விழியதிகார நாயகி ✿ சந்தோஷ் ✿
விழியதிகார நாயகி
--------------------------
பேருந்துவின் அந்த
இருஇருக்கையில்
இணைந்து அமர்ந்து
அவளுடன்
ஒரு பயணம்.
என்
இடது தோளில்
அவளின்
வலது தோள்
உரசிப்பேச-
நாடி நரம்பில்
காமப்புரவி ஒட
என் மனதில்
காதல்புரளி எழும்ப.
புதுப்புதுசாய் அவளுடன்
உளறிக்கொண்டிருக்கிறேன்
இப்படி....
எலுமிச்சை சாதம்
ஏன் மஞ்சளாக இருக்கிறது?
தக்காளி சாப்பாட்டில்
தக்காளி அவசியமா?
பாயசத்தில் முந்திரிக்கு
என்ன நாட்டாமை வேலை.?
பிரியாணியில் கோழி
எப்படி முட்டையிட்டது ?
என் கேள்விகள்
எல்லாவற்றுக்கும் பதிலளித்தது
அவளின் செவ்விதழ்.
கவனமாய் கேட்பதுப்போல
என் தலைகள்
ஆடியது.
ஆனால் கவனங்கள்
தடுமாறியது
அவளின் இதழ் நாட்டியத்தில்
என் விழிகள்
சொக்கி கிறங்கிட
விசில் சத்தம்.
காதை பிளந்திட்டது.
படுப்பாவி கண்டக்டர்.
அவள் இறங்கிடும் நிறுத்தம்
அறிவித்து அறுத்தான்
என் உணர்ச்சி கிளர்ச்சியை...!
பேருந்துவிலிருந்து
இறங்கிவிட்டாள்.
நான் எழுதிய கவிதையை
யாரோ பிடுங்கிச்சென்ற
ஏமாற்றவலி...!
சற்று நொடியில்
சட்டென்று திரும்பி
ஒரு புன்னகை பூத்து
கைவிரல் விரித்து
டாட்டா காட்டிய
அவளின் விழியில்
எழுந்த காதல் மின்னல்
எழுதியது என்னுள்
ஆயிரமாயிரம் கவிதைகள்.
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அவளுக்காக
மற்றுமொரு விழியதிகாரம்.
என் விழியதிகார நாயகி
ஆதிக்கம் செலுத்துகிறாள்
என் இதயக்கோட்டையில்...!
-----------------------------------------------------------------------
-இரா. சந்தோஷ் குமார்