அப்பத்தா
ஏம்பா...ரவைக்குத் தங்கிட்டு காலையில போனா என்ன....? கெஞ்சலாய் மகனின் முகத்தைப் பார்த்த மரகதத்திற்கு 70 வயதிருக்கும்.
ஏண்டி நாம வேணும்னா இருந்துட்டு காலையில போவோமா...? கிசுகிசுப்பாய் மனைவியிடம் போய்க் கேட்டார் பழனி.
என்னங்க கூறுகெட்டத்தனமா பேசிக்கிட்டுஇருக்கீங்க. உங்க ஆத்தாள பாக்கணும்னுதானே இம்புட்டு தூரம் திருச்சில இருந்து வந்து இருக்கோம். இந்தப் பட்டிக்காட்டுல புள்ளக்குட்டிகளை வச்சுக்கிட்டு எப்படி இருக்கறது? வெளிநாட்ல இருந்து வந்துட்டு இங்க எப்டி இருப்பாக நம்ம மகளும் மருமகனும்...? பத்தாக்குறைக்கு கைப்புள்ளைய வேற கைல வச்சு இருக்கா....அவ, குளிக்க வைக்க ஒண்ணுக்கும் வசதி இல்ல இங்க...
பக்கத்துல ஆறு கிலோமிட்டர்லதான் டவுன்ல என் தங்கச்சி வீடு இருக்கு அங்க போய் படுத்து இருந்துட்டு நாளைக்கு சாங்காலமா ஊருக்கு கிளம்பிப் போவோம்...
பழனியால் மனைவியை எதிர்த்துப் பேச முடியவில்லை. பேச முடியாமல்தான் நிறைய பழனிக்கள் தங்களின் வாழ்க்கையின் பிற்பகுதியை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணடிமைப் பேச்சு எல்லாம் ஒரு காலம் வரைக்குதான் பரபரப்பாய் நம் ஊரில் பேசப்படுகிறது. ரெண்டு பிள்ளை பெற்றவுடன் பெண் மெல்ல மெல்ல தனது கிடுக்குப் பிடியைப் போட்டு ஆளுமையைத் தொடங்குகிறாள். 40 வயதுக்கு மேலான வாய்பேசக்க கூடிய கணவர்களை விரல் விட்டு நாம் எண்ணி விடலாம்.
ஏண்டி...நாங்க அக்கா தங்கச்சிங்களோட சேத்து ஆறேழு பேரு பேரும் இங்கதானடி வளர்ந்தோம்...! காலையில வந்து கொல சாமி கும்பிட ஆத்தாள கூப்டுக்கிட்டுப் போனோம்...இப்டி திரும்பி வரையில சாங்காலம் 4 மணிக்கு அத கொண்டாந்து வுட்டுட்டுப் போறது சரி இல்லேல்ல....
என் உத்தியோகத்தை கட்டிக்கிட்டு நான் திருச்சியிலயே கிடக்கேன்...அங்கனயும் கூட்டியாந்து வச்சிகிட முடியலை. அதுவும் வந்து அங்க இருக்க மாட்டேங்குது... வந்து இருந்தாலும் ஏதாச்சும் கரைச்சல் வந்துடுதுன்னு பயந்துதானே.... அது பாட்டுக்கு தனியாக் கிடக்கு இந்த கருவக் காட்டுக்குள்ள....
இன்னிக்கு ஒரு நாளு மருமவனும் மகளும் இங்க இருக்க மாட்டாகளா என்ன...? பழைய வீடுதான்...எங்கய்யாவோட ரத்தின கம்பளி,மெத்தை எல்லாம் மெச்சு மேல இருக்கு விரிச்சுப் படுத்துகிடலாம்.....பர்மாக்காரு வீட்ல பெரிய டேபிள் பேனு இருக்காம் அதை வாங்கியாந்து போடச் சொல்லலாம். அவுக இங்க ஹால்ல படுத்துக்கட்டும் நாமளும் பயலுகளும் வெளிய திண்ணையில படுத்துக்கிடுவோம்.... ஆத்தா ஆசைப்படுதுடி.....
