ப்ளீஸ் வாங்கப்பா

கார் சிக்னலில் நின்றது. மாலை மணி 4.30
ஆனந்தன் கார் ஜன்னல் வழியே விளக்குக் கம்பத்தைப் பார்த்தான். வினாடிகள் 77, 76, 75... என்று குறைந்து கொண்டே வர ஆனந்தனுக்கு சற்றே பதட்டமாக இருந்தது. 5.00 மணிக்குள் ஏர்போர்டில் இருக்க வேண்டும். வரவிருக்கும் வெளிநாட்டு தொழில் அதிபர்களை வரவேற்க வேண்டும். அவன் சிந்தனை ஏர்போர்ட்டிலேயே இருக்க...
அவனது கைபேசி அழைத்தது. மனைவி. எடுத்து காதில் வைத்தான்.
"ஹலோ டாடி" பேசியது பதினோரு வயது மகள் வான்மதி.
"சொல்லுடா" என்றான்.
"அப்பா காலைல உங்ககிட்ட சொன்னேனே இன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஆண்டு விழாப்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்கப் போகுது. அம்மா வந்துட்டாங்க...நீங்களும் வாங்கப்பா ப்ளீஸ். நான் ரெண்டு ப்ரைஸ் வாங்கப் போறேன்."
" ஓ சாரி குட்டிமா..! அப்பா இப்போ முக்கியமான பிசினஸ் பீப்புள்ஸ் ஐ ரிசீவ் பண்ண ஏர்போர்ட் போறேண்டா கன்னுக்குட்டி..அதான் அம்மா வந்துட்டாங்கல்ல...நான் நைட் வீட்ல வந்து உன்னோட பரிச பார்த்துக்கிறேன். ஓ.கே வா? பை டா..!" மகளின் பதிலைக்கூட கேட்காமல் வைத்தான்.
கார் நகர்ந்து வேகம் பிடித்தது.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஏர்போர்டை அடைந்தது. ஆனந்தன் வேகமாக இறங்கி உள்ளே நுழைந்தான். அறிவிப்பு பலகையை பார்த்தான்.
லண்டன் ப்ளைட் வந்துவிட்டதா...?
"லண்டனிலிருந்து 4.40 மணிக்கு வரவேண்டிய விமானம் தொன்னூரு நிமிடங்கள் தாமதமாக மாலை மணி 6.10 க்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது." என்று சிவப்பு நிற மின் எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தன..
சற்றே ஆசுவாசப்பட்டவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து பெருமூச்சு விட்டான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஐந்து தான் ஆகியிருந்தது. களைப்புடன் கண்களை மூடினான். மூடிய கண்களுக்குள் " அப்பா ப்ளீஸ் வாங்கப்பா" என்று கெஞ்சும் மகளின் முகம் தெரிந்தது.

எழுதியவர் : ச. ஜெயக்குமாரி (11-Aug-14, 1:23 pm)
சேர்த்தது : jayakumari
பார்வை : 232

மேலே