மறுபடியும் யுத்தமிடுவோம்

சுற்றம் சூழ குடும்ப சகிதம்
கல்யாண வீட்டுக்குப்
போவதுபோல்
ஏகாந்தங்களிலான
இதய மண்டபத்துக்குள்
பரிவாரங்களோடுன் ஞாபகங்களை
அழைத்துக் கொண்டு
நுழைந்து விடுகிறது நரகம்
ஊரைச் சுற்றிப்பாக்க வந்த
சுற்றுலா பயணியைப்போல்
வாடகைக்கு அறை எடுத்து
உல்லாசமாய் பொழுதைக் கழிக்க
எனக்குள் தங்கிக் கொள்(ல்)கிறது மரணம்
நடக்க முடியாதபோதும்
தடியை ஊன்றி
தட்டுத்தடுமாறி
அடுத்த வீட்டுக்குப்போய்
குசலம் விசாரித்துத் திரும்பும்
மூதாட்டியைப்போல்
நொண்டி நொண்டி வந்து
எட்டிப்பார்த்துவிட்டு
போகிறது விரகம்
வேலை மாற்றமாகி
வேற்றூரில் பெட்டிப்
படுக்கையோடு போய் இறங்கும்
அரசு உத்தியோகத்தனைபோல
வதைக்கும் தொழில் பார்க்க
இரக்கமில்லாமல் வந்து
இறங்கி விடுகிறது துயரம்
மின் வெட்டு இல்லாத
இந்த நாட்களிலும்
நீ இல்லாமல்
பாழடைந்த மண்டபமாய் கிடக்கும்
என் மாளிகை வாசலெங்கும்
நீண்டு வளைந்து விஷம் கக்கி
நெளிந்து படமெடுத்தாடுகிறது
சோதனை கருநாகம்
பாலிலிருந்து நீரை பிரிக்கும்
உத்திகளில்
உன்னதபடுத்தப்பட்ட
அன்னப் பறவையின்
உன்னதங்களைப்போல்
என்னிலிருந்து உன்னைப்பிரிந்து
வாழ்தலிலான பிரயத்தனங்கள்
பிரயோசனமில்லாதவைகளாய்
பிரகடனப் படுத்தப்படும்
இந்த நாட்களின் முற்கள்
குத்திக் கிழிக்கும் மனசின் ஓரம்
இரகசியமாய் கசிகின்றன
ஆத்மாவின் குருதியாறுகள்
நட்சத்திரங்கள் துடைக்கப்பட்ட
இராத்திரி ஒன்றில்
விரிந்து கிடக்கும் வானத்தின்
கருமையின் நீளத்தை
அளந்து முடித்த திருப்தியோடு
விடியலை வரவு வைக்கும்
வேளைக்குப் பின்னும்
விடியாத தூரத்தில் இருக்கும்
என் வானமே .
தோத்துப்போக துணிந்துவிட்ட
சண்டைகளோடு காத்திருக்கிறேன்
சுவாசங்கள் தீர்ந்துபோகும்
காலத்திற்கு முன் உன்
ஏவுகணைகளை தூக்கிக் கொண்டு
வந்து விடு போதும்
மறுபடியும் நீயும் நானும்
யுத்தமிட்டுக்கொள்வோம்
உதடுகளோடு!
*மெய்யன் நடராஜ்