பழனி தயங்கித் தயங்கி சொன்னார்.
இந்தா பாருங்க... பொச கெட்டத்தனமா மறுக்கா மறுக்கா பேசிக்கிட்டு இருக்காதீக....எனகு கெட்ட கோவம் வரும் பாத்துக்கோங்க...! ஊர்ல இருந்து வந்தவக இந்த மொட்டப் பட்டிகாட்டுக்கு வந்ததே பெருசு...வேணும்னா நீங்களும் உங்க மயன்களும் இருந்துட்டு வாங்க.. நான் எம்புள்ளைய கூட்டிக்கிட்டு எந்தங்கச்சி வீட்டுக்குப் போறேன்....
மகள்கள் தான் அம்மாக்களுக்கு எல்லாமே...! மகன்கள் மீது பாசம் இருந்தாலும் எப்படியாவது அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்றே அம்மாக்கள் பெரும்பாலும் எண்ணுகிறார்கள். மகள்களின் கணவன்களை கவனிப்பதில் தகப்பனை விட தாயே எப்போதும் முன் நிற்கிறாள். தன் மகளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் விழுந்து விழுந்து மருமகன்களுக்கு வேலை செய்யும் தாய்மார்கள் தமிழகம் முழுதும் காலம் காலமாய் பிறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். தன் மகள்கள் மீது பாசம் வைக்கும் அம்மாக்கள் ஏனோ தனக்கு வரும் மருமகள்களின் அம்மாக்களும் அதே பாசம் இருக்கும் என்பதை வசதியாய் மறந்து கொள்கிறார்கள்...!
பழனியை ஏசிக் கொண்டிருந்தாள்....சரசு....
ஏப்பா ஒரு வா காப்பித்தண்ணி குடி....இந்தாத்தா நீயும் எடுத்துக்க......
மரகதம் வந்ததும் பேச்சை நிறுத்திக் கொண்டாள் சரசு.
ஏம்ப்பா....ராவைக்கு இருந்துட்டு வெள்ளனப் போப்பா....சோலையம்மாவக் கூப்டு கோழிய கவுத்துப் போடச் சொல்லுறேன்....ஒரு வாய் எல்லாரும் ராத்திரி சாப்டுட்டு போங்கய்யா....
அத்தே.....உங்க பேத்தி பேரன் எல்லாம் ஊர்ல இருந்து வந்து இருக்காக. அதுகளப் பாருங்க வீட்டுக்குள்ளக் கூட வராம பாருங்க வெளிலயே நிக்குதுக காத்துக்காக..., அதுக எப்டி நைட்டு இங்க தங்குங்க....? அதனால நாங்க போய்ட்டு இன்னொரு நாளைக்கு வர்றோம்....சரியா.... கைப்புள்ளைய வேற வச்சிருக்காள்ள ஒங்க பேத்தி....
சரசு சொன்னதைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள் மரகதம். தலை மெலிதாய் ஆடத்தொடங்கி இருந்த மரகதம் அந்தக் காலத்து மனுஷி என்று குறிப்பிட்டுச் சொல்லும் படியான பழமையை இன்னமும் உடையிலும் உள்ளத்திலும் கொண்டிருப்பவள். காது வளர்த்து பெரிய புடம் போட்டிருப்பாள் முன்பெல்லாம். புருசன் செத்துப் போனதுக்கப்புறம் இருந்த நகை எல்லாம் எங்கே போனது என்றே தெரியவிலை. மெலிந்த தேகத்தோடும் தள்ளாத முதுமையோடும் தன் மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தன் தாயைப் பார்த்து வருத்தப்பட்டான் பழனி.
காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. சூழல்களே எது அவசியம் அல்லது அனாவசியம் என்று தீர்மானிக்கிறது. முதன்மைத் தேவைகளாய் இருப்பது தேவையற்றதாகவும் தேவையற்றதாய் இருப்பது தேவையானதாகவும் காலத்தின் போக்கில் மாறிப் போகிறது.
ஆத்தா நான் இருந்துட்டு நாளைக்கு காலையில போறனாத்தா....அவுக டவுன்ல சரசுவோட தங்கச்சி வீட்டுக்கு போறாகளாம் ...தொண்டை அடைக்க அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான் பழனி....
ஓ.....அவுக போறாகளாக்கும்....சரி... நீ இருக்கியா.....சரிப்பா....என்றால் மரககம். முதுமை பெரும்பாலும் வாதிடுவதில்லை, அது சகித்துக் கொள்கிறது, விட்டுக் கொடுக்கிறது, இனி என்ன இருக்கு எனக்கு என்றே அது எப்போதும் யோசிக்கிறது.
மகன்களை இருக்கச் சொல்லிக் கேட்டார் பழனி. இங்க எல்லாம் எப்டிப்பா தங்குறது செம போர் என்று இரண்டு மகன்களும் மறுத்து விட....
இன்னோவா புழுதியைக் கிளப்பிக் கொண்டு அந்தக் கிராமத்தை விட்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கிளம்பியது.
எப்பு...இருய்யா.....சோலையம்மாவ கூட்டியாரேன்...கூட மாட ஒத்தாசை செய்வா சமைக்கிறதுக்கு....
மகன் தன் கூட இருந்த மகிழ்ச்சி மரகதத்தின் ஓட்டத்தில் தெரிந்தைப் பார்த்து ரசித்தபடி கண்கலங்கி நின்றிருந்தார் பழனி.
இரவு சாப்பாடு தடபுடலாய் நடந்து கொண்டிருந்தது சரசுவின் தங்கை வீட்டில். அக்காவின் மருமகன் அதுவும் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறார் என்றவுடன் வீடு பிசாசாய் பறந்து பறந்து உபசரித்துக் கொண்டிருந்தது. பழனியின் இரண்டு மகன்களோடு சரசுவின் தங்கை மகன்கள் இருவரும் ஜோடி சேர்ந்து கொள்ள வீட்டு மாப்பிள்ளையோடு அரட்டைக் கச்சேரியும் கிண்டலும் கேலியுமாய் இருந்தது அங்கே....
ஏக்கா உம்புருசன அங்க விட்டுட்டு வந்த...அந்தக் கிழவிக்கு என்ன புள்ள மேல இம்புட்டு பாசம்...? புள்ளக்குக் குட்டியளோட சந்தோசமா இருக்கட்டும்னு விடுறாளா பாரு....இந்தக் கிழவி? ஆண்டு முடிச்சமா ஒரு மூலைய கொடுத்து ஒடுங்கணமான்னு இல்லாம... காலமெல்லாம் எல்லாத்தையும் மகளுகளுக்குச் செஞ்சுபுட்டு இப்ப என்னத்தா மகன் மேல பாசம் புதுசா....ஒத்த மயன பெத்தமே அவனுக்கு கூடக் கொறச்சு சொத்த எழுதி வைப்போம்னு இல்லாமே... அம்புட்டு சொத்தையும் சரி பாதியால பிரிச்சுக் கொடுத்தா....
சரசுவும் சரசுவின் தங்கையும் மரகதத்தை காய்ச்சிக் குடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்....
ஆத்தா ரொம்ப நாளு இருக்க மாட்டேய்யா....எங்கூட வந்து இருந்துருய்யா....இல்லை என்ன கூட்டிக்கிட்டுப் போய் ஒங்கூட வச்சுக்கய்யா.....நான் ஒண்ணும் வாயவே தொறக்கல இனிமே.... இடை இடையில நம்மூருக்கு கூட்டியாந்து விட்டுட்டுக் கூட்டிட்டுப் போ.....
