உன்மேல் கோபம் எனக்கில்லை
இந்த தூரம் ஏனோ
எனக்குப் பிடிக்கவில்லை...
இருந்தும் இது
பழகிப் போய்விட்டதால்
எதார்த்தத்தில் சிக்குண்டு
கால வெளியில் ஒரு தூசுபோல்
உன் பிரிவினை சுமந்துகொண்டு
பறந்துகொண்டிருக்கின்றேன்...!
கனம் கூடிப் போகும் நேரம்
மழைபோல்
சோகத்தினைப் பொழிந்துவிட்டு
இன்னும் வேகமாக
எங்கெங்கோ ஓடுகின்றேன்...!
ஒவ்வொரு நாளும்
இந்த தூரம்
ஒரு எல்லையினைக்
கடந்துவிடுகின்ற பொழுது
நெருக்கத்திற்கான என் முயற்சிகள்
எண்ணங்களைத் தாண்ட முடியாமல்
இடறி விழுகின்றது...!
மறத்துப்போன என் மனதிற்கு
அந்தக் காயங்களின் வலிகள்
சுருக்கென்று
ஒரு நாள் குத்தும்பொழுது
வெடுக்கென்று தெறித்து எழும் இதயம்...
மிக வேகமாய் வீசுகின்ற
சூறைக் காற்றினுள் வெகு தூரதினில்
தள்ளாடும் பட்டமென உறவு
பறந்துகொண்டிருப்பதை உணர்ந்து
என்ன செய்வதென்று அறியாது
ஒரு நிமிடம் உறைந்துபோய் விடுகின்றது...!
உனது வாழ்க்கையும்
அந்தக் கால வெள்ளதினில்
ஏதோ ஒரு திசையினில்
அடித்துச் செல்லப்பட்டதென்று
எனக்குத் தெரியும் என்பதால்
உன்மேல் கோபம் எனக்கில்லை...
அதுபோல்
என்மேல் உனக்கும்
கோபம் இருக்காதென்று
என்னை நானே தேற்றிக்கொல்கின்றேன்...!
நான் பேச விழைக்கும்பொழுது
இந்தப் பிரிவு மறந்து
அந்த நாட்களின் முடிவினில் பிறந்த
அடுத்தநாள் இதுவென மனதினில் கொண்டு
அன்று எப்படிப் பேசிக்கொண்டிருந்தாயோ
அதே தொனியில்
அதே நெருக்கத்துடன் நீயும் பேசிவிடும்பொழுது
இந்த நட்பு எத்தனை உன்னதமானது
என்று என்னால் உணரமுடிகின்றது...!