என் கிராமத்து வீட்டில்

சக்கர வண்டிகள் தடதடத்தபடி போகும், சாலைகள் தான் இன்னமும் .!!
நான்கு சக்கரமிட்ட துணிப்பையை, தள்ளிக்கொண்டு
மெல்லச்செல்கிறேன்..!

இரண்டு எட்டு வைத்த அடுத்தநொடி,
மூக்கு கண்ணாடியை சரிசெய்தபடி ஒரு குரல்,
"அந்த காரை வீட்டு பையன் தானே நீ? எப்படி இருக்கப்பா??"
கிராமத்துக்கே உரிய பாச விசாரிப்புகள்..!! :-)

கோலியை அடிக்க குறிப்பார்த்தபடி அங்கும் இங்கும்
அசைந்த படி குரல் எழுப்பும் சிறுவன்..!
பால்ய நினைவுகளில், அங்கேயே பாய் விரித்து
படுத்துக்கொள்கிறது மனது..!!

இன்னும் கொஞ்சம் கடந்து போகையில், கதிர் அறுத்து விட்டு வரும்
கன்னியர் கூட்டத்தில் ஒரு சல,சல சிரிப்பு சத்தம்.. !!

விசாரிப்புகள் ..!! சிரிப்புகள்..! வரவேற்ப்புகள்..!! எல்லாம்,
தாண்டி கடைகோடியில் ஒரு காரைவீடு..!!

நேற்று இரவில் இருந்தே திண்ணையை, குத்தகைக்கு
எடுத்திருப்பாள் போல அம்மா..!
என்னை பார்த்ததும் எத்தனை வெளிச்சம் கண்ணில், பௌர்ணமி நிலவும் தோற்று போகும்,..!
அப்பாவின் தலையில் இன்னும் புதிதாய், கொஞ்சம் வெள்ளி கம்பிகள்..!!
அப்பாவின் கால்தொட்டு நான் ஆசீர்வாதம் கேட்க, இரும்பு கைக்கொண்டு
தோள் தூக்கி தொண்டை செருமிய அப்பா..!! அப்பாவுக்கே உரிய ஆசிர்வாதம் அது..!

சட்டையை மாட்டியபடி வந்த, தம்பியின் வாடா,
என்ற வரவேற்பு அப்பாவின் ஒரு பார்வையில்,
வாங்க அண்ணா..!! ;) என தட்டு தடுமாறி மாறியதில்
நானும், அம்மாவும் சிரிப்பை சின்னதாய் பரிமாறி கொண்டோம்..! :-)

இந்திய வரைப்படம் விரிசலாய் விட்ட தரையில், இட்ட இலையில்
வகை வகையாய், நடப்பதும், பறப்பதும், மிதப்பதுமாய்..!!!
கடைசி முட்டை பொரியலையும் முழுங்கிவிட்டு எழுகையில்,
உக்கார்ந்தே பார்க்கும் வேளையில் ஏற்கனவே
ஆறுமாதம் போல் இருந்தவயிறு பத்து மாதமாகி
என்னைப்பார்த்து சிரித்தது ..! ;)

அம்மாவின் கைருசியில், அப்பாவின் ஆதரவில், தம்பியின் குறும்பில்
ஐந்து நாள்களும் ஐந்து நிமிடம் போல் கரைந்து போகையில்
கனத்த மனதோடு, ஊர் எல்லையில் நானும், என் நான்கு சக்கர பையுமாய்
மீண்டும் "ந(க)ர(க)" வாழ்க்கைக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறோம்...!! :-(

எழுதியவர் : நிஷாந்தினி.கே (4-Aug-14, 11:43 am)
பார்வை : 130

மேலே