ஏய்யா...நாம எம்புட்டு பேரு இருந்த வீடு....? ஒங்கப்பு செத்ததுக்கு அப்புறம் செவத்துகு இம்புட்டு வெள்ளச் சுண்ணாம்ம்பு கூட அடிக்க முடியலயப்பா...நீ, அக்கா தங்கச்சிகன்னு ஒக்கலும் பக்கலுமா நாம இருந்த நெனப்பு இந்த நெஞ்ச அறுக்குது ராசா....
ராத்திரிக்கு இம்புட்டு கஞ்சித்தண்ணி காச்சி நானா குடிச்சுட்டு கீழ சாயையில எம்புட்டுப் பேருகு ஒல வச்ச அடுப்பு இப்படி ஓய்ஞ்சு போச்சே...., எம்புள்ளக் குட்டி எல்லாம் வரிசையா இந்த ரூம்பு பூரா படுத்து இருக்குமே....எஞ்சாமி ஏதாச்சும் கதைகள எல்லாம் சொல்லி அதுக கிட்ட பேசிக்கிட்டே இருக்குமே....
அட பக்கியா எம்புட்டு நேரம் பேசுவீக....? படுத்து தூங்குக...காலையில வெரசா எந்திரிச்சு கொல்லக்காட்டுக்கு போகணும்னு நிதமும் கத்துவேனே..........இப்படி ஒத்தையில கிடக்குறேனேன்னு நினைச்சு நினைச்சு நெஞ்சே வெடிச்சு போகுதப்பு....
தனிமை கொடுமையானது. அதுவும் கூட்டம் ஆட்டமாய் நின்று சம்சாரியாய் வாழ்ந்த மரகதம் போன்றவர்களுக்கு மிகவு கொடுமையானது. காலச் சக்கரம் திக்குக்கு ஒருவராய் உறவுகளை பிய்த்து எறியும் போது அந்த அந்த சூழலில் வாழும் பிள்ளைகள் அந்த மாற்றத்தை ஏற்று வாழும் அதே நேரத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சொந்த கிராமத்தின் நாலு சுவர்களுக்குள் இருக்கும் மரகதம் போன்றவர்களுக்கு என்ன இருக்க முடியும் வாழ்க்கையின் மாற்றாக...?
இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் தாயும், மகனும்...!
***
இந்த ஊர்ல இருக்க தியேட்டர்ல பழைய படம்தான் போட்டு ஓட்டுவாய்ங்க அத்தான்....நாம காரைக்குடி போயிரலாம் அரை மணி நேரம்தான் ட்ராவல்...அங்க போய் படம் பாத்துட்டு வருவோம்...
பெண்கள் எல்லோரும் வீட்டிலேயே இருந்து கொள்ள, மச்சான்களைக் கூட்டிக் கொண்டு சினிமாவுக்கு கிளம்பினார் சரசுவின் மருமகன். ஏங்க வண்டிய நீங்க ஓட்டாதீங்க ஆமாம் சொல்லிட்டேன்......மகள் மருமகனை அதட்டுவதை ரசித்தபடியே..அதெல்லாம் ஒந்தம்பிக இருக்காய்ங்க பாத்துக்குறுவாய்ங்கத்தா வந்து படு என்று மகளிடம் சொன்ன சரசுவுக்கு சந்தோசம் தாங்கவில்லை....
மூத்தவனே நீ வண்டிய எடுடா....சரசு மூத்த மகனிடம் சொல்ல....
மூத்தவனே வண்டியை எடுக்க வண்டி கிளம்பியது.
***
சினிமா பார்த்து விட்டு நள்ளிரவில் திரும்பிக் கொண்டிருந்தது அந்த இன்னோவா.
ஏண்ணே.... எப்படி இருந்தாலும் அப்பா காலையில எந்திரிச்சு பஸ் பிடிச்சு தானே சின்னம்மா வீட்டுக்கு வரணும்...?
