ஆட்டிப்படைக்கும் சிந்தனைகள்-17

கவிதை என்றால் என்ன என்பதை ஓரளவிற்குத் தெரிந்து கொண்டுள்ள நிலையில், கவிஞன் என்பவன் யார் என்ற ஐயப்பாடு கூடவே எழுகிறது. கவிஞர் என்றதும் நம் திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல், ஒரு மேசை மேல் ஒரு குறிப்பேடு புத்தகமும் ஒரு பேனாவும் தயாராய் இருக்கும். மற்றொரு பக்கம், கவிஞர் காப்பியை ரசித்துக் குடித்துக் கொண்டு இருப்பார் அல்லது பஞ்சு மெத்தையில் கனா காண்பவரைப்போல் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்துக் கொண்டு இருப்பார். பின் திடீரென்று எழுந்து ஒரிரு வரிகள் கவிதை என எதையோ எழுதுவார், பின் கால் மணி நேரத்தில் அதனை அடித்து விட்டு மீண்டும் எழுதுவார். இதனை திரைப்படங்களில் கவிஞர் எனக் காட்டுவதற்குக் கூட கடிகாரத்தின் துணையை நாடி அவரையும் கடிகாரத்தையும் மாற்றி மாற்றிக் காட்டி வெட்டியில் காலத்தைப் போக்குபவர் என்றும் இப்படி தீர்ர்க்கம் இல்லாத எழுதி எழுதி கிறுக்கும் ஒரு மனிதனாகத்தான் நமக்கு கவிஞர் என உலகம் தொன்று தொட்டு காண்பித்துக் கொண்டு வருகிறது.

உண்மையிலேயே கவிஞர்கள் நம்பிக்கை குறைந்தவர்களாய், சந்தேகங்கள் நிறைந்தவர்களாய், கவிஞர் என்று வெளியில் சொல்ல பயந்தவர்களாய், எழுத்தாளர் என்ற ஒரு போர்வைக்குள் ஒளிந்து வாழ்கிறார்கள். நான் ஒரு கவிஞன் என நமது உயர் அதிகாரியிடமோ, நம்முடன் பயணிக்கும் சக பயணியிடமோ நாம் கூறினால் அவர்கள் வியப்பும் பீதியும் கலந்த உணர்ச்சிகளை உடன் வெளிப்படுத்துவதோடு நம்மை தவிர்க்கவும் முயல்வதை நாம் கண்கூடாகக் கண்டு இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்னவென ஆய்ந்தோமெனில், கவிதை எழுதுவதற்கு என்று தனிப்பட்ட பட்டப்படிப்பு, முறையான தேர்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், அடிக்குறிப்புகள் என எதுவும் கிடையாது. இதனால், இலக்கியப் பேராசிரியர் எனக் கூறுவதைப்போல் ’கவிதைப் பேராசிரியர்’ என முறையாக உலகில் எவரும் தங்களைக் குறிப்பிட்டுக் கூறவும் இயலாமல் எவரையும் காட்டவும் இயலாத நிலையில் ’தகுதி’ என ஒன்றுமில்லாத ஒருவரை எப்படி கவிஞர் என அடையாளப்படுத்த முடியும்.

கவிதை எழுதுபவன் கவிஞன் என்றால் ஒரு காட்சியும் தன்னுணர்வும் சந்திக்கும் கட்புலனாகா அகப்புள்ளியில் ஏற்படும் பரிவர்த்தனையின் வெளிப்பாடாகவே கவிதை எப்போதும் இருக்கிறது. அவ்வாறு உள்ளுக்கு எழும் கொந்தளிப்புகளை வெளிப்படுத்தும் திறனுடையவனே நல்ல கவிஞன் ஆக இலக்கிய ஆர்வலர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறான்.

இன்|றைய நவீன கவிஞர்கள் மற்றும் அவர்களது கவிதை பற்றி ஆய்ந்தோமெனில், இன்றைய கவிஞர்களால் எழுதப்படும் கவிதைகள் பன்முகங் கொண்டு பவனி வருகின்றன. எளிய தெளிவான வார்த்தைகள், இளகிய அல்லது மென் வடிவம், உரை நடைச் சாயல் ஆகியவற்றுடன் தன்னிலை சார்ந்தும், புனைவு சார்ந்தும் வெளிப்படுகின்றன.. தனக்கென சொந்தமாக ஒரு பாணியை, அடையாளத்தைத் தேடுவதும், அப்படி ஒன்று தேவையில்லை என மறுப்பதுமான மன நிலையில் இயங்கும் கவிதைகள், தர்க்கம் ஏதுமில்லாமலும் உரையாடலை நிகழ்த்துகின்றன. உண்மையில், ஒரு கவிதை எழுதிட கவிஞனுக்கு மெய்யான அனுபவம் தேவையில்லை, அதைப் புனைந்தும் உருவாக்கி விடலாம் எனும் புனைவு நம்பிக்கை புழங்கும் சூழல் இன்று உருவாகியுள்ளது.
அதனால், நாம் வாழுகின்ற இந்த காலத்தில் எழுத்தாளர் எனும் முத்திரை தாங்கியவரை விட கவிஞர் எனக் கூறிக் கொள்வதில் பெருமை அடைபவர்களே அதிகம் ஆகி விட்டனர்.


