உன் விரலுக்குள் என்வாழ்வு அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டிக்கான கவிதை

உன் விரலுக்குள் என் வாழ்வு.......
எனது நடை வண்டி நீ.....
கரிசன களிம்புக்காரன் நீ....
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்!
முண்டியடித்துநான் நல்லோர் சபைநிற்க,
முண்டாசைத் தலையில் கட்டி - நீ
நொந்ததோளில் ஏருழுவைச் சுமந்தாய்!
'வெந்த மண்ணல்ல நீயும் - உந்தன்
சொந்தக்காலில் நிற்கவேண்டு'மென,
அந்திப்பொழுதில், ஆற்றங்கரையில்,
முழுமதியில் நடைபயின்ற முன்பொருநாள் நீயுரைத்தாய்!
பணம் நமக்குப் பனைமரத் துச்சிதான் - ஆதலால்
பண்டம் பலதைத் தின்றபாடில்லை - ஆயினும்நான்
பன்புடைத்தோர் முன்னிலையில்,
பாடங் கற்கும் பாலகனானே னுன்தயவால்!
உன்தயவா லின்று, தமிழ்ப்பண்டம் தின்னுகிற பண்டிதனுமானேன்..!
குமிழ்சிரிப்புக் குன்றாமல் சிறுவயதில்,
அமிழ்கின்ற மணல்வெளியில் மகிழ்ந்து நான் விளையாட,
தண்டம் என்றெனை அன்னையுந் திட்டினால் - அவள்
கண்டம் அறுத்தஉன் வார்த்தையரத்தைக்
கண்டு கண்ணிமை மூடாது நின்றேன் - நீ
மந்தமிம் மண்ணில் யாருமேயில்லையென
மந்திரம் போலவொரு வார்த்தையைச் சொல்லி,
என்திறம் என்னைக் காணச்செய்தாயே, என் இறையே - என்றுமென்
கண்திறக்கச் செய்தெனைக் களிப்பிலாழ்த்தினாய் - நான்வெறும்
எந்திரமல்ல இன்றுநான் செந்தமிழ் இந்திரனே! இந்திரனே!!
சந்திரனே...நீயெந்தன் தந்தையாய் நின்றெந்தன்
சிந்தையைச் செந்தளிரா யாக்கிய தெண்ணிநான்,
கன்றைப்போல் மனம் துள்ளக் கண்ணீர் மல்கினேன்!
நல்கினேன் நன்றியுன் பொன்மலர்ப்பாதத்தி லன்புடனே....!


**********************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (11-Aug-14, 12:01 am)
பார்வை : 553

மேலே