நீ காதல் சொல்லியதால்
காற்றுக்கும் எனக்குமான
அர்த்தமற்ற சிறு இடைவெளியில்
உன்னை இருத்தி உன்
உயிர் தீண்டும் மென் காற்றில்
சுவாசம் வேண்டுகிறேன்
முழுதும் பின்னி முடிக்கப்படாத
என் காதல் வலையில்
வலிய வீழ்ந்தது நீயென்றாலும்
உனக்கெனத் துடிப்பது
நானல்லவோ
நொடிகள் தாளமிடும்
நிமிடங்களில் அசையாது
மணிக்கணக்கில் மெய் துறந்து
லயித்து விடுகிறேன்
குளிர் காற்றில்
உன் நினைவு பற்றிக்கொண்டால்
சில்லிட்டுப் போகிறது
என் இதயம்
என் சிரிப்பின்போது
ஒவ்வொரு பற்களிலும்
நீயே இருந்து
புன்னகையள்ளி வீசுகிறாய்
அழுகையின் துளிகளில்
ஆதரவாய் நீ இருக்கிறாய்
என் கைப்பற்றிய
அடர்ந்த மௌனமாய்
மீளா உரைகளில்
நீளும் சிறு அமைதி
சொல்லிவிடுகிறது
காதலின் கனத்தை
பார்வை ஸ்பரிசத்தில்
பாகாய் இளகுகிறது
பாவையின் பளிங்கு மனம்
விழி மூடிய
இமைப் பரப்பினில்
தீஞ்சுவை என
தித்திக்கிறது என்னில்
ஊறிய நின் கனாக்கள்
எந்தன் விரல்கோர்க்கும்
உன் உள்ளங்கையின்
இளஞ்சூட்டில் உருகிவிடுகிறது
உள்ளத்தின் தவிப்பு
இன்றெல்லாம்
அதீத சிவப்பில்
மலர்கின்றன என்
வீட்டு ரோஜாக்கள்
நீ காதல் சொல்லியதால்!!

