கட, உள்

உன்னுளும் என்னுளும் உயிர்த்தெழும் அரும்பொருள்
உன்னையும் என்னையும் உயிர்ப்பிலே வைத்திடும்
உன்னுளும் என்னுளும் அஃதிறந்து போனபின்
உன்னையும் என்னையும் உயிர்ப்பிலா தாக்கிடும்!

உன்னுளும் என்னுளும் உயிர்த்தெழும் அரும்பொருள்
உன்னையும் என்னையும் உயிர்ப்பிலே வைத்திடின்
உன்னுளும் என்னுளும் உள்ளொளி தோன்றிடும் - அது
உன்னுளும் என்னுளும் நல்லறம் வார்த்திடும்!

போற்றுவார் போற்றிடும் நல்லறம் யாதது?
சேற்றிலே சிறந்திடும் செம்மலர்க் கஞ்சமே!
காற்றிலே கலந்துநல் மாற்றமும் நல்கிடும்
நாற்றமே அதுஅரும் நறுமலர் நாற்றமே!

நல்லறம் அஃது நம் நெஞ்சினுள் நிறைந்திட
சொல்லெழில் வந்தது நாவினில் நிலைத்திடும்!
நல்லெழில் முகந்தரும் நாணய அகந்தரும்
நன்னலம் நிதம் தரும் நாநிலம் வணங்குமே!

இவ்வறம் நல்கிடும் அரும்பொருள் யாதென
நீவிரும் ஆவலாய் வினவினால் விடையிது,
கள்ளரும் கண்மூடி தன்னுள்ளே கடந்திட
மலர்ந்திடும் மலர்ச்சியாம் அஃதகக்கண்ணின் மலர்ச்சியாம்!


*********************************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (21-Aug-14, 11:21 am)
பார்வை : 404

மேலே