இதுவும் வெற்றிதான்

என்னுடைய பல கனவுகளை
அவன் திருடி இருக்கிறான்
நான் விதைத்ததையெல்லாம்
என் அனுமதியின்றி
அறுவடை செய்திருக்கிறான்
எனக்குத் தெரியாமல்
என் வானில்
வானவில்லை வரைந்துவிட்டு
மறைந்து கொள்வான்
நான் செப்பனிட்ட தோட்டத்தில்
தன் உணர்வுகளை
நடவு செய்திருப்பான்
எங்கோ எப்போதோ
சிந்தைக்குள் பூட்டிய
எனது
ஆசைளைக் கொள்ளையடித்து
தன்னுடையதாக்கி
வெற்றி விழா கொண்டாடுவான்
எனது பாதையில்
தனது பயணத்தைத் தொடர்ந்து
சாதனைக்குச் சொந்தக்காரனாவான்
இப்படியான...
பல இழப்புகளுக்குக் காரணமான
அவனை
நான் முந்திச் செல்ல
முயற்சிக்கும் பொழுதெல்லாம்
தோற்கிறேன்... தொடர்ந்து...
என்றாலும்
என் நண்பனிடத்தில் தோற்பதில்
நான்
வெற்றிபெறுகிறேன்!!!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (3-Aug-14, 1:43 pm)
Tanglish : ithuvum vetrithaan
பார்வை : 129

மேலே