமக்கு ராமாயணம் இல்லை...”

“ம்ம்ம்...”

“ம்ம்.. அப்றம் ராமாயணம் சோக படம் மாதிரி போயிருக்கும்.
சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் ஆகியிருக்காது.
அதனால சீதா தான் மெய்ன் ஹீரோயின்.
ஊர்மிளை ரெண்டாவது ஹீரோயின்.
நல்லத அவங்க கிட்டயும் படிச்சுக்கணும்.சரியா?”

“சரி.. சரி..”

“இவங்க ரெண்டு பேரையும் விட சூப்பர் லேடி, ராதை..”

“ஓ! அப்படியா?”

“அவ க்ரேட் கண்ணன் தோழி.
நீங்க, அவ கண்ணணோட காதலினு ஸ்டேட்மென்ட் குடுத்திருக்கீங்க,
மறந்துடாதீங்க...”

“ம்ம்ம்.. இல்லையா?”

“இல்லை. ராதை கண்ணனோட காதலின்னு சொல்லிக்கறது சும்மா”

“பிறகு?”

“அவ கண்ணனோட பெஸ்ட் ஃப்ரெண்ட். கண்ணன விட பெரிய பொண்ணு”

“ஓ!”

“அவன் குழந்தையா இருக்கும் போதே...
அவ, கொஞ்சம் பெரிய பொண்ணு தான். டீன் ஏஜ்-ல னு இருந்திருக்கலாம்.
அப்போ எப்படி காதலி ஆவா?!
கண்ணன், அவ தூக்கி வளர்த்த குழந்தைனு நான் சொல்வேன்”

“அப்படியா? இது தெரியாதே?!”

“ம்ம்.. தெரிஞ்சுக்கோங்க. இப்போ நாம எல்லாம் இல்லையா?
பக்கத்து வீட்ல குழந்தைங்க இருந்தா, அதுக்கும் நம்மள பிடிச்சிருந்தா
சேர்ந்து ஆட்டம் போடுவமே அப்டி தான் இது”

“ம்ம்ம்”

“கூட நாளெட்ஜ் ட்ரான்ஸ்ஃபரும் இருக்கும்..
பெரிய பொண்ணு இல்லையா.... அவ சொல்லி குடுத்திருக்கலாம்”

“ம்ம்ம்... அப்படியென்றால், ராதை குரு, கண்ணன் சிஷ்யன்...”

“கண்டிப்பா!”

“எனக்கு இதுவரை இது தெரியாதே?!”

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ராதை, கண்ணனோட காதலி இல்லை”

“மொத்தத்தில், ராதை, சிறந்த அறிவாளி; நல்ல ஆசான், சிறந்த தோழி.
சரிதானே?”

“அப்டி தான்னும் சொல்லலாம்”

“ம்ம்ம்”

“கோகுலத்துல அவன் இருந்தது குழந்தை ஸ்டேஜ்-ல தான்.
டீன் ஏஜ்-ல அவன் அரசன் ஆய்ட்டான்.
அப்போ கோகுலத்து காதல்னு சொல்றது தப்பா தானே இருக்கும்?”

“அப்படித்தான் தோன்றுகிறது...”

“ரொம்ப பழைய புக்-ல கூட, கண்ணனை குழந்தையாகவும்,
ராதையை பெரிய பொண்ணாவும் தான் காட்டி இருக்காங்க..
நீங்க ரெஃபர் பண்ணி பாருங்க”

“ஓ! கண்டிப்பா பாக்கறேன்...”

“வேர்ல்ட்-ல இருக்கற எல்லா விஷயமும் தண்ணி மாதிரி.
நாம பாத்திரம் மாதிரி. நம்ம வடிவத்துக்கேத்த மாதிரி
அத நாம புரிஞ்சுக்கணும். எந்த ஒரு கதையும் காவியமும் பொய் கலக்காததுன்னு
யாராலயாவது சொல்ல முடியுமா ம்ம்?
ஏன் ஒரே ராமயணத்த, கம்பர் ஒரு மாதிரி,
வால்மீகி ஒரு மாதிரி தானே சொல்லி இருக்காங்க? “

“ம்ம்ம்... அது பொய்யா? மெய்யா என்று ஆய்வதைக் காட்டிலும்
அதில் இருக்கும் வாழ்வியல் நுட்பங்களை நாம் எடுத்துக் கொண்டு
முன்னேற்றம் காண்பதே சிறப்பானது. சரிதானே?!”

“ம்ம்.. கரெக்ட். அது தான் அந்த ‘க்ரேட் ரைட்டர்ஸ்’ எதிர்ப்பார்க்கறதும் கூட.
அறிவு இருக்கறவன் புரிஞ்சுகிட்டு என்ன தேவையோ அத எடுத்துக்கட்டும்னு
மொத்தமா கதைக்குள்ள குடுத்துருக்காங்க.
சும்மா அட்வைஸ் மாதிரி குடுத்தா யார் படிப்பாங்க சொல்லுங்க?”

“ம்ம்ம்...நூற்றுக்கு நூறு உண்மை”

“ம்ம்ம்... அறிவாளிங்க ஒன்லி, ‘சீக்ரெட் ஆஃப் த ஸ்டோரி’ என்னன்னு
கண்டுபிடிக்கட்டும்ன்றது அவங்க லாஜிக்”

“ம்ம்ம்... புரிகிறது”

அவளின் ஆராய்ச்சியில் முகிழ்த்த சொற்கோவையை
இதழ்களில் இள நகையோடு ரசித்துக் கொண்டிருக்கும் போதே,
“அப்பா வந்துவிட்டார் போக வேண்டும்” என்று எழுந்து கொண்டாள்.

“இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாமே கண்மணி” என்றேன்.

“கண்மணி இதுபோல் கதை சொல்லனுமா? வேண்டாமா?” என்றாள்.

“வேண்டும். வேண்டும்” நான் சொன்னேன்.

“அப்டின்னா, கண்மணி இப்போ போக வேண்டும். வேண்டும்.
சீக்ரமா போனா, அப்பாகிட்ட கத கேட்டுட்டு வந்து நாளைக்கு சொல்வேன்.
என்ன போகலாமா? ம்ம்?” என்னிடம் வினவினாள்.

அவளுடன் இருக்கவேண்டுமென்று மனம் வெகுவாய் விரும்பிடினும்...
சரியென்று அரைகுறை மனத்துடன் கையசைத்து விடைகொடுத்தேன்.

சிரித்துக் கொண்டே சிட்டென பறந்து மறைந்தாள் அவள்.

ம்ம்ம்... வருவாளவள் நாளை.

நமக்கு, இன்னொரு கதை கிடைக்கும் :) :) :)


*****************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (30-Jul-14, 5:13 pm)
பார்வை : 696

மேலே