தண்டவாளம்

இணைபிரியா
தண்டவாளம் நாம்
எப்போதும் போல்
சக்கரங்களோடு மட்டுமே
சம்பாஷித்துக் கொள்கிறோம் !

இணைந்தே சென்றாலும்
பிரிந்தே செல்கிறோம்
நமது எண்ணங்களின்
திசைகள் வெவ்வேறாயினும்
சென்றடையும்
இலக்கு ஒன்றாகிறது !

வாழ்நாள் நெடும்யாத்திரையின்
திட்டமிடலில்
தூரமாய் ரீங்கரிக்கும்
இரயிலின் ஓசை -
நிகழ்காலத்தினருகாமையில்
பேரிரைச்சலின் அதிர்வோடு
தலைதூக்கி
அனைத்தையும் நசுக்கிட
ஏனைய எதிர்பார்ப்புகள்
ரயிலின் கூவலென
காற்றில் கரைந்தே போகிறது !

நம்மில் பயணிக்கிற
பயணிகளின்
தடம் புரளா
பயணமொன்றே
குறிக்கோளாய் -
கொடும்பாரத்தின்
பேரழுத்தம் தாங்கி
நம்மீதுருளும் சக்கரங்களின்
வெப்ப நசுக்கலில்
சுவடின்றி போகின்றன
இருவருக்குமான
தவிப்பின்
ஏக்கப் பெருமூச்சுக்கள் !

பெருஞ்சுமை தாங்கிகளான
நமதனுமதி-
இறங்கும் கைகாட்டியில்
இருக்கிறதென்கிற போது
இருவருக்குமான
எதிர்ப்புகளின்
விரிசலில் ஒளிந்திருக்கும்
ஓராயிரம் கனவுகளை
கட்டை தட்டும்
சம்மட்டி சரிசெய்து
ஒன்றிணைத்து இறுக்கிச்
செல்கிறது !

எவர் எவருக்கோவான
பயணம் நம்மில் தொடர
இணைந்தே சென்றாலும்
பிரிந்தே செல்கிற
நம்மில் -
எப்போதாவது , எங்கேயாவது
என்றாவதொரு நாள்
ஆளரவமற்ற
நமதிருப்புபாதையில்
குழந்தைகளின் காதுகள்
தூர ரீங்காரத்தை
கேட்கப் பதிக்கையில்
நமக்கான இரும்புகளிலும்
பூக்கள் பூக்கத்தான்
செய்கின்றன .

எழுதியவர் : பாலா (11-Aug-14, 1:52 pm)
Tanglish : thandavaalam
பார்வை : 352

மேலே