கவிஞர் என தன்னைத்தானே அங்கீகாரப்படுத்திக் கொள்ளும் ஒரு துண்டுக் காகிதம் (விசிட்டிங் கார்டு) மூலம் கவிஞர் என்ற உறுதிமொழியும் முத்திரையும் வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. . எவரிடமெல்லாம் படைப்பூக்கம் அதிகமாக உள்ளதோ அவர்கள் அத்திறனை வளர்த்துக் கொள்ளும்போது மிளிர்ந்திடும் வாய்ப்பு இயற்கையாக வருகிறது.. ஆயினும் அது கவிதை எழுதுதல் என வரும்போது உள்ளுக்கு ஒலிக்கும் உணர்ச்சிகளை, வலிகளை எடுத்து வெளியே கொண்டு வந்து அளிக்கப்படும்போது தனியே தெரியும். இலக்கியத்தின் சிகரம் ஆக கவிதைகள் இருப்பதால், அவற்றைப் புனைவதில் வல்லவர் என்ற மணிமுடியை அவரது படைப்பாகிய கவிதையே அவருக்கு தரிப்பிக்க உதவுகிறது. இத்தகைய சிறப்பினைத் தருவது சாதாரணம் என்ற சம நிலையில் இருந்து சிறப்பான ஒரு மேட்டு நிலைக்கு அவர் தம்மைத் தாமே உந்தித் தள்ளும் திறம் படைக்கும் கவிதைகளின் தரத்தால் அமையும். ஆனால், மனிதர்களில், தம்மைக் கவர்ந்த, தாம் தேர்ந்த மனிதனை தனியாக சிறப்பித்துக் காட்டுபவனே கவிஞன். ஒரு கல், ஒரு சொட்டு நீர், மழை, மலை, முகில், பெண் என அனைத்தையும் சாதாரண நிலையில் இருந்தும், சராசரி நிலையில் இருந்தும் தனது திறம் மிக்க கவிதை மொழியில், ஒவ்வொரு சொல்லையும் அளவெடுத்துச் செதுக்கி அவற்றை சந்திக்க அழைக்கும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்பவனே கவிஞன் ஆகிறான். ’நமக்குத் தொழில் கவிதை’ என உயரிய இலக்கிய ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் செயல்படுபவனே நல்ல கவிஞன் ஆகின்றான்.
'கவிதைகளில் , நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது. கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.' என்பார் அமரர் ஆத்மாநாம்.
வாழ்க்கையே ஒரு தேடல் என நினைந்து அதை முனைப்பாகத் தேடும் ஒருவருக்கு தமது இலக்கு எதுவென்று முன்னரே தெரிந்திருப்பதில்லை.. அவர் தாம் செல்ல வேண்டிய இடத்தையோ அல்லது பிற இடத்தையோ சென்றடைந்த பிறகே இதுதான் இலக்கென்று தெரிகிறது. முன்கூட்டி இலக்கு நிர்ணயித்துக்கொண்டு ஒருவர் மலையேறலாம், ஆனால் கவிதை எழுத முடியாது, அப்படி எழுதினாலும் அது கவிதையாக இருக்க முடியாது. கவிதையின் இலக்கு அது கவிதையாக வெளிப்பட்டவுடன் நிறைவுபெறுகிறது. ஒருவரது கவிதையை அவரெழுதிய மற்ற கவிதைகளோடு தொடர்புப்படுத்தும்போதுதான் கவிஞர் வருகிறார். கவிஞரின் இலக்கு கவிதையின் இலக்கு அல்ல.