பழனியின் இரண்டாவது மகன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த மூத்தவனைப் பார்த்துக் கேட்டான். மாப்பிள்ளையும் சின்னம்மா மகன்களும் பகுதி உறக்கத்தில் இருந்தனர்.
ஆமாடா... அதுக்கென்ன இப்போ...?
நம்ம போற வழியில ஒரு மூணு கிலோமீட்டர் தான அண்ணே.... வண்டிய அப்பா ஊருக்குள்ள விடு... நாம அப்பாவையும் கூட்டிக்கிட்டுப் போயிருவோம்....
ஓ...அப்டீன்றியா...நீ சொல்றதும் சரிதான்...அப்பாவா கூட்டிக்கிட்டுப் போய்டுவோம்...டா....எனக்கும் அங்க அப்பாவ ஒத்தையில விட்டுட்டு வந்தது ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு.....
வண்டி மரகதம் வீட்டின் முன் நின்றது.
எல்லாரும் வண்டியிலதானா இருங்க...நான் போய் அப்பாவ கூட்டியாறேன்...இறங்குனா நேரமாயிரும்....
மூத்தவன் வண்டியை விட்டு இறங்கினான்.
இருட்டு அடர்த்தியானது ஆனாலும் கிராமத்து இருட்டு இன்னும் அடர்த்தியானது. கிராமத்து இருளில்தான் வானம் இன்னும் வசீகரமாய் இருக்கும். நட்சத்திரங்கள் தெளிவாய் கண்ணடித்துச் சிரிக்கும். ஊதக்காற்று உடம்புக்குள் நுழைந்து கிச்சுக் கிச்சு மூட்டும். எங்கோ தூரத்தில் ஒரு நாய் ஊளையிடும் அந்த ஊளைச் சத்தம் தூரத்து மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிழிந்த துணியைப் பேய் என்று மனதுக்கு அடித்துச் சொல்லும். சில் வண்டுகளின் சப்தம் யாரோ தூக்குப் போட்டு இறந்து போன ஒரு பெண் ஆவியின் கொலு சப்தமாய் இருக்குமோ என்று எண்ண வைக்கும்.....
அக்கம் பக்கத்து வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளில் ஏதோ ஒன்று சடாரென்று எழுந்து நின்று வாலைத் தூக்கி சாணி போட்டு மூத்திரத்தை சட சடவென்று பெய்யும்....அந்த சப்தத்தைக் கேட்டு கோழிக் கூட்டிற்குள்....மெல்ல சுதாரித்து தன் குஞ்சுகளைப் பாதுகாத்தபடி கொக்கரிக்க ஆரம்பிக்கும்....
காகம் ஒன்று புளியமரத்தின் மீதிருந்து அந்த இரவின் அமைதியை கலைக்காதபடிக்கு கா.........என்று மெலிதாய் கரைந்து விட்டு அடங்கிக் கொள்ளும்....
ஜாமத்தில் யார் வீட்டிலோ மலரும் மல்லிகையின் வாசம்....பேய் இல்லேன்னு யார்ரா சொன்னது என்று புத்திக்குள் படித்த கதைகள் மூலமாய் நம்மை பயமுறுத்தும்.....
தாழ்ப்பாள் போடாதிருந்த வீட்டின் கதவை மெல்ல திறந்தான் பழனியின் மூத்த மகன். பெரும்பாலும் கிராமத்து வீடுகளில் வீட்டை அடைத்துப் பூட்டிக் கொண்டு படுக்கும் பழக்கம் கிடையாது. " வரப்போற திருடன் தாழ்ப்பா போட்டிருந்தா என்ன போடாட்டி என்ன....எப்டி வேணும்னாலும் வருவான்" என்று அடிக்கடி மரகதம் சொல்வதுமுண்டு. அதுவும் போக கிராமத்தில் திருடச் செல்வதற்கு அத்தனை துணிவு திருடர்களுக்கும் கிடையாது. மூணாவது சந்தில் ஓடினால் எட்டாவது சந்தில் வைத்துப் பிடித்து நையப்புடைத்து விடுவார்கள் என்ற பயம்தான் அதற்குக் காரணம்.
