நட்பு

'நட்பு' எனும் மூன்று எழுத்து,
நான்கு வருடம் படித்து,
பிரிவு எனும் மூன்றெழுத்து தேர்வை எழுதும்போது
கண்ணீர் துளிகள் தான் பேனா மையாகிறது!
எழுதும் முன்னே,
என்ன எழுதுவேன் என அறிந்துக்கொள்கிறாள் தோழி!
எழுதி முடித்த வரிகளின் வலிகளை உணர்ந்து
அணைத்துக்கொள்கிறான் தோழன்!
தோழனோடு கதைகளும்,
தோழியோடு கடலைகளும்,
நினைத்து, நினைத்து சிரிக்கிறேன்,
நினைத்து, நினைத்து அழுகிறேன்!
நண்பன் சொல்லி தந்த பாடங்கள் மறந்தேவிட்டன,
அந்த 'ஒரு ஜோக்' இன்னமும் ஞாபகம் இருக்கிறது! :)
'காதல் என்றால் என்ன?' - ஒவ்வொரு நண்பனிடமும்
நான் கேட்ட கேள்வி!
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பதில்,
விடை கிடைத்தது - 'நட்பு என்றால் என்ன?' - என்ற கேள்விக்கு!
பாடலின் ஆரம்பம் அவன் பாட,
இடையில் நானும் இணைய,
பாடல் முடியும் - பக்கத்து அறை நண்பன் குரலோடு!
'யாருடா அந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர்?' என சத்தமாக இன்னொரு குரலும்!
கைபேசி பாட, நானும் பாட,
'யுவன்'-ஆகவே மாறியிருப்பேன் நான்!
பாவம் என் நண்பர்கள்!
இவை எல்லாம் நினைத்து, நினைத்து
நிழற்படங்களை பார்க்கிறேன்,
பார்ப்பது என்னவோ நிழற்படம் தான்,
ஆனால் காட்சிகள் ஓடுகின்றன....!