கவிஞன் இதற்கெல்லாம் பிரதி உபகாரமாக எதிர்பார்ப்பது, கொஞ்சம் பெயரும் புகழும், பணமும்தான். பழங்காலப் புலவர்கள் இப்படிப் புரவலர்களைப் பற்றிப் பாடி பரிசில் பெற்றே வாழ்ந்து வந்துள்ளனர். நாம் வாழும் இந்தக் காலத்தில் சாகித்திய அகாடமி, நோபெல், புலிட்சர், ஞான பீடம் என்றும் மற்றும் நமது நடுவண், மானில அரசுகள் தரும் விருதுகள் எனவும் நூற்றுக் கணக்கில் பரிசுகள் இருப்பினும் தமிழர் என ஒருவரும் நோபெல் பரிசு பெறாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயமே. அப்பரிசைப் பெறுவதற்கான தகுதி தமிழில் எழுதுவோரிடையே இல்லையா? நிலைமை இப்படி இருக்கும்போது, கவிச்சக்கரவர்த்தி, கவிப்பேரரசு என மார் தட்டி, மீசை முறுக்கி, வேட்டியை மடித்துக் கட்டி, வீரம் பேசும் கவிஞர்கள், கிண்ணாரம் கொட்டி, ஜாலரா அடித்து மத்திய மானில அரசு விருதுகளை தட்டிச் சென்று விட்டு வீரம் பேசும்போது இங்கு நாம் எல்லோரும் தமிழர்கள்தானா, கவிஞர்கள்தானா என்ற ஐயம் எழுகிறது.

விருதுகளும் பரிசுகளும் பொருட்படுத்தப்பட வேண்டியவை அல்ல. அப்படி பொருட்படுத்தாதவர்களும் சிலர் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. 2007 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நொபெல் பரிசை ஜேன் சோமர்ஸ் எனும் புனை பெயரில், ’பாடுகின்ற புல்’, ’தங்கக் குறிப்பேட்டுப் புத்தகம்’ போன்ற அரிய வகை புதினங்களைப் படைத்த ஆங்கில இலக்கியவாதியும் முதல் பெண் சூஃபி எழுத்தளருமான டோரிஸ் லெஸ்ஸிங்கிற்கு அளிக்க இருப்பதைப் பத்திரிகையாளர்கள் கூறியபோது அவர்.”அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை”. எனக் கூறினார்.

இவருக்கு முன்னர், “விருதுகள் சராசரிகளை சிறப்பிக்கிறது, உயர்ந்தவர்களை வெட்கமடைய வைக்கிறது, தாழ்ந்தவர்களால் அவமானத்திற்குள்ளாகிறது” எனும் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் கூற்றுக்கு எதிராக விருதுகளைப் பற்றி வேறு என்ன கூற இயலும்.

இலக்கியத்திற்காக தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை வாங்க மறுத்த ஃப்ரென்சு தத்துவஞானியும், நாடக ஆசிரியரும் நாவலாசிரியருமாகிய ஜீன் பால் சாத்ரே கூறிய காரணங்கள், “எழுத்தாளர்கள் அதிகாரபூவமான விருதுகளை ஏற்கக்கூடாது.. ஏனெனிlல் அப்படி ஏற்றால் விருது தரும் நிறுவனத்தின் செல்வாக்கு அந்த எழுத்தாளரின் எழுத்து வலிமையுடன் கூடுதலாகச் சேர்ந்து கொள்ளும். அது வாசகர்களுக்குச் செய்யப்படும் அனியாயம்”.

விருதுகள் மனிதர்களை கொளரவிப்பதை விட மனிதர்கள் தான் சில சமயங்களில் விருதுகளை கொளரவிக்கிறார்கள். பெரும்னான்மையாக மகத்தான மனிதர்கள் எவரும் அவர்கள் பெற்ற விருதுகட்காக போற்றப்படுவதோ, நினைவுகூரப்படுவதோ இல்லை. மிக அரிதாக, அவை சரியாக வழங்கப்படும்போது சில மகத்தான மனிதர்களை வெளி உலகிற்கு விருதுகள் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. ஆனால் அரசுகள் வழங்கும் விருதுகளில் ஆட்சியாளர்களில் விருப்பு வெறுப்புக்கு உள்:ளிட்டே விருதுகட்கு உரியவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். உலகெங்கிலும், தமக்கு சாதகமானவர்களை கொளரவிக்கவே விருதுகளை அரசுகள் வழங்கி வருகின்றன. ஆயினும்

“வடவர் வாலாட்டத்தை அடக்கிக் கனக விசயர் தம் தலையில் கல்லெடுத்து வந்து கண்ணகிக்குச் சிலை செய்த’ தமிழர் தம் வீரம் எங்கே இப்போது? ஒரு நோபல் பரிசு பெற தகுதி நம்மிடையே இல்லையா. இல்லை இருந்தும் சில நக்கீரர்களால் மறுக்கப்படுகிறோமா?