அரிக்கேன் வெளிச்சத்தில் அப்பத்தாவும்......அப்பாவும் படுத்திருப்பதை பார்த்தான்.
பழனி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்...., மகனோடு உறங்கிக் கொண்டிருந்த மரகதத்திற்கு பேரன் வந்தது கூட தெரியவில்லை....
எப்பா.....எப்பா....எந்திருங்கப்பா.... மெல்ல பழனியை உலுக்கினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பழனி பதறி எழுந்தார்....
மகனைப் பார்த்ததும்...என்னப்பா இன்னியாரத்துல ஒண்ணும் பிரச்சினை இல்லையே.... பயந்து போய் கேட்டார்....
ஆள் அரவம் கேட்டு மரகதம் எழுந்து விளக்கைப் போட்டாள்.
இல்லப்பா....படம் பாத்துட்டு வந்தோம்....நேரமாச்சு....நம்மூரு தாண்டிதான் சின்னம்மா ஊருக்குப் போகணும் அதான் ஒங்கள கூட்டிக்கிட்டுப் போகலாம்னு.....
பழனி மணி பார்த்தார்... விடியற்காலை இரண்டரை.
ஏத்தா....நான் வேணா போகட்டுமா....? காலையில எந்திரிச்சு காருக்கு தானே போகணும்.... இப்ப போனா இவிங்க கூட வண்டிலதானா போயிருவேன்....
செரிப்பா....போய்ட்டு வாய்யா.....அதுக காரக் கொண்டாந்துருசுக...செத்தவடத்துல விடியப்போகுது.....மகனை ஏக்கத்தோடுபார்த்தபடி சொன்னாள் மரகதம்.
வேட்டியைச் சரி செய்து கொண்டு சட்டையை எடுத்துப் போட்டார் பழனி.
நான் வர்றத்தா.....அடுத்த மாசம் லீவுக்கு வர்றேன்... வந்து ஒண்ணைக் கூட்டிக்கிட்டுப் போறேன்.... சரியா.... சொல்லிக் கொண்டே ஐநூறு ரூபாயை மரகதத்தின் கையில் வைத்து திணித்தார்....
அப்பா.....டைம் ஆச்சுப்பா.............. வாசலில் நின்று கத்தினான்....மூத்தவன்.
இன்னோவா அந்த கிராமத்தின் விடியற்காலையை மாசுபடுத்தியபடி....சென்று மறைந்தது....!
மரகதம் வீட்டிற்குள் வந்து படுத்திருந்த இடத்தில் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள். அவள் மகள்களின் நியாபகம் வந்தது.....புருசன் நினைப்பு வந்தது........சற்று முன் பழனி படுத்திருந்த இடத்தைத் தடவியபடியே....நான் பெத்த மக்கா.........., உங்க எல்லாரையும் தொலைச்சுட்டேனடா........
நெஞ்சில் அடித்துக் கொண்டு...சப்தமில்லாமள் வெடித்து அழத்தொடங்கி இருந்தாள்....!!!!
அப்பா....எப்டிப்பா எங்கள விட்டுட்டு அப்பத்தாக் கூட தங்கிட்ட....போப்பா.... உனக்குப் பாசமே இல்லை....எங்களுக்கு எல்லாம் உன்னைய ஒத்தையா வுட்டுட்டு வந்துடோம்னு எம்புட்டு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா....
பழனியின் இரண்டாவது மகன்......பழனியின் கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டான்....
தூரத்தில் ஒரு நட்சத்திரம் கொஞ்சம் கொஞ்சமாய்.... மறையத் தொடங்கி இருந்தது.......
ஒன்றும் பேசத் தோன்றாமல் வெறித்துக் கொண்டிருந்தார் பழனி....!
வண்டி சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது...!
தேவா சுப்பையா....