வெடிகுண்டு பிரச்சாரம் - சூபி கவிஞர் அஹமது அலி
தேர்தல் காய்ச்சல்
வந்து விட்டால்...
வெடிகுண்டு மாத்திரைகளை
கையிலெடுத்து விடுகிறார்கள்
தலைவர்கள்...
வெடி குண்டுகளும்
வெடிக்கிறது...
தலைவர்கள் யாரும்
சாவதில்லை...
தூரத்தில் வெடிக்கும்
அப்பாவிகள் உயிரை குடிக்கும்...
குறி தப்பி விடுகிறதா...?
குறிக்கோள் வென்று விடுகிறதா...?
வைத்தவர்களுக்கு தானே தெரியும்....?
வைத்த இடமும்
வெடிக்கும் காலமும்...
அதென்னெ...?
எப்போதும் தலைவர்கள்
வருவதற்கு முன்பே
குண்டுகள் வெடித்து விடுகிறது...?
ஊடகங்கள் சூறைக்காற்றில்
சூடு கிளப்பும் பீதி பரப்பும்...
திரைப்படங்களையும் மிஞ்சி
திரைக்கதை அமைப்பார்கள்...
குண்டு வெடித்த
சில மணிகளிலேயே
ஏதோ ஓரு இயக்கம் பொறுப்பேற்கும்...
எப்படியென்றால்...
தொலைபேசி
மின்னஞ்சல்
குறுந்தகவல்
வந்தது என்பார்கள்...
இவற்றை எல்லாம்
யார் வேண்டுமானாலும்
அனுப்பலாம் என்பது
இவர்களுக்கும் தெரியும்...
மிகப் பெரிய தீவிரவாத இயக்கம்
அதன் தலைமை எங்கே?-தெரியாது...
தலைவன் யார்?-தெரியாது
நாடு முழுவதும் உள்ள பின்னணி -தெரியாது...
உளவும் காவலும்
உறங்கிடவா இருக்கிறது...?
தகவல் தொழில் நுட்பப் புரட்சி
காலத்தில் நாம் வாழ்கிறோம்
நினைவூட்டுவோம்...
அப்படியென்றால்
இன்னும் ஏன் அவர்களை
கைது செய்யவில்லை...?
தேடுகிறோம்...
தேடுவார்கள்...
எவனடா சிக்குவான் என...
இரண்டொரு நாளில்
அப்பாவி ஒருத்தனை
அடி பின்னியெடுத்து...
அனைத்தையும் ஒத்துக் கொள்ள
அதிகாரம் செய்வார்கள்...
பத்தாம் வகுப்பு படித்தவனை
பட்டதாரி என்பார்கள்...
பக்கீர் முகம்மதுவை
பாட்சா என்பார்கள்...
பட்டாசு வெடிக்கத் தெரியாதவனை
வெடிகுண்டு நிபுணன் என்பார்கள்...
முகத்தை மூடியே
மீடியாக்களில் மிரட்சி காட்டுவார்கள்...
முகத்தை காட்டினால்
குட்டு உடைபடுமே...
ஆண்டுகள் பல
கடுங்காவல் தண்டனையும்
பெற்றுத் தருவார்கள்...
அதன் பின்
நீதி விசாரனை நடக்கும்...
நீதி காலதாமதமாய் ஜெயிக்கும்
நீதிமன்றம் விடுவிக்கும்...
முன்பு தீவிரவாதி என்று எழுதிய
ஊடகங்கள் நிரபராதி என்று
எழுத மாட்டார்கள்
நடுநிலை செத்து விடுமே...
இன்னல்கள்
பல பெற்று...
இளமையை
சிறையில் தொலைத்து...
பெயர் தாங்கிய குற்றத்துக்கு
பெற்ற தண்டனைகள்
மனதில் அழுந்தியே மரணிப்பான்...
அப்பாவிகளை கொல்வது பாவமே
அப்பாவிகளின் சிறைச்சேதம் நீதமா...?
குண்டு வைத்தவன்
வைக்கச் சொன்னவன்...
காவியோ...?
வெள்ளையோ...?
பச்சையோ...?
நிறம் பார்க்காமல் தூக்கிலிடு...
இந்த நாட்டில்
நீதி பிழைக்கட்டும்...
வெடிகுண்டு கலாச்சாரம்
ஒழியட்டும்...!