பரிசு, நக்கீரர் என்றதும் நமக்கு நினைவில் வருபவர், திருவிளையாடற்புராண புலவர் ஆகிய தருமி ஆவார். அதிலும் குறிப்பாக, தருமியாக நடித்த நடிகர் நாகேஷ்தான் நம் நினைவுக்கு வருவார். அந்த நடிப்பு கவிதை என்றால் அதில் தவறேதும் இல்லை. ஆனால் நாம் இங்கு சொல்ல வந்தது தருமியை மடக்கியதாகக் கூறப்படும் நக்கீரர் வரலாறு ஆகும். இந்த நிகழ்வு,

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
கானஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீயிய நட்பின் மயிலியற்
செறியெற் றறியைக் கூந்தலின்
நறியவு முளவோ நீயறியும் பூவே

எனும் குறுந்தொகையின் -2 ஆம் பாடல் குறிஞ்சித் திணையில் தலைவன் கூற்றாக, இறையனார் எனும் புலவர் பாடிய பாடல் பற்றியது.

”இயற்கைப் புணர்ச்சியின்கண், இடையீடுபற்றி நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதற் பொருட்டு, மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி தனது அன்புதோற்ற நலம் பாராட்டியது’ என்ற அகத்துறையில் பாடிய பாட்டு. இதனைத் தருமியென்னும் பிரம்மசாரிக்கு ஆலவாயிற் சோமசுந்தரக் கடவுள், சிந்தா சமுத்தியாகப் பாடியளித்து, அவன் பொற்கிழி பெறும்படி செய்தாரென்றும், இப்பாட்டிற்கு குற்றம் கூறத்துணிந்த நக்கீரரைத் தண்டித்துப் பின் அருள் புரிந்தாரென்றும் ஒரு புது வரலாறு தோன்றிற்று”. ’கீர்’ எனும் சொல்லுக்குச் சொல் என்றே பொருள் ஆகும். நல்ல சொல்லுடையவர் எனும் பொருளிலேயே பெயர் வைக்கப்பட்ட நக்கீரர் பொய்யில்லாத புலவராய் இருக்கும்போது பரிசிலுக்குப் பாடும் புலவரை அவமானப்படுத்தும் மனிதாபிமானம் அற்ற மனிதனாய் அவரை களங்கப்படுத்தும் இத்தகைய வரலாறு ஒரு புனைக்கதை என்றே கொள்ள வேண்டி உள்ளது. இதற்கு ஆதாரமாக கல்லாடம் (1-10-12)

போதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப்
பொற்குவை தருமிக் கற்புட னுதவி

என்ற பாடல், நக்கீரரை களங்கப்படுத்தாத ஒரு பாடலாகும்.

திருநாவுக்கரசரோ இதே நிகழ்வை,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண் (6, 78, 3)

எனக் கூறுகையில், இறைவனே புலவனாக சங்கம் ஏறிப் பாடினான் என்பதால் நக்கீரர் செயலொன்றும் இதில் கூறப்படவில்லை என்பதே உண்மை. குறிப்பாக நக்கீரன் என்றாலே ஒரு புலவரை மட்டுமே நாம் எண்ணி இருக்க, சங்க நெடுநல்வாடை எழுதிய நக்கீரர் கி.பி. 250 ஆம் ஆண்டிலும், களவியலுரை எழுதிய இலக்கண நக்கீரர் கி.பி. 650 ஆம் ஆண்டிலும், திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீர தேவ நாயனார், கி.பி. 350 ஆம் ஆண்டிலும் வாழ்ந்தவர்கள்-- ஆக மொத்தம் மூவர் எனப். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றோர் கூறுவார்.

எனவே பரிசு பெறும் தகுதி ஒருவருக்கு இருக்க, அவரை தகுதி இல்லாதவர் என ஒதுக்கித் தள்ளிடும் அனேக நிகழ்வுகளில் இறைவன் நேரில் வந்து திருவிளையாடல் புரிந்தால்தான் தகுதி உடையவர்க்கு பரிசு கிடைக்கும் போலும். அதுவரை, தருமியாக வாழ வேண்டிய கட்டாயத்திலேயே இன்றைய தமிழ் புலவர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே வாழ்வனுபவத்தின் மனச் சலனங்களை கசப்புகளைப் பேசுவனவாக இக்காலக் கவிதைகள் அமைந்து விடுகின்றன.

எழுதியவர் : தா .ஜோ.ஜூலியஸ் (5-Aug-14, 3:46 pm)
பார்வை : 390

மேலே